Saturday, October 31, 2009

விடை கொடு எங்கள் நாடே

கிபி 2100, ஜனவரி 5,

'இன்று தான் கடைசி நாள், இந்த கிரகத்தை விட்டு புறப்படுகிறோம், எங்கும்வெப்பம் தகிக்கிறது, கடந்த நூற்றாண்டில் கடலுக்குள் போன ஐம்பது சதவிதநிலப்பரப்பில் வாழ்ந்தவர்களில் கடலோடு போனவர்களை தவிர்த்த பிறர், எஞ்சிய நிலத்தில் தஞ்சம் புகுந்ததால் எங்கும் இடநெருக்கடி, கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்த விஞ்ஞானத்தின் பலனாய், இருந்த காடுகளை எல்லாம் அழித்தாகிவிட்டது, விளைவு கடந்த இருபதாண்டுகளாய் மழை இல்லை, கடல் நீரை நன்நீராக்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தோம், அதற்கும் வந்தது ஆபத்து, பூமியிலிருந்து எடுக்க முடிந்த எரிபொருள் எல்லாம் சுரண்டி செலவிட்டாயிற்று, சூரிய ஒளியை பயன்படுத்தி உண்டாக்கிகொண்டிருந்த மின்சாரம், ஓசோனில் விழுந்த ஓட்டையால், இனி சாத்தியமில்லை, வீரியம் வேண்டுமென்று கொட்டிவைத்த உரங்களும் உயிர்கொல்லிகளும் விளைவிக்கவே தகுதியற்றதாய் மண்ணை மாற்றியதால், பல நூறடி ஆழ உழுது (தோண்டி) கிடைக்கும் மண்ணை வைத்து விவசாயம் செய்தோம், கடந்த பத்தாண்டுகளாய் அவ்வப்போது பெய்யும் அமிலமழை அந்த பயிர்களையும் அழிக்க தொடங்கியதை கண்டபின் தான் முடிவெடுத்தோம், இந்த பூமியை விட்டு வேறு கிரகம் போவதென்று.


இந்த நிலை வருமென ஏற்கனவே எதிர்பார்த்திருந்தபடியால் மாற்று கிரகம் தேடும் வேலைகள் கடந்த அரை நூற்றாண்டாய் வேகமாய் நடந்துகொண்டிருக்கின்றன, இந்த சூரியக்குடும்பத்தில் இந்த பூமியை தவிர வாழ்வதற்குஏற்ற இடம் ஏதுமில்லை. நம் முன்னும் பின்னும் இருக்கும் கோள்களோ ஒன்றுகுளிரில் உறைந்து கிடக்கின்றன, அல்லது கொதித்துக்கொண்டிருக்கின்றன, அருகிலிருக்கும் நட்சத்திர மண்டலங்களை ஆராய்ந்து பார்த்ததில், சற்றேறக்குறைய இந்த பூமியை போன்ற கோள் ஒன்றை கண்டுபிடித்துவிட்டோம், நிலத்தில் நான்கில் மூன்று பங்கு நீரும், காற்றில்தேவையான அளவு ஆக்சிஜனும் உள்ளதாம். விசித்திர மிருகங்கள் பல வாழ்கின்றனவாம், இங்கு ஏற்கனவே அழித்த அனுபவம் கைகொடுத்தால்அவற்றில் பெரும்பகுதியை விண்ணிலிருந்தே தாக்கி அழித்தாகிவிட்டது.


மனிதர்களை தவிர மற்ற அனைத்தையும் இங்கேயே விட்டுசெல்வதாய் திட்டம். எல்லாவற்றையும் புதிதாய் தொடங்கலாம் என உலகத்தலைமை முடிவுசெய்துள்ளதால் இந்த ஏற்பாடு. விஞ்ஞானத்தின் கட்டற்ற வளர்ச்சியால் வந்த வினைதான் இதுவென்பதால், எந்த அறிவியல் சாதனமும் எடுத்து செல்லபோவதில்லை, இத்தனை துன்பங்கள் வந்த பின்பும் எல்லோரும் ஒன்றுசேரவிடாமல் குறுக்கே நிற்கும் மதங்களுக்கும், கடவுள்களுக்கும் கண்டிப்பாய்அனுமதி இல்லை, பழங்கதைகள் எல்லாம் மறந்து விடவும், அடுத்ததலைமுறைக்கு செல்லாமல் மறைத்துவிடவும் உத்தரவு, இயற்கையையே நம்பி, இயற்கையையே வணங்கி, இயற்கையையே
சரணடைந்து வாழத்தொடங்கவேண்டும், சுருக்கமாய் சொல்வதென்றால் மீண்டும் குகைக்கே திரும்புகிறோம். ஏழு ஆண்டுகளுக்கான உணவும், நீரும், காற்றும் மட்டுமேஅனுமதிக்கப்பட்டிருக்கும் விண்வெளி பயணத்தில், சிலர் கடவுள்களையும், கதைகளையும் மறைத்து எடுத்துவரப்போவதாய் கூறுகின்றனர்.


இன்னும் எத்தனை முறைதான் இடம் பெயர்வது? எந்த ஒரு இடத்திலும்மூவாயிரம் வருடங்களுக்கு மேல் இருந்த வழக்கமே இல்லை. செல்லுமிடத்தின்செல்வங்களையெல்லாம் அழித்து முடிப்பது, அடுத்த இடம் தேடிச்செல்வது, மனிதனால் மட்டுமே முடிந்த அற்புதச்செயல் இது. இதுநாள் வரை உணவும்உறைவிடமும் தந்து உயிர்கொடுத்த உலகே, நன்றி, விடைபெறுகிறோம்.'
இதன் பிந்தைய தேதியிட்ட பக்கங்களில் ஒன்றும் எழுதப்படவில்லை,

ஆண்ட்ரோமீடா காலக்ஸியில் உயிர் வாழ தகுதியுள்ளதாய் அறியப்பட்ட M31 இன் துணைகிரகத்தில், ஆளரவமற்றிருந்த வீடுகளில் ஒன்றில் கிடைத்த நாட்குறிப்பை படித்து முடித்து, தலைநிமிர்ந்து பார்த்தனர், ஆராய்வதற்கு பூமியிலிருந்து போன அந்த இரு விஞ்ஞானிகளும்


படித்துப் பாராட்டவோ, 'விஞ்ஞான சிறுகதை என்றாலே விண்வெளி, வேற்று கிரகம் என அசிமோவ்தனமாக தான் எழுதவேண்டுமா' என திட்டவோ சுஜாதா இல்லையே என்ற ஆதங்கத்துடன்

சங்கர்சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

Wednesday, October 28, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.


நானே வருவேன் என்ற பேய் படத்தில் புதியதாக ஒரு விஷயத்தை
செய்ய இருக்கிறார்கள் அதாவது படத்தில் பேய் வரும் காட்சிகளில்
மட்டும் தியேட்டரில் மல்லிகை வாசனை வருமாம்.இந்த படத்தின்
இயக்குனர்,நடிகர்,இசை அமைப்பாளர் மற்றும் பல அமைப்பாளர் திரு.பாபுகணேஷ் ஒரு அற்புதமான படைப்பாளி.இவரின் ஒரு படத்தை "இரவு பாடகன்" என்று நினைக்கிறேன் அந்த படத்தை பார்த்தால் மலையாள அட்டு படம் பார்த்த திருப்தி கண்டிப்பாக கிடைக்கும்.இந்த படத்தை அடிக்கடி ராஜ் டிஜிட்டலில் அடிக்கடி போடுவார்கள் பார்த்து ரசியுங்கள்.நானே வருவேன் என்ற இந்த படத்திலும் நான்கு நாயகிகளாம்,
அப்போ குஜாலுக்கு குறைவு இருக்காது என்று தெரிகிறது.
அவன் அவன் தியேட்டரில் ஏற்கனவே படம் பார்த்த
கிளுகிளுப்பில் இருப்பான், இதுல மல்லி வாசனை வேற???
ஆண்டவா காப்பாத்து... !!

******************************

பேப்பரில் கந்தசாமி படம் விளம்பரத்தை பார்த்தாலே கடுப்பாக
வருகிறது. படம் மெகா ஹிட் நூறாவது நாளை நோக்கி என்று
தினம்தோறும் டார்ச்சர் பண்றாங்க.இதில் வேறு யாரவது தத்து
எடுத்தா அதுக்கு இவங்க தான் காரணம்னு வேற விளம்பரம்.
தயவு செய்து நாளைக்கே நூறாவது நாள் அப்படின்னு போட்டு
விளம்பரத்தை நிறுத்தினா மிக்க சந்தோசம் அடைவேன்.

********************************
முக்கியமான பொது அறிவு
அடுத்த மாநிலத்தில் என்ன நடக்குது:

கிரண் நடிக்கும்?? தெலுங்கு படம் "ஹை-ஸ்கூல்".படத்தை பார்த்தால் பல பேர்க்கு மோனிக்கா பெல்லுசி நடித்த "malena" படம் நினைவுக்கு வரும். இதே போல் சில வருடங்களுக்கு முன் மனிஷா நடித்த "ஏக் சொட்டி சி லவ் ஸ்டோரி" படம் ஒன்று வந்தது அதை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் பார்த்தவனில் நானும் ஒருத்தன் கூட சில நண்பர்களும் வந்து
வெறுத்து போனார்கள்.

ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறாங்கன்னு தெரியுல. ச்சே
காசு தான் தண்டம் ஆகுது(என் காசு தான்).மார்க்கெட் போச்சுனா
கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியது தானே ஏன்
இப்படி ஒரு படம் என்று தோன்றினாலும் கிரணின் சேவை
நாட்டுக்கு தேவை.

மச்சி நெல்லூர்க்கு ஒரு டிக்கெட் போடு.....

*****************************************

ஜெட்லி டவுட்:

நயன்தாரா நடிக்கிற படம் எல்லாம் மொக்கை ஆகுதா?

இல்ல

மொக்கை படத்தில் மட்டும் நயன்தாரா அக்கா நடிக்கிறாங்களா???.

*************************************

இந்த வாரம் குமுதத்தில் படித்தது:

"பொட்டு தூணி இல்லாம..ஆயிரம் பேர் இருப்பாங்க...பொம்பளையும்
ஆம்பளையுமா சேர்ந்து நியுடா நடு ரோட்டுல நடந்து போறாங்க சார்.
கேட்டா சுதந்திரம்னு சொல்றாங்க.கிளாமர் நடிகை என்னாலயே அந்த
காட்சியை அஞ்சு நிமிஷம் நின்னு பார்க்க முடியல,உடம்பே கூச
ஆரம்பிச்சுடுது, என்ன தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரதோட
ரத்தம் தானே என் உடம்புலேயும் ஓடுது" என்று தன் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று வந்த சோனா அவர்கள் கூறியுள்ளார்.

உடம்பே கூசுதாம் .. ஐயோ ஐயோ... நம்ம ஊர்ல பத்திரிக்கையாளர்
சந்திப்பில் அம்மணி போட்டு வந்த டிரஸ்ஸை பார்த்தாலே நம்ம
கலாச்சாரம் பிச்சிக்கிட்டு வெளிய வருது என்று தெளிவாக தெரிகிறது.
அம்மணியின் கலாச்சார ரத்தம் ரொம்ப பித்தம்.!!


