Monday, April 27, 2009

பொன்னர் சங்கர் (அண்ணன்மார் வரலாறு)

வணக்கம் நண்பர்களே கலைஞரின் பொன்னர் சங்கர் புத்தகம் படித்தேன், சேரர் சோழர் பாண்டியர் வரலாற்றையே கேள்விப் பட்ட நமக்கு அவர்களன்றி இன்னும் சில வீரத் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு சான்றாக விளங்கியது இந்த வரலாற்றுக் காவியம்.

கலைஞர் எழுதியதில் நான் படித்த முதல் புத்தகம் இது தான், ஒரு எழுத்தாளராக அவர் என் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம். முதலில் நிறைய கவிதை நடையாக தான் இருக்கும் என்று எண்ணி படிக்க தயங்கினேன் (நமக்கு அதெல்லாம் புரியாதே!!!!!!!!!!!) ஆனால் அவ்வாறு இல்லாமல் அனைவரும் படிக்கும் வகையில் மிக எளிய நடையில் தந்திருக்கிறார்.

கதை முழுவதும் கொங்குச் சீமையிலே நடைபெறுகிறது, கொங்கு வேளாள கவுண்டர்கள் மற்றும் வேட்டுவ குலமக்களின் வாழ்கையை மிக அழகாக பிரதிபலிக்கிறது. அவர்கள் வாழ்கை முறை, உயர்ந்த பண்பு அவர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்பற்றும் மரபு கட்டிக் காத்த குல பெருமை எல்லாம் மிக சிறப்பாகவும் இயல்பாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கதையில் கலைஞர் என்னவோ அந்த காலத்துக்கே நம்மை அழைத்து போக முனையவில்லை, கல்கி கதைகளில் அவர் நம்மையே அங்கு கூட்டி செல்வார் ஆனால் அப்படி ஒரு உணர்வு எனக்கு இதை படிக்கும் பொழுது ஏனோ ஏற்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் பொழுது ஏதோ ஒரு திடுக்கிடும் திருப்பம் நமக்கு காத்திருக்கிறது அது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. அதுவே கதையை வேகமாக படிக்க தூண்டும் ஒரு உந்து சக்தியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

பதவி வெறி, பண வெறி, குரோதம், சூழ்ச்சி, ஆகியவற்றால் இரு குடும்பங்களுக்குள் நடக்கும் பங்காளி சண்டையால் ஏற்படும் இழப்புகள் ஏமாற்றங்கள் அழியும் சாம்ராஜியங்கள், இதை சுற்றி தான் கதை நகர்கிறது. பொன்னர் சங்கர் இருவரும் வீரத்திற்கும் தீரத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக் காடு.

நல்ல கதை அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி.

No comments: