Friday, October 2, 2009

காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, என்ற அறிவிப்புடன் நமது இளையதளபதி நடித்த பகவதி படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது, எவ்வளவோ யோசித்தும் இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என விளங்கவில்லை. அப்போது ஒரு காட்சி, தலைவர், நாயகியிடம் கொடுக்கும் ஐந்து ரூபாய் நோட்டில் காந்தி படம் மறைந்து இளையதளபதி முகம் தோன்றியது, நமது நெடுநேர சந்தேகத்துக்கும் விடை கிடைத்தது. இதை விட பெரிய சம்பந்தம் எதுவும் தேவையில்லை என மனதை சமாதானப்படுத்திக்(நொந்து) கொண்டே சானலை மாற்றி வந்தபோது, மக்கள் தொலைக்காட்சியில், (எதிர்பார்த்தது போலவே) மகாத்மாவின் லண்டன் பயணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அந்த அரையாடை மனிதரின், பொக்கைவாய் சிரிப்பையும் எளிமையையும் பார்த்தபோது, மனதில் தோன்றிய ஒரே உணர்வு, இனி எப்போது இதுபோன்ற ஒருவரை காண்போம் என்ற ஏக்கம் தான்.

ஐந்தாவது வகுப்பு படிக்கும் போது காந்தி மற்றும் கோட்சே பற்றி நண்பனிடம் கூறிய கருத்து வகுப்பாசிரியர் காதுக்கு எட்டி, சில அடிகளும், சிறு அறிவுரையும் பெற்ற சம்பவம் என்றும் மறக்க இயலாத ஒன்று. சுதந்திரத்திற்குப்பின் அரியணை ஏறமறுத்த அவரின் முடிவை பற்றிய வருத்தமும், அவர் அதை ஏற்றிருந்தால், நாடு இவ்வளவு சீரழிந்திருக்காதோ என்ற நப்பாசையும் மனதின் ஓரத்தில் இன்றும் உண்டு. ஆகாசவாணியில் வெள்ளிகிழமைகளில் ஒலிபரப்பாகிவந்த சத்தியசோதனை வாசிப்பை, வாரம் தவறாமல் கேட்பது வழக்கமாக இருந்து வந்தாலும், படிக்கக் கிடைத்த சில புத்தகங்களும், அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களும், கம்யுனிஸ்ட் கூட்டங்களுக்கு செல்லும் (கல்லூரியில் படித்து வந்த) நண்பனுடன் மணிக்கணக்கில் நிகழ்த்திய விவாதங்களும், காந்தி குறித்தும் அவருடைய கொள்கைகள் (குறிப்பாக அஹிம்சை மற்றும் சத்தியாகிரகம்) குறித்தும், எதிர்மறையான (மிகக் கடுமையான) கருத்துக்கள் கொண்டதாகவே என் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியாண்டுகள் கழிந்தன.

'மாற்றம் ஒன்றே நிரந்தரம்' எனும் மாபெரும் நிதர்சனம் மீண்டும் நிஜமானது, 2005 புத்தக கண்காட்சியில் வாங்கிய சத்தியசோதனை நீண்டகாலம் படிக்கப்படாமலே இருந்தது, திடிரென்று ஒருநாள் ஞானோதயம் பிறந்து படிக்க ஆரம்பித்தேன், முதலில் சுவாரசியமில்லாததாக தோன்றிய வரிகள், வாசிப்பை 30 பக்கங்களோடு நிறுத்திவிட்டன. மனந்தளராத விக்க்ரமாதித்தனாக மீண்டும் முதலிலிருந்து தொடங்கினேன், இந்தமுறை சில புதிய விஷயங்கள் புலப்படத் தொடங்கின, சொந்த வாழ்வில் தோன்றிய நெருக்கடிகளை அவர் கையாண்ட விதமும், பொதுவாழ்வில் அவரின் நேர்மையும், பொது நிதி வசூல் மற்றும் கணக்கு வழக்கு விவகாரங்களில் காட்டிய கண்டிப்பும், ஒழுங்கும் நிகழ்காலத்தை ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க இயலாமல் செய்து மனதை கனக்க செய்தன. நடந்த சம்பவங்களை ஒளிவுமறைவில்லாமல் எழுதியவிதம் அவர் மீதான மதிப்பை பலமடங்கு உயர்த்தியது.

சத்தியசோதனையை ஒவ்வொரு முறை கையில் எடுக்கும்போதும் மனதில் தோன்றும் ஒரே உணர்வு ஏக்கம் தான். நல்ல புத்தகம் நண்பர்களே, சற்றும் நெருடாத மொழிபெயர்ப்பு (ரா வேங்கடராஜலு), நீங்களும் படியுங்கள், விலையும் அதிகமில்லை, மலிவுப் பதிப்பாக நவ ஜீவன் பிரசுரத்திலிருந்து வெளியிட்டிருக்கிறார்கள், முப்பதே ரூபாய் தான்.

நன்றி
சங்கர்

1 comment:

Anand said...

Jetli,
Romba arputhamana oru post. ungal bloga adikadi padikum nabarkalil naanum oruthan. romba nerthiyakavum azhakagavum ezhuthum neengal intha postil konjam unarchi poorvamakavum ezhutiyirukirikal. Mikka nanri.

Thodarnthu ezhuthavum.
-Anand.