இது போன்ற பொது அறிவு செய்திகள் அனைவரையும் சென்று
அடைய ஒட்டு போடுவிங்க அப்படின்னு நம்புறேன்....முக்கியமா
கமெண்ட் போடுங்க...


நன்றி:
சுலேகா
பாரத்வேவ்ஸ்

அன்புடன்
ஜெட்லி சரண்

Monday, October 26, 2009

உஷாரு மாமே உஷாரு!!

உஷாரு மாமே உஷாரு!!

************************
நன்றிகள் பல:

ஒரு லட்சம் ஹிட்ஸ் கொடுத்து எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்.இந்த இடுகையை எங்களது நூறாவது
பாலோயர்க்கு சமர்ப்பணம்.


************************
"பஜார்ல உஷாரா இல்லனா நிஜார உருவிடுவானுங்க" அப்படின்னு
சென்னை பழமொழி ஒன்னு இருக்கு அது நூறு சதவிதம் உண்மை.
இந்த இடுகையில் சென்னையில் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்
என்பதை பற்றி சில விஷயத்தை பார்ப்போம், பின்வரும் அனைத்தும்
பேப்பரில் படித்ததும் மற்றும் சொந்த அனுபவம் மட்டுமே.
இன்றைய ஹாட் இது தான்:

உங்களுக்கு பணம் தரவேண்டிய நபர் அல்லது தெரியாத நபரிடம் இருந்து பணத்தை பெறும்போது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாளாக இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.கள்ள நோட்டுக்கள் தாராள புழக்கத்தில் இருப்பது தான் காரணம்.பல பெட்ரோல் பங்கில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்குவதில்லை.அதனால் கொஞ்சம் உஷாரா இருங்கோ மக்களே......


போனஸ் செய்தி:

நேற்று ஒருத்தன் கடைக்கு வந்து அரை லிட்டர் பெப்சிக்கு
ஆயிரம் ரூபாய் நீட்டறான், இன்னொருத்தன் ஆயிரம் ரூபாய்
நீட்டி அரை கிலோ சர்க்கரை கேக்குறான்......

பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடை வீதி :

தனிநபர்கள் ஏமாற்றும் விதம் :

நீங்க பஸ் ஸ்டாண்ட்ல பஸ்க்கு காத்திருக்கும் நேரத்தில் ஒரு
டிப் டாப் ஆசாமி உங்களிடம் வந்து "பர்ஸ் மிஸ் பண்ணிட்டேன்
ஊருக்கு போக காசில்ல" என்று நம்மை உருகும் அளவுக்கு சோகமாக
பேசுவார், அது அல்லாமல் தான் ஊர் போய் சென்றவுடன் மணிஆர்டர் செய்வதாக உங்கள் வீடு முகவரி கேட்பார்.நீங்கள் பணம் கொடுக்காமல் நகர்ந்து சென்றாலே நல்லது, பணம் கொடுத்து வீட்டு முகவரியும் கொடுத்தால் மொத்தமாக அபேஸ் செய்து விடுவார்கள்.

சிலர் பேசுவது உண்மையில் நெஞ்சை தொடுவது போல் இருக்கும்,
உண்மையிலே சில பேர் ஊருக்கு போக காசில்லாமல் இருப்பார்கள்
ஏமாற்று பேர்வழி என்று இதனால் அவர்களுக்கும் காசு கிடைக்காமல்
போகும். இது போல் காசு கேட்பவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று எங்கள் புலனாய்வு குழு கூறுகிறது.

குடும்பமாக ஏமாற்றும் விதம்:

இதுவும் மேல கூறியது போலதான்.என்ன இவர்கள் கைகுழந்தை
மற்றும் பொண்டாட்டியுடன் ஏமாற்றுவார்கள். இவர்களும் ஊருக்கு
போக காசில்லை என்று தான் கேட்பார்கள்.சிறு பிள்ளைகள் இருந்தால் ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கேட்பார்கள்,பால் வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பால் வாங்க பணம் கொடுப்பதில் தப்பில்லை ஆனால் அவர்கள் பிச்சை மற்றும் ஏமாற்றுவதை தட்டி கொடுத்த மாதிரி ஆகிவிடும். நாட்டுல வேலைக்கு ஆள் கிடைக்காம நிறைய பேர் கஷ்டப்படுறாங்க!!.

வங்கியின் வெளியே :

வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும் போது யாரவது ஒரு சிறுவன்
"சார் பத்து ரூபாய் கிழே விழுந்துடுச்சு" என்பான். நீங்கள் குனிந்து எடுத்தால் உங்கள் பை அபேஸ் செய்து பைக்கில் தப்பி விடுவார்கள். இந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்துள்ளேன்...ஆனால் பைக் ஆசாமியை யாராலும் பிடிக்க முடியவில்லை.ஜஸ்ட் ஒரு செகண்ட் தான் ஆள் எஸ்கேப்.


இது தான் ரொம்ப முக்கியம்:

நீங்க கார்லயோ இல்ல பைக்லயோ போகும் போது ஒருத்தர் உங்களை வழிமறைக்கலாம், உங்கள் வாகனத்தின் சாவியை எடுக்கலாம், உங்களை மரியாதை குறைவாக பேசலாம், அவங்க கிட்ட தூப்பாக்கி கூட இருக்கலாம், அவங்க கும்பலாவோ ரெண்டு பேர் ஆகாவோ கூட இருக்கலாம்,நீங்க காசில்லை அப்படின்னு கெஞ்சின கூட உங்களை விடமாட்டங்க,உங்களை
மடக்கி விட்டாலே நீங்கள் கண்டிப்பாக குறைந்தபட்சம் அம்பது ரூபாயாவது தண்டம் ஆழாமல் போக முடியாது.நாம ஒன்னும் பண்ண முடியாது அவர்கள் தான் நம் ஊர் டிராபிக் போலீஸ். இவர்களிடம் தப்பிக்க ஒரே வழி எங்கே போனாலும் நடந்து அல்லது அரசு பேருந்தில் செல்ல வேண்டும்.


இது போல் உங்களுக்கோ உங்கள் நண்பர்க்கோ ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....

முடிஞ்ச ஓட்டும் போடுங்க....

நன்றி
ஜெட்லி சரண்.

Sunday, October 25, 2009

காமம் - ஒரு பரிசோதனை - சில பார்வைகள் - 2

இரண்டாம் பாகத்தை சற்று வேறுவிதமாய் தான் எழுத இருந்தேன், அதை மாற்றியது முதல் பாகத்தை வலையேற்றிய சில மணி நேரங்களில் தோழி ஒருவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. அவர் மூச்சு விடாமல் பேசிய அந்த பதினைந்து நிமிடங்களின் சுருக்கம் இதோ,

* காமம் என்பது இயல்பான ஒன்று அதனை இப்படி எழுதிக் காட்டவேண்டிய அவசியம் இல்லை
* காமம் என்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டிய விஷயம், அதனை பொது இடத்தில் எதிர்கொள்ளும் சராசரி மனிதனின் எதிர்வினை அருவெருப்பாகவோ அசட்டு சிரிப்பாகவோ தான் இருக்கும் (இருக்க வேண்டும்)
* மகுடேஸ்வரனுக்கும், உனக்கும் (சங்கராகிய எனக்கு) இது புதிதாய் தோன்ற காரணம் உன் பார்வையில் இருக்கும் குறைதான் (வக்கிரம் என்று நேரடியாய் சொல்லவில்லை எனினும்)
* மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன் என்று காட்டிக்கொள்ளவே இதை எழுதி இருக்கிறாய்,
* காதல் என்பது காமம் மட்டுமல்ல, காமத்தையும் தாண்டி வேறொன்று இருந்தால் தான் அது காதல், காமம் மட்டுமே என்றால் நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்
* கடைசியாக, இந்த காதல், பாசம், உறவுகள், நாகரிகம் அனைத்தும் வெளிவேஷங்கள் தான், உரித்துப் பார்த்தால் கடைசியில் பல்லிளிப்பது சுயநலம் மட்டும் தான். இதை உணராமலேயே சந்தோஷமாய் தான் வாழ்ந்து வருகிறோம், அப்படியே வாழலாமே

இந்த பேச்சுக்கு (சொற்பொழிவுக்கு) பின், மிக அவசியம் என்றாலொழிய, என் கருத்துக்களை மறுப்பவர்களோடு விவாதம் செய்வதோ, அவர்கள் கருத்துக்களை விமர்சிப்பதோ என் இயல்பாய் இல்லாத காரணத்தால், சில வாக்கியங்களே பேசி அழைப்பை துண்டித்தேன்.

அதன் பின் யோசித்தபோது தோன்றிய சில காரணங்கள், தோழி நன்கு படித்தவர் (வழக்கறிஞர்), சென்னை மாநகரில் நவநாகரிக சூழலில் பிறந்து வளர்ந்தவர், பரந்த வாசிப்பு அனுபவம் உள்ளவர், அதனால் காமத்தை இயல்பாக பார்க்கும் மனமுதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் விட, அக்கட்டுரையும், கவிதைகள் அனைத்தும் ஓர் ஆணின் பார்வையில் அமைந்திருப்பதும் முக்கிய காரணம், எனக்கு பெண்களின் மனவுலகம் பற்றி தெரியாது, ஆண்களின் எண்ணவோட்டங்கள் பற்றிய புரிதலிலேயே பல சந்தேகங்கள் உண்டு. சுருக்கமாய் சொல்வதென்றால் இவையனைத்தும் என் தனிப்பட்ட கருதுக்களன்றி வேறில்லை.

காதலும் காமமும் வேறில்லை என்ற என் நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை. இதை காதலில் இருந்தபோது 'உன்னை என்னிடம் ஈர்ப்பது எது' எனக் கேட்ட என் காதலியிடமும் கூறி இருக்கிறேன். 'அப்படியென்றால் காமம் தீர்ந்தபின் என்னை விட்டு சென்று விடுவாயா' என்ற அடுத்த கேள்விக்கு நான் சொன்ன பதில் 'காமம் தீரும் தினம் என் கடைசி தினமாகத்தான்இருக்கும்'

ஆனால் இதுபோன்ற சூழலில் வளரும் எல்லோரும் தோழியை போன்ற மனமுதிர்வுடன் இருப்பார்கள் என கூற இயலாது, செக்ஸ் கல்வி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது "என் குழந்தைகளுக்கு, அவர்கள் பதின்வயதில் நிச்சயமாக காமத்தை கற்பிப்பேன்" என நான் கூறியதற்கு "நீயும் உன் மனைவியும் லைவ் டெமோ செய்து காட்டுவீர்களா?" என நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது, நண்பரின் தந்தை ஒரு மருத்துவர், தருமமிகு சென்னையில் நவநாகரிக சூழலில் உயர்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவருடைய புரிதலே 'செக்ஸ் கல்வி என்றால் உடலுறவு மட்டும்தான்' என்ற அளவில் இருக்கும்போது கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த என் போன்றவர்களின் கதியை என்ன சொல்ல,

தூர்தர்ஷனும், தினமலர், தினத்தந்தியும் மட்டுமே சாத்தியமான கிராமத்தில் (இன்று வரை எங்கள் ஊரில் சாட்டிலைட் சானல் இல்லை, இது பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன்) கழிந்த பதினேழு வருடங்களில் காமத்தை / உடலை அறிய சந்தர்ப்பங்களே ஏற்பட்டதில்லை, போதாதற்கு உயர்நிலை வகுப்புகளில் 'படிக்கிற புள்ள' என்ற பட்டத்தால், நண்பர்களின் கலந்துரையாடல்களிலும், கடைசி வரிசை கதை வாசிப்புகளிலும் எனக்கு இடமில்லாமல் போனது. வாசிக்க கிடைத்த வாரமலரும், குமுதமும் உதட்டு முத்ததிற்கு கொடுத்த முக்கியத்துவம், குழந்தை பிறப்புக்கே அதுதான் காரணம் என்ற எண்ணத்திலேயே பதின்வயதுகளை கழிக்க செய்தது,

விந்துவெனும் விந்தை இருப்பதே தெரியாததாய் வினோத வளர்இளம் பருவத்தில், சென்னை வாழ்க்கை உண்டாக்கிய தலைகீழ் மாற்றங்கள் குறித்து அடுத்த பாகத்தில் சொல்கிறேன்

முடிக்கும் முன், மீண்டும் மகுடேஸ்வரன்

உறவு சொல்லி அழைப்பது
பண்பாடாக இருக்கிறது

ஏன்,
எளிமையாக இல்லை
உறவுக்கு அழைப்பதுநன்றி
சங்கர்

Friday, October 23, 2009

சபலம்.

சபலம்.

"மச்சான் எத்தனை நாள்டா வீட்டிலியே....,," என்று இழுத்தான் சுரேஷ்.

"டேய்! வெளியே எல்லாம் வேணாம்டா, கண்ட கண்ட நோயெல்லாம்
வருதாம்" என்றான் அமுதன்.

"என்னடா டெய்லியும் ஒரே இதை பண்ண போர் அடிக்கும்டா,
வெளியே வா விதம்விதமா இருக்கும்" என்று அமுதனை
ஆசைப்படுத்தினான் சுரேஷ்.

"விதம்விதமா இருக்கும்,உள்ளே போகும் போது நல்லா தான் இருக்கும்,ஆனா எத்தனை பேர் பண்ணிட்டு போன எச்சையோ!"
என்று சுரேஷை எச்சரித்தான் அமுதன்.

"மச்சி டி.நகர்ல குஜராத்தி ஒன்னு இருக்குடா, ரேட் 600 ரூபாய் தான்டா"என்று ரேட்டை சொல்ல ஆரம்பித்தான் சுரேஷ்.

அமுதன் உதட்டை பிதுக்கினான்.

"அப்படி நம்ம ஊரு வேணாம்னா, அடையார்ல சைனீஸ் எப்படிடா?
ரேட் கொஞ்சம் அதிகம்டா ஆயிரம் ரூபாய்" அமுதனை
பொருட்படுத்தமால் நச்சரித்தான் சுரேஷ்.

"வேணாம் மச்சான், என் பொண்டாட்டி அவுங்க அப்பா வீட்டுக்கு போன டைம்ல என்னை யாரவது வெளிய பார்த்து அவகிட்ட சொன்னாங்க வை அவ்வளவுதான்"என்றான் பயத்தில் அமுதன்.


"ரைட் இதான் மேட்டர்ஆ!! கால் பண்ணா item வீட்டுக்கே வர போகுது....." சுரேஷ் வாய் மூடுவதற்க்குள்

"மச்சி அக்கம் பக்கத்தில் எல்லாம் ஒரு மாதிரி பார்ப்பாங்காட"
சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டு இருந்த அமுதன் சொன்னான்.

"சைனீஸ் item வாசலுக்கு வந்த உடனே கதவை மூடிடாலம் மச்சி, அப்புறம் யாருக்கு தெரிய போகுது?" என்று கிளுகிளுப்பில் கூறினான் சுரேஷ்.

"மச்சான் அந்த டைம்ல யாரவது கதவை தட்டின பிரச்சனை தாண்ட,பக்கத்தில் எல்லாம் ஐயர் ஆளுங்கடா அப்புறம் உடனே வீட்டை காலி பண்ண சொல்வாங்க"வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினான் அமுதன்.


"டேய் டோமர் !!நீயும் ஒரு வாரமா உன் பொண்டாட்டி வீட்ல இல்லாம வெறும் சப்பாத்தி, தோசை மட்டும் சாப்புடுற.சரி சைனீஸ் ஹோட்டல்க்கு போலாம்னு கூப்பிட்டா ரொம்ப
ஓவர்ஆ பண்ற. நீ சப்பாத்தியை சாப்பிட்டு தொலை. நான்
குஜராத்தி ஹோட்டல்க்கு போறேன். இன்னொரு தடவை நான் உன்னை வெளியே சாப்பிட கூப்பிட்டா என்னை செருப்பால அடிடா" என்று கோபத்தில் குஜராத்தி ஹோட்டலை நோக்கி நடந்தான் சுரேஷ்.

டிஸ்கி: இவ்ளோ நேரம் இவங்க பேசினது வெளியே போய் சாப்பிடறத பத்தி மட்டும் தான், வேணும்னா முதலில் இருந்து படிச்சு பாருங்க.

மக்களே கதை பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க, கமெண்ட் போட்ட கொஞ்சம் உற்சாகமா இருக்கும்.பார்த்து பண்ணுங்க.


உங்கள்
ஜெட்லி சரண்.

Monday, October 19, 2009

மச்சான்ஸ் நமீதாவின் ஜகன்மோகினி

நமீதாவின் ஜகன்மோகினி


"ஜெய் ஜ்வாலமுகி" டென்ஷன் ஆவாதிங்க இந்த வசனத்தை தான்
அடிக்கடி கோட்டா ஸ்ரீனிவாசன் படத்தில் பயன்ப்படுத்துவார்.
பல தியாகங்கள் பண்ணி தான் இந்த படத்தை நான் பார்த்தேன்.
முக்கியமாக என் ஆர்குட் நண்பர்கள் கேட்டதற்கு இணங்க இந்த
படத்தை பார்த்தேன் என்றே சொல்லலாம்.என்ன பண்றது நாப்பது
ரூபாய் இன்று தண்டம் ஆழ வேண்டியது என்று எழுதியுள்ளது
அதை யாரால் தடுக்க முடியும்.

ஜெயமாலினி நடித்து திறமை காட்டிய ஜெகன்மோகினி படத்தை
திருப்பி பார்த்தால் கூட இந்த படத்திற்கு பக்கத்தில் கூட வர முடியாது. ஜெயமாலினி படத்தில் உள்ள கிக் கூட இதில் இல்லை.
நம்ம மச்சான்ஸ் நமீதா திறமை காட்டியும் காட்டாமலும் நம்மை
நோகடிக்கிறார்.

நிஜம் ஜெகன்மோகினியில் நடித்த ராஜாதான் இந்த படத்தில் மன்னராக வருகிறார், இவரின் மகன் நமீதாவுடன் காதல் கொண்டது
பிடிக்காமல் நமீதாவை தீர்த்து கட்டுகிறார்.இதுக்கு மேல கதை
வேணுமா??. "ஜெய் ஜ்வாலமுகி" என்று மந்திரவாதியாக வருகிறார்
கோட்டா ஸ்ரீனிவாசன்.என்ன கொடுமை பாருங்க மன்னர் மட்டும்
நூப்பது வருஷம் முன்னாடி ஜெயமாலினி கூட டூயட் பாடுவாராம்,
ஆன அவர் புள்ளை டூயட் பாடுன எரியுது.


வடிவேல், ஏன் வாராரு எதுக்கு வாராருனு இயக்குனருக்கே வெளிச்சம்.வெண்ணிற ஆடை மூர்த்தி எப்போது போல் இரட்டை அர்த்த வசனங்களில் பிச்சு உதறுகிறார்.அப்புறம் நம்ம நிலா அக்கா
வாரங்க, இவங்களை பத்தி சொல்ல பெருசா இரண்டு விஷயம் இருக்கு. அற்புதமான நடிப்பு காதல் கொள்ளும் பார்வை அப்படின்னு
நான் சொன்ன நீங்க நம்பவா போறீங்க??.

அடுத்தது முக்கியமா இசை, ஏன் இளையராஜா வர வர இந்த
மாதிரி மொக்கை படத்துக்கு மொக்கையா மியூசிக் பண்றாரு அப்படின்னு தெரியுல.ஆன ஒன்னு மட்டும் தெரியுது இளையராஜா
அவர்கள் ராஜா காலத்து படத்துக்கு 90's டைப் மியூசிக் போட்டுட்டு
இருக்காரு.

தியேட்டர் நொறுக்ஸ்:

# என்னை கொடுமை பார்த்திங்களா, தியேட்டர் நொறுக்க்ஸ் எழுதலாம்னு பார்த்தா தியேட்டர்ல ஆளே இல்ல.

# மிச்சபடி பாப்கார்ன் ரொம்ப ஆறிபோய் இருந்தது.(ஒரு
வேளை முந்தா நேத்து போட்டதோ).

#"ஜெய் ஜ்வாலமுகி" ஜெட்லியை காப்பாத்து என்று வேண்டி கொள்ளுங்கள் .


ஜெட்லி பஞ்ச்:

மொக்கை படம்னு தெரிஞ்சு போறது என் தப்பில்ல,
பத்து பேர் வந்தாலும் டிக்கெட் தாரன் பாருங்க அவன் தப்பு.

இந்த விமர்சனம் எல்லோரும் படிக்க ஒட்டு போடுங்க...

நன்றி: cinesnacks


அன்புடன்
ஜெட்லி சரண்.

Saturday, October 17, 2009

ஆதவன் - என் விமர்சனம்.

ஆதவன் - என் விமர்சனம்.

நான் ஆதவன் படம் பார்த்த அனுபவத்தை, ஆதவன் படம் பார்க்காத என் நண்பர்கள் குப்பன் மற்றும் சுப்பனிடம் பகிர்ந்தது இங்கே.....


குப்பன் : என்ன ஜெட்லி காலையிலேயே படமா?

ஜெட்லி; ஆமாம் மச்சி...காலையில ஏழு மணிக்கு எழுந்தேன், சும்மா மாயாஜால் இணையத்தை பார்த்தேன் எட்டு மணி ஷோ ப்ரீயா
இருந்தது, ஒடனே கிளம்பிட்டேன்.

சுப்பன்:அடப்பாவி! அங்கே ப்ளாக் டிக்கெட் ரேட்ல விப்பாங்க!

ஜெட்லி: சூர்யா, படம்னா சும்மாவா...

சுப்பன்: படம் எப்படி இருந்தது மச்சி?

ஜெட்லி: பராவாயில்லைடா, ஆஹா ஒஹோனு சொல்ல முடியாது.

குப்பன்:என்னடா இப்படி சொல்ற...

ஜெட்லி: போர் அடிக்காம போகுது,சில காட்சிகளில் அலுப்பு சலிப்பு
அடிக்குது மச்சி.

சுப்பன்: என்னடா கதை?

ஜெட்லி: போடறது தான் மச்சி கதை

குப்பன்: டேய்...

ஜெட்லி: அட கெட்ட எண்ணம் புடிச்சவனே, நான் சூரியாவோட
கேரக்டர் பத்தி சொன்னேன்டா...

குப்பன்: நீ என்ன சொல்ற, ஒன்னும் புரியுல மச்சி!

ஜெட்லி: அடேய் சூர்யா வந்து ஒரு கூலிப்படை கொலையாளி
ஆளை போட்டு தள்றது மட்டும் தான் அவர் வேலை, புரிஞ்சுதா?

சுப்பன்:புரியுது..இங்கிலீஷ் படம் வான்டட் மாதிரியா?

ஜெட்லி: சுப்பா கலக்குற...அந்த படத்தின் சில காட்சிகள் கூட
முதலில் வரும் மச்சி.

சுப்பன்: சூர்யா பைட் எப்படி மச்சி

ஜெட்லி: நாம கம்ப்யூட்டர்ல ஹல்க் கேம்ல அந்த பச்சை மனிதன்
பில்டிங் பில்டிங்கா பறப்பாரே அந்த மாதிரி சூர்யா பறக்கிறார்டா...

குப்பன்: அப்போ பைட் செம காமெடி..ஆமா பத்து வயசு பையனா சூரியா வராரமே எப்படி டா?

ஜெட்லி: கிராபிக்ஸ் தான்டா.பெரிய குறை சொல்ல முடியாது.
நல்லா பண்ணி இருக்காங்க.
சுப்பன்: வடிவேல் காமெடி நல்லா இருக்கா இல்ல கந்தசாமி மாதிரி
தானா?

ஜெட்லி: சீ.. இதுல உண்மையிலே சில சீன்ல சிரிக்க வைக்கிறார்டா.

குப்பன்: நயந்தாரா எப்படி திறமையை காமிச்சி இருக்காங்க..

ஜெட்லி: ரொம்ப இல்ல கொஞ்சம் தான், என்ன மறுபடியும் ஒரு
லூசு கதாநாயகி.

குப்பன்: நயந்தாரா இதுல லூசா?

ஜெட்லி: இல்லப்பா அவங்க கேரக்டர் பத்தி சொன்னேன்,எதை
சொன்னாலும் நம்புறாங்க.(நானும் தான் டைரக்டர் படத்தில்
சொன்னதெல்லாம் நம்பினேன்).

சுப்பன்: சரி, கடைசில என்ன சொல்ற படம் பார்க்கலாமா?

ஜெட்லி: சூர்யாவுக்காக ஒரு வாட்டி பாக்கலாம்.அப்புறம் இந்த
லாஜிக் அப்படின்னு ஒன்னு சொல்வாங்களே அதெல்லாம் படத்தில்
தேடக்கூடாது.இது வழக்கான ரவிக்குமார் படம், அதனால அது
எப்படி இது எப்படினு கேள்வி கேக்ககூடாது. சூர்யாவின் பிளாஷ்பேக்
காட்சிகள் நம்பமுடியுல.கடைசியில் பெப்சி விஜயன் உண்மையை
கூறும் காட்சிகள் காதில் முழம் முழமாக பூ வைத்த மாதிரி
இருக்கும்.

குப்பன்: அப்போ தீபாவளி ரேஸ்சில் முந்துவது யாரு?

ஜெட்லி: விறுவிறுப்பில் பேராண்மை வசூலில் ஆதவன்.வர்ட்டா..


இந்த விமர்சனம் அனைவரையும் சேர ஒட்டு போடவும் முடிந்தால் கமெண்ட் செய்யவும்.

உங்கள்
ஜெட்லி சரண்.

Friday, October 16, 2009

பேராண்மை -- என் விமர்சனம்.

பேராண்மை -- என் விமர்சனம்.

முன்னுரை: பல பேர் பல விதமாக படம் பார்த்தாலும்,நான்
பார்க்கும் விதம் ஒரு பாமரனை போல தான் என்பதை இங்கு

தெரிவித்து கொள்கிறேன்.எனக்கு தேவை இரண்டரை மணி
நேரம் டைம் பாஸ் அவ்வளவு தான்.படத்தை பார்த்து யாரும்
பாடம் கற்று கொள்ள போவதும் இல்லை, கெட்டு போவதும்
இல்லை.

பேராண்மை, இந்த படத்தை எடுத்த இயக்குனர் ஜனநாதன் மற்றும்
நடித்த ஜெயம் ரவியை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.
இது வழக்கமான தமிழ் படம் இல்லை.ஒளிப்பதிவாளர் தன் பங்கை
சிறப்பாக செய்துள்ளார்
.


இந்தியாவின் செயற்கைகோளை அழிக்க வரும் அந்நிய சக்திகளிடம்
இருந்து ஜெயம் ரவியும் ஐந்து பெண்களும் சண்டைபோடுவதே கதை
என்று நினைத்தால்?? அது மட்டுமல்ல கதை, இயக்குனர் அவர்கள்
பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் மற்றும் அவர்கள் படும்
இன்னல்களையும் முதல் பாதியில் மிக நேர்த்தியாகவும் தைரியமாகவும் சொல்லி இருக்கிறார்.

ஜெயம் ரவியை இந்த படம் கண்டிப்பாக அடுத்த கட்டத்துக்கு எடுத்து
கொண்டு போகும்.ஆபிசராக வரும் ரவியின் இயல்பான மற்றும் விறைப்பான நடிப்பும் கலக்கல்.ஐந்து பெண்கள் வருகிறார்கள் அதில்
எனக்கு தெரிந்த முகம் ரெண்டு சரண்யா மற்றும் அதிசியா.
முதல் பாதியில் இந்த ஐந்து பெண்கள் அடிக்கும் கூத்து செம
ரகளை.வடிவேலு சில காட்சிகள் வந்தாலும் கலகலக்க வைக்கிறார்.
ஊர்வசி மற்றும் பொன்வண்ணன் அவர்களின் பங்கை சிறப்பாக
செய்துள்ளனர்.

ரவி பழங்குடி இனத்தில் இருந்து வந்த ஆபிசர் என்பதால் பொன்வண்ணன் அவரை அடிக்கடி ஜாதியின் பெயரை குறிப்பிட்டு பெசுவுது, மற்றும் அந்த ஐந்து பெண்கள் அவனுக்கு கீழ் நாங்கள் படிக்க முடியாது என்று கூறும்
காரணம் என்று படத்தில் ஏகப்பட்ட சென்சார் செய்து ஊமை வசனங்கள் .படத்தின் ஆரம்பத்திலே
இது போல் வந்துவிடுவதால் நமக்கும் ஒரு சலிப்பு ஏற்பட்டு
விடுகிறது.


ஏற்கனவே சொன்னது போல் படத்தின் பாடல்கள் சொல்லி கொள்ளும் படி இல்லை.காட்டில் நடக்கும் சண்டை காட்சிகள் அனைத்தும் நம்மை சீட் நூனியில் உட்கார வைக்கும். காட்டில் நடக்கும் புது ரக கன்கள் மற்றும் ஏவுகணைகளை ரவி மற்றும் பெண்கள் வெடிக்கும் போது ஏதோ தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது போல் இருந்தது இவங்க எங்கயோ சுடுறாங்க குண்டு எங்கயோ வெடிக்குது.

படத்தின் பலமே வசனம் தான். வடிவேலு கோபத்தில் பழங்குடி மக்களை பார்த்து ஒரு வசனம் பேசுவர் "இனிமேலாவது நீங்க விளைய வெச்சத விக்காம, நீங்களும் உங்க புள்ளைங்களும் சாப்பிடுங்க" என்பார்.பொன்வண்ணன் இதில் கொஞ்ச வில்லத்தனமான வேடமா இல்லை கேனதனமனா வேடமா என்று நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளுங்கள் ..மொத்தத்தில் தமிழில் ஒரு அட்வென்ச்சர் திரைப்படம் அனைவரும் பார்த்து மகிழுங்கள்.வாருங்கள், பேராண்மை போன்ற படங்களை வரவேற்போம்.


தியேட்டர் நொறுக்ஸ்:

#நாங்கள் வூட்லண்ட்ஸ் தியேட்டருக்கு இணையத்தில் புக்
செய்து சென்றோம், ஆன பாருங்க அங்க படமே புல் ஆகலை.
ஏன் மோசமான ஒபெநிங் என்று தெரியவில்லை.

#படத்தில் அந்த ஐந்து பெண்களும் ரெண்டு இடத்தில் டபுள்
மீனிங் வசனம் வசனம் பேசுவார்கள்...தியேட்டரில் பயங்கர
கத்தல்...(உ :சார் இவ பாம்பே பார்த்தது இல்லையாம்...)

# காட்டுக்குள் போனதும் ரவி ஒரு பொந்து மரத்தை காட்டி இங்கே
நாம் ஒளிந்து கொண்டு தாக்கலாம் என்பார்.ஆனால் என்
பக்கத்துக்கு இருக்கை குடிமகன் பேசியே வசனம் "மச்சான்
அந்த பொந்து மரத்திலே உள்ளே உட்கார்ந்து சரக்கு அடிச்சா
சூப்பர் ஆக இருக்கும் டா".

இந்த விமர்சனம் அனைவரும் படிக்க ஒட்டு போடவும் முடிஞ்சா
கமெண்ட் போடவும்


மொட்டை தலையுடன்
ஜெட்லி சரண்.

Tuesday, October 13, 2009

தாடி வைத்திருந்தவனின் டைரியிலிருந்து

தாடி வைத்திருந்தவனின் டைரியிலிருந்துநான் கடந்த மூணு வாரங்களாய் ஷேவ் செய்யாமல் சுற்றி வந்தேன், கொஞ்சம் தாடி அதிகமாவே வளந்துவிட்டது.ஷேவ் செய்யாததற்கு
காரணம் என் அம்மாவின் வேண்டுதல்.திருப்பதி போய் முடி
எடுக்க வேண்டுமாம் அப்புறம் திருப்பதி போனால் வாழ்க்கையில்
திருப்பம் வருமாம், ரைட்,அப்படின்னு போய்ட்டு முடி எடுத்துட்டு வந்துட்டேன்.

தாடி வைத்திருப்பதில் என்ன பிரச்சனை என்று கேக்குறிங்களா??
என் நண்பர்(கொஞ்சம் வயதானவர்) ஒருவர் என்னை பார்த்து
"என்னப்பா ஒரு தலை ராகம் மாதிரி சுத்திட்டு திரியிற?"
என்று கேட்டார்.ஆமாம்,நம்மில் தாடி என்றவுடன் நினைவுக்கு
வரும் முதல் ஆள் டி.ஆர் மட்டுமே.

ஆமாம் அது ஏன்ங்க காதல் தோல்வி அடைஞ்சா மட்டும் தான்
தாடி வளக்குனுமா?.மேலும் சில பேர் என்னை பார்த்து "என்ன டல்லா இருக்கீங்க" என்று கேட்டனர். தாடி ஏன் நமக்கு சோகத்தை
மட்டுமே நினைவுப்படுத்துகிறது???.

*************************
டைரியின் அடுத்த பக்கம்

ஆஸ்திரேலியா நாட்டு பிரஜை பாலா கடந்த வாரம் சென்னை
வந்திருந்தார்.பின்பு நான்,பாலா,ஜெய்சன் ஹோட்டலில் சாப்பிட வெளியே சென்றோம்.நண்பர் கேசவன் அவர்கள் சிறிது நேரம்
கழித்து வந்தார் அப்போது கேசவன் நான் தாடி வைத்திருப்பதை பார்த்து

"என்னடா பருத்தி வீரன் மாதிரி தாடி வளத்துட்டு இருக்கிற"
என்றார்.

"ஆஹா நம்மளை கார்த்தி ரேஞ்க்கு பீல் பண்ணி பேசுறானே"
என்று என் மனம் நன்னாரி சர்பத் சாப்பிட்டது போல் குளிர்ந்து.

இதை பொறுக்க முடியாமல் பாலா அவர்கள் உள்ளே பூந்து கேசவனை பார்த்து "நான் கூட ரொம்ப நேரமா இந்த மூஞ்சியை எங்கயோ பார்த்த மாதிரி இருந்துது யோசிச்சேன் மச்சி, பருத்திவீரன்னு நீ சொன்ன உடனே தான் ஞாபகம் வந்துச்சு"

என்னை பார்த்து பாலா "அப்படியே பருத்திவீரன்ல வர
செவ்வாழை மாதிரி இருக்குற மச்சி" என்றார்.

ரைட் உண்மைய தானே சொல்றான் அப்படின்னு நானும் ப்ரீயா
விட்டுடேன்.செவ்வாழையாக இருந்தால் என்ன பருத்தி வீரனாக
இருந்தால் என்ன தாடி எல்லாம் ஒன்னுதானே.

***************************
பழைய டைரி பக்கத்திலிருந்து

நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது அப்போது வந்த புது
ஆசிரியர் எங்கள் கவனத்தை ஈர்த்தார்.எங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது அவரின் ட்ரிம் தாடி.அவர் தான் எங்கள்
பள்ளியின் முதல் தாடி வைத்த ஆசிரியர் ஆளும் செம ஸ்மார்ட்
ஆக இருப்பார்.அவர் தாடி வைத்திருக்கம் ரகசியம் அறிய நானும் என் நண்பன் அஜிதனும் அவரிடம் ஒரு டவுட் என்று கேள்வி கேட்டோம் "என்ன சார் எதுவும் லவ் பெயிலியரா?"

"என்னப்பா கேள்வி இது லவ் பெயிலியர் ஆனா தான் தாடி
வைக்கணுமா? எனக்கு பிடிச்சிருக்கு வச்சிரிக்கேன்" என்றார்.

பன்னிரெண்டாவது வரை அவருடனே பயணித்தோம், அவர் பாடம்
நடத்தும் விதம் எங்களை ஈர்த்தது.சில நாட்கள் தாடியை எடுத்து
விடுவார்.அவர் தாடியை எடுத்து விட்டு பள்ளிக்கு வரும் நாட்களில்
"எங்கே சார் உங்க அண்ணனை காணோம்" என்று கிண்டல் செய்வோம்.

பள்ளி முடித்து கல்லூரி சென்றவுடன் அவரை பார்ப்பது இல்லை.
ஆனால் அப்போ அப்போ நண்பர்களிடம் அவர் இன்னும் அந்த
பள்ளியில் தான் இருக்கிறாரா என்று தெரிந்து வைத்துகொள்வேன்.
ஒரு ரெண்டு மூணு தடவை வங்கிக்கு வரும் போது நான் அவரை
பார்த்தால் சிறிது நேரம் பேசுவோம்.

அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று நண்பர்கள் மூலம்
அறிந்து கொண்டேன்.கல்யாணம் ஆன பின் அவர் தாடி வளர்ப்பதில்லை என்று அவர் ஒரு நாள் என் கடைக்கு வரும் பொழுது புரிந்து கொண்டேன்.

(நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா???எங்க சார் கல்யாணம் ஆன பின் தாடி வைத்து கொள்ளவில்லை அப்போ கல்யாணம் சோகமா? இல்லை சந்தோசமா?) (பி.கு: நான் என்ன சொல்ல வரேன்னு எனக்கே
புரியல!!!!)
*******************************
போனஸ் செய்தி:

தாடி வைத்திருந்த சில சாதனை மனிதர்கள்:

லியோ டோல்ஸ்டாய்

அலெக்சாண்டர் கிரகாம்பெல்

சே

மற்றும்

ஜெட்லி சரண்(வருங்காலம் சொல்லும்)

இதை போல் நீங்கள் தாடி வளர்த்த சம்பவங்கள் இருந்தால் பின்னூட்டம் போடவும் முடிஞ்ச அப்படியே ஓட்டும் போடுங்க.

மொட்டை தலையுடன்
ஜெட்லி சரண்.

Monday, October 12, 2009

சென்னை - சில காட்சிகள்

மாநகரின் சாலைகளில் அன்றாடம் தென்படும் காட்சிகளில் சில


 • 'Lane Discipline' என்பதை தவறாக புரிந்து கொண்டு (இந்த வார்த்தைகளையே இப்போதான் கேள்விப்படுறேன் என்பவர்கள், பின்னூட்டத்தில் கேட்டு தெளிவு பெறலாம்) , எங்கெல்லாம் Lane (சந்து) கிடைக்கிறதோ அங்கெல்லாம் புகுந்து புறப்படும் இருசக்கர வாகன ஓட்டிகள் (நானும் அந்த கும்பல்ல ஒருத்தன் தான்)
 • மாமனார் வீட்டு சீதனமாய் வந்த காரை, கல்யாண ஊர்வல ஞாபகத்திலேயே ஓட்டி (உருட்டி) செல்லும் புது மாப்பிள்ளைகள்
 • நூறடி தூரத்தில் நிறுத்தம் இருப்பதும், முன்னால் செல்லும் பேருந்து அங்கு நிற்கும் என்பதும் தெரிந்தும், விலகி செல்லாமல், நின்ற பேருந்தின் பின் நின்று ஹார்ன் அடிக்கும் அதிபுத்திசாலிகள்
 • லோன் போட்டு காரை வாங்கி, நேற்று வரை ஓட்டி வந்த பைக் ஞாபகத்திலேயே, குறுக்கும் நெடுக்குமாய் செல்லும் நரேன் கார்த்திகேயன்கள்
 • எதிராளியின் மஞ்சள் = எனக்கு பச்சை, என சிக்னல் மாற சில நொடிகள் இருக்கும் போதே சீறும் சிங்கங்கள்
 • சிக்னலில் தனக்கு முன் நூறு வண்டிகள் இருந்தாலும், அங்கே பச்சை விழுந்தவுடன் இங்கே ஹார்ன் அலறவிடும் அவசரக்குடுக்கைகள்
 • நாளை வரப்போகும் தலைவருக்காக நடவேண்டிய கொடிகளை ஏற்றிக் கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு நூறடிக்கும் நின்று செல்லும் டெம்போக்கள்
 • மாச கடைசி ஆகிவிட்டாலே, கொரில்லா படையாய் மாறி, சிக்னலுக்கு சிக்னல் மறைந்திருந்து பிடிக்கும் போக்குவரத்து காவலர்கள்
 • 'தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல்' என கவுண்டமணி சொல்வது போல், தானும் செல்லாமல் பின்னால் வருபவருக்கும் வழிவிடாமல் நடுச்சாலையில் ஊரும் எருமைகள்
 • பத்து வருடத்திற்கு முன் ஒட்டிய BAJAJ Scooter ஞாபகத்திலேயே, இன்று Pulsar ஓட்டும் போதும், இருபுறமும் காலை தேய்த்து செல்லும் இம்சை அரசர்கள்
 • பின்னால் காதலி இருந்தவரை எண்பதை விட்டு இறங்காத வேகத்தில் ஓட்டிய, இன்று மனைவி அமர்ந்திருக்க (அதே பெண்ணோ, வேறோ, அது பற்றி தெரியாது) நாற்பதை தாண்டாத வீராதி வீரர்கள்
 • நிறுத்தத்திலிருந்து கிளம்பும் பேருந்தை முந்திச்சென்று குறுக்கே நிறுத்தும் அரசு பஸ் டிரைவர்கள்
 • குறுக்கே நின்ற பேருந்து கிளம்ப சில நொடிகள் காத்திராமல் 90o யில் நடுச்சாலைக்கு வரும் (வேறு யாரு) அரசு பஸ் டிரைவர்கள்
 • எங்கே திரும்புவோம், எப்படி திரும்புவோம் என யாருக்கும் தெரியாது ஆனா நீங்க எதிர்பார்க்காத நேரத்தில் கரெக்ட்டா திரும்புவோம் என ஓட்டும் மாணிக் பாட்ஷாக்கள்
 • நூறு மீட்டர் தள்ளி இருக்கும் சுரங்கப்பாதையில் இறங்கி ஏற சோம்பல் பட்டு சாலையின் நடுவே சடுகுடு ஆடும் பாதசாரிகள்
 • பெட்ரோல் போடுறானோ இல்லியோ, சைலன்சர்ல ஒரு ஓட்டைய போட்டு அடுத்தவன் காதை செவிடாகும் அரைவேக்காடுகள்,
 • ஆம்புலன்ஸ் ஒன்று போனால், அதன் வாலை பற்றிக்கொண்டு செல்லும் அற்பங்கள்
 • தெரிந்தோ/தெரியாமலோ இடித்து விட்ட சக வாகன ஓட்டியிடம் (பின்னால் சேரும் நெரிசலை பற்றி கவலையே படாமல்) நடுச்சாலையில் சண்டை போடும் ******** (எனக்கு தோன்றிய வார்த்தையை பதிவு செய்ய இயலாது, உங்க விருப்பப்படி வைத்துக் கொள்ளலாம்)
 • பாதுகாப்புக்கு ஹெல்மெட் அணியச் சொன்னால் அதையே ஸ்டாண்டாக பயன்படுத்தி உள்ளே மொபைலை சொருகி (அந்த அழைப்பை ஏற்காவிட்டால் இருபது கோடி நஷ்டம் ஆகிவிடும் எனும் ரீதியில்) பேசிச் செல்லும் சிலர் (அந்த ஹெல்மெட்டையே கழற்றி அந்த மொபைலையும் அவர்கள் மண்டையையும் உடைக்க தோன்றும் எனக்கு)
எல்லாருக்கும் சொல்ல விரும்புறது ஒன்னே ஒன்னு தான்,

"நீங்க சாலை விதிகள் பற்றிய அறிவோட (Road sense) செல்லாவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் பொது அறிவோட (Common sense) நடங்க "

இது பற்றிய உங்கள் கருத்துக்களையும், வேறு ஏதேனும் காட்சிகள் நீங்கள் பார்த்திருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லலாம், அப்படியே ஓட்டும் போட்டீர்கள் என்றால்மேலும் பலரை சென்றடையும்

இதையெல்லாம் படித்தபின் சாலை விதிகள் பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டிருந்தால் இங்கே பார்க்கலாம்,

Saturday, October 10, 2009

காதல் தோல்வியா - கவலை வேண்டாம்

வாலிப வயோதிக அன்பர்களே, (ச்சீ ச்சீ, 'கவலை வேண்டாம்'னு டைட்டில் வச்சாலே இப்படி தான் ஆரம்பிக்க தோணுது)

முடிந்து போன காதலுக்கு முதலாமாண்டு அஞ்சலி கொண்டாடும்(!) இந்நேரத்தில் சக வீரர்களுக்கு (ஆணின் பார்வையில்) சில யோசனைகள்,

 • சிறிது காலத்திற்கு (குறைந்தது ஆறு மாதம்) வேறு ஓர் உறவை தேடிச் செல்லாதீர்கள், ஏனென்றால் மயக்கம் தெளிந்தபின் அடித்தால் தான் வலி தெரியும் (ஒரே நேரத்தில் நான்கைந்து வண்டிகளில் சவாரி செய்பவர்களுக்கு இது பொருந்தாது)
 • ஏற்கனவே அடுத்த ஆட்டம் தொடங்கி விட்டவர்களுக்கு ரீமேக் படத்திலும் ஹீரோவாக நடிக்கும் உணர்வு வந்தால் ஒன்றும் செய்வதற்கில்லை
 • காதலியோடு சென்று வந்த இடங்களுக்கு செல்வதை கூடியவரை தவிர்க்கலாம் (ஊரின் மூலைமுடுக்கு ஒன்று விடாமல் சுற்றியவர்கள் ஊரையே மாற்றிவிடுவது நல்லது)
 • மொபைல் நம்பரை மாற்றிவிடுவது உத்தமம் (இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட விருப்பம் உள்ளவர்கள் இதை பொருட்படுத்த தேவையில்லை)
 • முடித்தவரை தனிமையை தவிருங்கள், விட்டு போன நட்புக்களை புதுப்பிக்க இது தக்க சமயம் (உல்லாச சுற்றுலாக்கள் செல்லலாம், அங்கு நண்பர்களால் உண்டாகும் இம்சைகளுக்கு நான்பொறுப்பில்லை)
 • வார விடுமுறைகளில் நண்பர்களோடு சினிமா செல்லலாம் (அது தோரணையோ, மலை மலையோ, அழகர் மலையாகவோ கூட இருக்கலாம், எவ்வளவு மொக்கையோ அவ்வளவு நல்லது)
 • காதலிக்கு சகோதரிகள் இருந்தால் முயற்சியை அங்கு தொடரலாம் (மொத்தத்தில் அந்த குடும்பம் உருப்படக்கூடாது, அதுதானே குறிக்கோள்)
 • நண்பர்கள் திருமணங்களுக்கு தவறாமல் செல்லவும் (எங்கே யார் தென்படுவார்கள் என யாருக்கு தெரியும்)
 • காதலில் இருக்கும் சக நண்பர்களுக்கு, முன்னின்று திருமணம் செய்து வைக்கலாம் (நாலு பேருக்கு நல்லது பண்ணினா நமக்கு ஒரு நல்லது நடக்காதா)
 • காதலியின் கணவருடன் நட்பை வளர்த்து கொள்ளலாம் (நம்ம சொத்தை அவர் எடுத்து கொண்டதால், அவர் வீட்டு சொத்து ஏதாவது தேறுமா என பார்க்கத்தான்)
 • புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம், (அது மோகமுள்ளாகவோ, விஷ்ணுபுரமாகவோ ஏன் ஸீரோ டிகிரியாகவோ கூட இருக்கலாம்)
 • Blog எழுதலாம்
தங்கள் கருத்துக்கள் / அனுபவங்களை பின்னூட்டத்தில் சொல்லலாம், அப்படியே ஓட்டும் போட்டால் நன்றாக இருக்கும்

சங்கர்

Wednesday, October 7, 2009

காமம் - ஒரு பரிசோதனை - சில பார்வைகள் - 1

ரயில் பயணங்களிலும், ரயில் நிலைய காத்திருப்புகளிலும் ஒவ்வொரு நாளும் செலவிடும் மூன்று மணிநேரங்களில் என்னுடைய வாசிப்புகளின் பெரும்பகுதி நிகழ்கிறது. இந்த ரயில் பயணங்களில் நான் ஒரு பரிசோதனை செய்து பார்ப்பது வழக்கம். பையிலிருந்து புத்தகத்தை எடுத்தவுடன் சிறிது நேரம் சுற்றி இருப்பவர்கள் அதன் தலைப்பை பார்க்கும் படியாக சில நிமிடம் கையில் வைத்திருப்பேன், யாருமே கவனிப்பதுபோல் தெரியாவிட்டால் சற்று நகர்ந்து மற்றொரு கும்பல் அருகே செல்வேன். பெரும்பாலான நாட்களில் படுதோல்வியையே சந்தித்தாலும் சிறிதும் மனந்தளராது முயற்சியை தொடர்ந்து வருகிறேன். சில நாட்கள் ஓரிருவர் கவனத்தை கவர்ந்து விட்டேன் என்றால், சில நிமிடங்கள் வாசித்தபின், படித்து முடித்து விட்ட பாவனையில் புத்தகத்தை மூடி கையில் வைத்திருப்பேன், ஆனால் இதுவரை யாரும் என் கையிலிருக்கும் புத்தகத்தை பற்றி விசாரித்ததோ, கருத்துகள் கூறியதோ, வாங்கி பார்த்ததோ இல்லை, தமிழர்களின் தேசிய குணங்களில் ஒன்றான தோளுக்கு மேல் எட்டி பார்க்கும் சிலரும் நான் நிமிர்ந்து பார்த்தால் வேறு புறம் திரும்பிகொள்வார்கள்.

இவை அனைத்தையும் மீறி தலைப்பினாலேயே, பலரின் கவனத்தை ஈர்த்த புத்தகம் மகுடேஸ்வரனின் "காமக் கடும்புனல்".
'காதல் என்பது காமம் அணிந்திருக்கும் சமூக முகமூடி' எனக்கூறும் மகுடேஸ்வரன், காமத்தை மட்டுமே பாடுபொருளாக கொண்டு எழுதியுள்ள நானூறு கவிதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்

இந்த புத்தகத்தை என் பரிசோதனைக்காக கிட்டதட்ட மூன்று மாத காலம் பையில் வைத்து பயணித்திருக்கிறேன், இந்த நாட்களில் தலைப்பினால் கவரப்பட்டு அருகில் வந்தவர்களில் பள்ளி செல்லும் விடலை பருவதினரிலிருந்து, அறுபதை தாண்டிய வயோதிகர் வரை சகலரும் அடக்கம், அருகில் நிற்பவரின் வயதை பொருத்து நான் வாசிக்கும் (அல்லது வாசிப்பதாய் பாவனை செய்யும்) கவிதைகள் மாறுபடும், அவற்றில் சில

விடலை பருவத்தில் இருக்கும் மாணவராய் இருந்தால்

சூட்சுமத்தை
புணர்ந்து மகிழ்கிறது ஸ்தூலம்
சுயமைதுனம்


இருபதுகளில் இருக்கும் இளைஞர் எனில்

'உன்னை புணர விரும்புகிறேன்' என்று
நேரடியாகக் கூற இயலவில்லை
நூதனமாக ஆரம்பிக்கிறேன்
'உன்னை விரும்புகிறேன்'


நாற்பது வரை உள்ள நடுவயதினரானால்

ஆணாதிக்கம் என்பது
காரியம் முடிந்ததும்
திரும்பிப் படுத்துக்கொள்வது


அந்த மூன்று நாட்களில்
இந்தக் கணவன்மார்களின்
முகத்திலிருக்கும்
'உர்'ரைப் பார்க்கவேண்டுமே


நாற்பதை தாண்டியவராய் இருந்தால்

எத்தனை வருடங்கள்
ஆனாலும்
உடலை
அறிந்த அளவு
அறியமுடியாது போல
மனதை


உன்னுடலை
தீண்டித் தீண்டிக்
களைத்து விட்டேன்
இதுகாறும்
கண்மூடி முகந்திருந்த நீ
நாணபோதம் நீங்கி
என்னுடலை தீண்டி
வருடிக் கொண்டிருக்கிறாய்
நாம்
தாம்பத்தியத்தின் இரண்டாம் பாகத்திற்கு
வந்துவிட்டோம்


இது தவிர பொது ரசனைக்காக இக்கவிதை

நடிகையின்
ஆள் மாற்றுச் செய்திகளை
முந்தி வாசிக்கிறேன்
என் ஆர்வத்தின் அடியில்
வண்டலாய் படிந்துள்ளது
எனக்குக் கிடைக்காத ஏக்கம்


பெரும்பாலும் மேற்கூறிய வரிகளையே தாண்டுவோர் மிகக்குறைவு, இந்த கவிதைகளில் ஒன்றிரண்டை அவர் வாசித்து விட்டால், வேறு சில தீவிரமான கவிதை வரிகளை பார்வைக்கு இலக்காக்குவேன். படித்து முடித்த பின் சொல்லி வைத்தது போல் அனைவரும் வெளிப்படுத்தும் முகபாவங்கள் இரண்டே இரண்டு தான், ஒன்று அசட்டு சிரிப்பு மற்றது பார்க்கக்கூடாத ஒன்றை பார்த்துவிட்ட அருவெறுப்பு, என்னை ஒரு புழுவை போல் பார்க்கும் பார்வை.

என் முயற்சியில் வெற்றியாக அமைந்த மற்றொரு புத்தகம் 'மோகமுள்', இதுவும் தலைப்பின் காரணமாகவே கவனமீர்த்தது, எனினும் உள்ளடக்கத்தை வாசிக்க தொடங்கிய அனைவரும் இரண்டாவது வாக்கியத்திலேயே அவர்கள் எதிர்பார்த்த 'விஷயம்' இல்லாதது கண்டு விலகிவிடுவார்கள்

இந்த இரு புத்தகங்களின் சோதனைகளும் எனக்கு தெரிவித்த முடிவு, மக்கள் தங்கள் மனதிற்குள் காமத்தை விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள், மற்றவர் யாரும் அதனை கண்டுபிடித்திடாதவரை. வேறொருவர் தெரிந்துகொண்டார் என அறிகிற கணத்தில் அதை மூடிமறைத்து மேலே ஒரு முகமூடியை போட்டுக்கொள்கின்றனர்.

ஏன் இந்த மனோபாவம் என யோசித்தபோது, தோன்றிய எண்ணங்கள் அடுத்த பாகத்தில் ,


சங்கர்

நன்றி :
மகுடேஸ்வரனின் 'காமக்கடும்புனல்'
யுனைடட் ரைட்டர்ஸ்
சென்னை 86
விலை - ரூ 100 (கடந்த புத்தக கண்காட்சியில் வாங்கிய போது)

வேட்டைக்காரன்vsயோகிvsபேராண்மை பாடல்கள் - ஒரு பார்வை.

வேட்டைக்காரன்vsயோகிvsபேராண்மை பாடல்கள் - ஒரு பார்வை.

வேட்டைக்காரன் - விஜய் அன்டனி


(நன்றி
கூகிள் ஆண்டவர்.(யார் செய்த கைவண்ணமோ))


வில்லு படத்தின் பாடல்கள் புஸ்ஸாகி போனதால், இந்த
முறை விஜய் அவர்கள் விஜய் ஆண்டனியிடம் கூட்டணி
வைத்துள்ளார்.பாடல்கள் அனைத்தும் சூப்பர்,என்னது
நம்ப மாட்டிங்களா நான் சொல்லல்ல சூரியன் எப்.எம்இல்
சொன்னாங்க.என் காதில் விஜய் அறிமுக பாடல் இப்படிதான்
விழுந்தது......

நான் நடிச்சா தாங்கமாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
என் படம் பார்த்துட்டு வீடு போய் சேரமாட்ட......

இந்த பாட்டு வரில எவ்ளோ உண்மை பாருங்க.... நாலு மாசம்
ஒருக்கா அவர் படம் வந்து நம்மளை மீளா துயரில் ஆழ்த்தி
விடுகிறது.

நமக்கு இசை பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது, ஆனா
நல்ல பாடல்களை கேட்க பிடிக்கும்.என்னை பொருத்த வரை
வேட்டைக்காரன் பாடல்கள் ஏதோ பதினைந்து வருடங்கள்
முன்பு வந்த தேவா பாட்டை கேட்பது போல் இருக்கிறது.

அதுவும் அந்த புலி வருது பாட்டு ஏதோ கோயில்களில்
பாடும் பாட்டு போல் இருக்கிறது. தங்க தாமரை பாட்டு
ஓகே ரகம், கரிகாலன் பாட்டு ரசிக்கும் ரகம், என் உச்சி
மண்டை பாட்டு கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களை
ஆடவைக்கும்(இதே பீட்டை வைத்து அ ஆ இ ஈ என்ற
படத்தில் மேனாமினுக்கி என்ற பாடல் இருக்கும்).

***********************************************************
யோகி - யுவன் ஷங்கர் ராஜா.

ப்ளாசி பாடி இருக்கும் வெடிக்காத எரிமலை யோகி பாடல்
நிச்சயமாக யுவன் ரசிகர்களுக்கு செம விருந்து.பல பேர் தங்கள் கைபேசியில் இதை ரிங்டோன்ஆக மாற்றும் வாய்ப்பு அதிகம்.

யுவன் பாடியிருக்கும் யாரோடு யாரு பாட்டு சொல்லவே வேணாம்
சூப்பர்ஒ சூப்பர்......

உஸ்தாத் சுல்தானின் வாய்ஸ் அருமையாக உள்ளது, யாரோடு
யார் மற்றும் யோகி தீம் இரண்டிலும் இவரின் வாய் வண்ணமே...

சீர்மேவும் கூவத்திலே என்று தொடங்கும் பாடல் ஒரு வித்தியாசமான பாடல் என்றே சொல்ல வேண்டும், சென்னை
தமிழ் பாஸையில் பிச்சு உதறி இருக்காங்க.
"போலீஸ் பிட்ச்சி போலீஸ் பிட்ச்சி நொங்கு நொங்கு......"

*******************************************

பேராண்மை - வித்யாசாகர்.

இயக்குனர் ஜனநாதன் அவர்களின் பேட்டி கடந்த வாரம்
ஆ.வி.யில் வந்தது அவர் டீ இலைகளின் வரலாறு பற்றி
கூறியது மிகவும் சுவாரசியம் ஆக இருந்தது. அவர் கூறிய
முருகவேல் எழுதிய "எரியும் பனிக்காடு" என்ற புத்தகத்தை
சில கடைகளில் தேடி பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை.
ஏற்கனவே அவர் ஆறு மாதத்துக்கு முன் கூறிய சுற்றுசுழல்
தகவல் கூட மிக அருமை. உண்மையிலே ஜனநாதன் சார்
சரக்கு உள்ளவர் தான்.

அவரே ஈ படத்தின் போது தனக்கு இசை அவ்வளவாக தெரியாது
என்றார்.ஜனநாதன் கதையில் மட்டுமே அக்கறை காட்டும்
இயக்குனர், அதை கொஞ்சம் இசையில் காட்டினால் படம்
சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வாய்ப்பு அமைந்திருக்கும்.

பேராண்மை படத்திலும் பாடல்கள் சொல்லி கொள்ளும் படி
இல்லை என்பது வருத்தமான விஷயம்.காட்டு புலி அடித்து
என்ற பாடல் சுமார் ரகம் அதில் கே.கே குரல் நச், தூப்பாக்கி
பெண்ணே என்ற பாடல் சுமார் தான் வேற எதுவும் சொல்ற
மாதிரி இல்ல.இந்த படத்தை நான் தீபாவளிக்கு மிகவும்
எதிர்பார்க்கிறேன். படத்தோடு பாடல்களை கேக்கும் மற்றும் பார்க்கும் போது ஒரு வேளை நன்றாக இருக்கலாம்.

யாருப்பா அது பேராண்மை படத்துக்கு டிக்கெட் போடுப்பா....
ட்ரைலர் சூப்பர் வசனமும் தான்.

***********************************************

இது போன்ற தகவல்கள் அனைத்து மக்களையும் சேர ஒட்டு
போடுங்கள்.

நன்றி
ஜெட்லி சரண்.

Tuesday, October 6, 2009

டிப்ஸ்????

டிப்ஸ் -- எவன்யா கண்டுபிடிச்சான்???

நாம் சர்வருக்கு தரும் டிப்ஸின் விரிவாக்கம்:

TIPS - TO INSURE PROMPT SERVICE

நான் ரொம்ப பணக்கார தனமான ஹோட்டல்க்கு போய்
பழக்கம் இல்லை, எப்போதாவது முனியாண்டி விலாஸ், உடுப்பி ஹோட்டல்களில் சாப்பிட்டு காலத்தை ஒட்டி கொண்டிரிக்கிறேன்.
நான் டிப்ஸ் வைப்பது என் மூடு பொருத்து இருக்கு,அது எப்படின்னா
நான் கேக்காமல் சர்வர் அதிக சால்னா கொண்டு வந்தாலோ,
நான் கேக்காமல் ஆப்பாயிலில் அதிகமாக பேப்பர் போட்டு கொண்டு
வந்தாலோ கொடுப்பேங்க,முக்கியமா சீக்கரமா வந்த கொடுப்பேன்.


தினமும் ஹோட்டலில் சாப்பிடும் என் பாச்சிலர் நண்பர்கள் டிப்ஸ்
வைப்பது மிகவும் குறைவு.மூணு வேளையும் டிப்ஸ் வைக்கிற
காசில் ஒரு வேளை சாப்பிட்டு விடலாம் என்பதே காரணம்.

ஏதோ ஒரு பவனில் அன்றாடும் நடக்கும் நிகழ்ச்சி.
ரெண்டு கேரக்டர் ரெண்டு பேருமே அந்த பவனுக்கு தினமும்
செல்பவர்கள் ஒருவன் டிப்ஸ் கொடுப்பவன் மற்றவன்
டிப்ஸ் கொடுக்க மாட்டான்.டிப்ஸ் கொடுப்பவனுக்கு நீல நிற
எழுத்தும் டிப்ஸ் கொடுக்கதவனுக்கு சிகப்பு நிற எழுத்தும்....

1) ஹோட்டல் உள்ளே போகும் போதே எப்போதும் பரிமாறும்
சர்வர் உங்களை தான் கண்காணிக்கும் இடத்தில் உட்கார
சொல்வார்.

1) ஹோட்டல் முதலாளி தவிர வேறு யாருமே உங்களை
கண்டு கொள்ள மாட்டார்கள்.எங்கே இடம் காலியாக இருக்கோ
அங்கே போய் உட்கார வேண்டியதுதான்.

2) சர்வர் நீங்கள் உட்காரும் முன்னே தண்ணீர் வைப்பார்,
எப்போதும் கூட வருபவர் வரவில்லை என்றால் அவர் வரலையா
என்று அக்கறையாக விசாரிப்பார்.

2)பத்து நிமிஷம் உங்க பக்கம் சர்வர் வரவே மாட்டார்.
முன்னாடி கவனிப்பார் பின்னாடி கவனிப்பார் அப்புறம் தீடிர்னு
வந்து அடிப்பதை போல் "என்ன வேணும்" என்று கேட்பார், நாம்
தட்டு தடுமாறி இரண்டு இட்லி என்பதுக்குள் போய் விடுவார்.
(என்னது தண்ணியா?? அதெல்லாம் இட்லி வந்ததுக்கு அப்புறம்
தான் வரும்
)

3) இரண்டு இட்லிக்கு கொஞ்சம் சட்னி அதிகமாவே இருக்கும்.
"வடை வேணுமா சார் சூட இருக்கு" என்று கேட்பார்.

3) நம்ம இட்லி ப்ளேட்இல் ஏதோ பெண்ணின் முகத்தில் பொட்டு
வைத்து போல் சட்னி இருக்கும்.சாம்பார் பாதி கிண்ணம் தான்
இருக்கும்.


4) நடுநடுவில் வந்து சாம்பார் போதும் என்றாலும் ஊத்து ஊத்து என்று ஊத்துவார், தட்டு சாம்பாரில் நிரம்பி வழியும்.

4) நம் கிண்ணத்தில் சாம்பார் காலியாகி விட்டாலும் சர்வர் நம்ம பக்கமே வரமாட்டார்.நாம கடுப்புல இருக்கும் போது வந்து "சார் சாம்பார் வேணுமா??" என்பார்.

5) தோசை சொல்லிடவா சார் இல்லை பூரியா என்று பயங்கரமா
கவனிப்பார்.

5) வேற ஏதாவது வேணுமா?? என்று அவர் கேட்பது நமக்கு
எழுந்து சீக்கரம் போட என்பது போல் இருக்கும்
.

6) பில் கொண்டு வரும்போது "போதுமா சார் காப்பி வேணுமா"
என்று கேட்பார்.பில் என்பது ரூபாய் ஆச்சுனா கண்டிப்பா மீதி
இருபது ரூபாயில் ரெண்டு அஞ்சு ரூபாய் காயின் இருக்கும்.


6) பில்லை நாமே காஷ் கவுண்டரில் கட்ட வேண்டியது தான்.

நான் அனைத்து சர்வர்களையும் சொல்லவில்லை சில பேர்
அப்படி இருக்கின்றனர்.வர வர டிப்ஸ்இன் அர்த்தம் லஞ்சம்
கொடுப்பது போல் ஆகிவிட்டது....

கொசுறு செய்தி 1:

முன்னால் நடிகை ஸ்ரீதேவிக்கு ஹோட்டலில் டிப்ஸ் வைக்கும்
பழக்கம் இல்லை.

கொசுறு செய்தி 2:

pirates of carribean புகழ் ஜானி டேப் அவர்கள் சமீபத்தில் சிகாகோ
உணவகத்தில் 4,000 டாலர்கள் டிப்ஸ் அளித்துள்ளார்.

என் நெருங்கிய நண்பன் எப்போதும் கூறுவான் ஆங்கிலத்தில்
தனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை டிப்ஸ் என்று.

உங்களுக்கு இது போல் ஹோட்டல் மற்றும் டிப்ஸ் அனுபவம்
இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்வோம்
.....

புடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க மக்களே.....

நன்றி

ஜெட்லி சரண்.

Friday, October 2, 2009

காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, என்ற அறிவிப்புடன் நமது இளையதளபதி நடித்த பகவதி படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது, எவ்வளவோ யோசித்தும் இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என விளங்கவில்லை. அப்போது ஒரு காட்சி, தலைவர், நாயகியிடம் கொடுக்கும் ஐந்து ரூபாய் நோட்டில் காந்தி படம் மறைந்து இளையதளபதி முகம் தோன்றியது, நமது நெடுநேர சந்தேகத்துக்கும் விடை கிடைத்தது. இதை விட பெரிய சம்பந்தம் எதுவும் தேவையில்லை என மனதை சமாதானப்படுத்திக்(நொந்து) கொண்டே சானலை மாற்றி வந்தபோது, மக்கள் தொலைக்காட்சியில், (எதிர்பார்த்தது போலவே) மகாத்மாவின் லண்டன் பயணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அந்த அரையாடை மனிதரின், பொக்கைவாய் சிரிப்பையும் எளிமையையும் பார்த்தபோது, மனதில் தோன்றிய ஒரே உணர்வு, இனி எப்போது இதுபோன்ற ஒருவரை காண்போம் என்ற ஏக்கம் தான்.

ஐந்தாவது வகுப்பு படிக்கும் போது காந்தி மற்றும் கோட்சே பற்றி நண்பனிடம் கூறிய கருத்து வகுப்பாசிரியர் காதுக்கு எட்டி, சில அடிகளும், சிறு அறிவுரையும் பெற்ற சம்பவம் என்றும் மறக்க இயலாத ஒன்று. சுதந்திரத்திற்குப்பின் அரியணை ஏறமறுத்த அவரின் முடிவை பற்றிய வருத்தமும், அவர் அதை ஏற்றிருந்தால், நாடு இவ்வளவு சீரழிந்திருக்காதோ என்ற நப்பாசையும் மனதின் ஓரத்தில் இன்றும் உண்டு. ஆகாசவாணியில் வெள்ளிகிழமைகளில் ஒலிபரப்பாகிவந்த சத்தியசோதனை வாசிப்பை, வாரம் தவறாமல் கேட்பது வழக்கமாக இருந்து வந்தாலும், படிக்கக் கிடைத்த சில புத்தகங்களும், அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களும், கம்யுனிஸ்ட் கூட்டங்களுக்கு செல்லும் (கல்லூரியில் படித்து வந்த) நண்பனுடன் மணிக்கணக்கில் நிகழ்த்திய விவாதங்களும், காந்தி குறித்தும் அவருடைய கொள்கைகள் (குறிப்பாக அஹிம்சை மற்றும் சத்தியாகிரகம்) குறித்தும், எதிர்மறையான (மிகக் கடுமையான) கருத்துக்கள் கொண்டதாகவே என் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியாண்டுகள் கழிந்தன.

'மாற்றம் ஒன்றே நிரந்தரம்' எனும் மாபெரும் நிதர்சனம் மீண்டும் நிஜமானது, 2005 புத்தக கண்காட்சியில் வாங்கிய சத்தியசோதனை நீண்டகாலம் படிக்கப்படாமலே இருந்தது, திடிரென்று ஒருநாள் ஞானோதயம் பிறந்து படிக்க ஆரம்பித்தேன், முதலில் சுவாரசியமில்லாததாக தோன்றிய வரிகள், வாசிப்பை 30 பக்கங்களோடு நிறுத்திவிட்டன. மனந்தளராத விக்க்ரமாதித்தனாக மீண்டும் முதலிலிருந்து தொடங்கினேன், இந்தமுறை சில புதிய விஷயங்கள் புலப்படத் தொடங்கின, சொந்த வாழ்வில் தோன்றிய நெருக்கடிகளை அவர் கையாண்ட விதமும், பொதுவாழ்வில் அவரின் நேர்மையும், பொது நிதி வசூல் மற்றும் கணக்கு வழக்கு விவகாரங்களில் காட்டிய கண்டிப்பும், ஒழுங்கும் நிகழ்காலத்தை ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க இயலாமல் செய்து மனதை கனக்க செய்தன. நடந்த சம்பவங்களை ஒளிவுமறைவில்லாமல் எழுதியவிதம் அவர் மீதான மதிப்பை பலமடங்கு உயர்த்தியது.

சத்தியசோதனையை ஒவ்வொரு முறை கையில் எடுக்கும்போதும் மனதில் தோன்றும் ஒரே உணர்வு ஏக்கம் தான். நல்ல புத்தகம் நண்பர்களே, சற்றும் நெருடாத மொழிபெயர்ப்பு (ரா வேங்கடராஜலு), நீங்களும் படியுங்கள், விலையும் அதிகமில்லை, மலிவுப் பதிப்பாக நவ ஜீவன் பிரசுரத்திலிருந்து வெளியிட்டிருக்கிறார்கள், முப்பதே ரூபாய் தான்.

நன்றி
சங்கர்

நாட்டு நடப்பு நல்லாத்தானே இருக்கு

இன்று காலை ஒரு வேலையாக நங்கநல்லூர் சென்றிருந்தேன், வழக்கமாக ஆள் நடமாட்டமே இருக்காத அந்த சாலையில் திடிரென்று ஒரு குவாலிஸ் வந்தது, முகப்பில் கட்சிக் கொடி, அதற்கு பின்னால ஒரு கூட்டம் ஆரவாரமாக வந்தது, ஒவ்வொருவர் கையிலும் கட்சி கொடி, வாயில் வாழ்க, வளர்க, ஜே என்றெல்லாம் கோஷம், இரு ஆட்டோக்கள் சில பைக்குகள், ஒரு ஸ்கார்பியோ பின்தொடர ஊர்வலம் சென்றது, அதன் பின் சென்ற மற்றொரு கும்பலில் இருந்த தெரிந்த முகம் ஒன்றை கேட்டேன், "என்ன ஊர்வலம் சார்" அவர் சொன்னார் "காந்தி ஜெயந்தி அமைதி ஊர்வலம்", முதலில் சரியாக புரியாத வாழ்த்து கோஷம் இப்போது புரிந்தது, "தலைவர் வாழ்க", "வாழும் காந்தி வாழ்க" மற்றும் தமிழ்நாட்டின் நிரந்தர ஊர்வல கோஷமான "இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா"

செய்யுங்கடா, செய்ங்க

நன்றி
சங்கர்

Thursday, October 1, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு(01.10.09)

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு(01.10.09)

என்னிடம் கேள்வி கேட்ட ட்ராபிக் சார்ஜன்ட்.

நான் சிவனேன்னு கடைல இருந்தேன், நம் நண்பர் ஒருவர்
வேலை முடித்து களைத்து வந்து என்னிடம் கொஞ்சம் கதை
பேசுவார்(அவர் யூத் இல்லை).அவர் உன்னை போல் ஒருவன்
படத்தை பத்தி ரொம்ப சிலாகித்து பேசினார்.அப்போ தான் அந்த
சம்பவம் நடந்தது......

ஒரு ட்ராபிக் சார்ஜன்ட் வந்து என்னிடம் காலண்டர் இருக்கா??
என்று கேட்டார்.

நான் ஓசியில் ஒரு காலண்டர் கேக்குறாரு போல நினைத்து
"அடிச்ச காலண்டர் தீர்ந்து போய் ஏழு மாசம் ஆச்சுங்க" என்றேன்
அப்பாவியாய்...

ரொம்ப டென்ஷன் ஆகி போனார் ட்ராபிக் சார்ஜன்ட்.

ஒரு வேளை நாளைக்கு அவர் ராசிக்கு என்ன போட்டு இருக்கு என்று பார்ப்பதற்கு கேக்குறாரு என்று நினைத்து

"நான் யூஸ் பண்ற காலண்டர் இருக்கு" என்றேன் நான்.

உடனே சார்ஜன்ட் "நாளைக்கு என்னப்பா??" என்றார்.

"நாளைக்கு காந்தி ஜெயந்தி" என்றேன்.

"ஹோ அப்படியா" என்று விறுவிறு என்று ரோட்டை நோக்கி
நடந்தார்.

என்னிடம் பேசிகொண்டிரிந்த நண்பர்" நாளைக்கு காந்தி பொறந்த
நாள், வைன் ஷாப் எல்லாம் லீவ்" என்று அவர் காதில் விழும்
படி கூறினார்.

ஆனா ட்ராபிக் சார்ஜன்ட் திரும்பி பார்க்கவே இல்லை,,

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தியின்
பிறந்த நாளை கூட நினைவில் இல்லாமல் ஒரு அரசு அதிகாரி
முதல் நாள் இரவு எட்டு மணிக்கு வந்து நாளைக்கு என்ன

நாள் என்று கேக்கும் அளவுக்கு நாம் நாடு இருக்கிறது......

என்னத்த சொல்றது.... நாட்டு நடப்பு ரொம்ப கேவலமா இருக்கு!!

**********************************************

என்று தீரும் இந்த மந்தைவெளி பிரச்சனை:

மயிலாப்பூர் மற்றும் அடையார் நடுவில் இருக்கும் இடம் தான்
மந்தைவெளி.நான் மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில்
இளநிலை படிக்கும் காலத்தில் இருந்தே ரோட்டை நொண்டி
நொங்கு எடுத்து விடுவார்கள். அந்த ரோட் சைடு போனாலே
புழுதி பறக்கும்.நான் முடிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு ஆனா
இன்னும் அந்த சாலைகள் சரியாகவில்லை.


இப்போ திரும்பவும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.மயிலாப்பூர்

போனும்னா சுத்து சுத்துக்கிட்டு தான் போகணும்.இதை ஒரு
டைம் பாஸாக நம்ம குடிநீர் அல்லது கழிவு நீர் வாரியம்
பண்ணுதா என்று எனக்கு தெரியவில்லை.

பாவம் மந்தைவெளி மக்கள் வாகனம் போகும் தூசியே
அவர்களுக்கு பாதி நோயை கொண்டு வந்துவிடும்.எனக்கு
தெரிஞ்சு ஒரு ஆறு வருஷமா இந்த மாதிரி தொடர்ந்து நடந்துட்டு
வருது.இதற்கு எப்போது விடிவுகாலம் என்று தெரியவில்லை??

**************************************************

உங்கள்
ஜெட்லி சரண்.