Saturday, October 31, 2009

விடை கொடு எங்கள் நாடே

கிபி 2100, ஜனவரி 5,

'இன்று தான் கடைசி நாள், இந்த கிரகத்தை விட்டு புறப்படுகிறோம், எங்கும்வெப்பம் தகிக்கிறது, கடந்த நூற்றாண்டில் கடலுக்குள் போன ஐம்பது சதவிதநிலப்பரப்பில் வாழ்ந்தவர்களில் கடலோடு போனவர்களை தவிர்த்த பிறர், எஞ்சிய நிலத்தில் தஞ்சம் புகுந்ததால் எங்கும் இடநெருக்கடி, கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்த விஞ்ஞானத்தின் பலனாய், இருந்த காடுகளை எல்லாம் அழித்தாகிவிட்டது, விளைவு கடந்த இருபதாண்டுகளாய் மழை இல்லை, கடல் நீரை நன்நீராக்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தோம், அதற்கும் வந்தது ஆபத்து, பூமியிலிருந்து எடுக்க முடிந்த எரிபொருள் எல்லாம் சுரண்டி செலவிட்டாயிற்று, சூரிய ஒளியை பயன்படுத்தி உண்டாக்கிகொண்டிருந்த மின்சாரம், ஓசோனில் விழுந்த ஓட்டையால், இனி சாத்தியமில்லை, வீரியம் வேண்டுமென்று கொட்டிவைத்த உரங்களும் உயிர்கொல்லிகளும் விளைவிக்கவே தகுதியற்றதாய் மண்ணை மாற்றியதால், பல நூறடி ஆழ உழுது (தோண்டி) கிடைக்கும் மண்ணை வைத்து விவசாயம் செய்தோம், கடந்த பத்தாண்டுகளாய் அவ்வப்போது பெய்யும் அமிலமழை அந்த பயிர்களையும் அழிக்க தொடங்கியதை கண்டபின் தான் முடிவெடுத்தோம், இந்த பூமியை விட்டு வேறு கிரகம் போவதென்று.


இந்த நிலை வருமென ஏற்கனவே எதிர்பார்த்திருந்தபடியால் மாற்று கிரகம் தேடும் வேலைகள் கடந்த அரை நூற்றாண்டாய் வேகமாய் நடந்துகொண்டிருக்கின்றன, இந்த சூரியக்குடும்பத்தில் இந்த பூமியை தவிர வாழ்வதற்குஏற்ற இடம் ஏதுமில்லை. நம் முன்னும் பின்னும் இருக்கும் கோள்களோ ஒன்றுகுளிரில் உறைந்து கிடக்கின்றன, அல்லது கொதித்துக்கொண்டிருக்கின்றன, அருகிலிருக்கும் நட்சத்திர மண்டலங்களை ஆராய்ந்து பார்த்ததில், சற்றேறக்குறைய இந்த பூமியை போன்ற கோள் ஒன்றை கண்டுபிடித்துவிட்டோம், நிலத்தில் நான்கில் மூன்று பங்கு நீரும், காற்றில்தேவையான அளவு ஆக்சிஜனும் உள்ளதாம். விசித்திர மிருகங்கள் பல வாழ்கின்றனவாம், இங்கு ஏற்கனவே அழித்த அனுபவம் கைகொடுத்தால்அவற்றில் பெரும்பகுதியை விண்ணிலிருந்தே தாக்கி அழித்தாகிவிட்டது.


மனிதர்களை தவிர மற்ற அனைத்தையும் இங்கேயே விட்டுசெல்வதாய் திட்டம். எல்லாவற்றையும் புதிதாய் தொடங்கலாம் என உலகத்தலைமை முடிவுசெய்துள்ளதால் இந்த ஏற்பாடு. விஞ்ஞானத்தின் கட்டற்ற வளர்ச்சியால் வந்த வினைதான் இதுவென்பதால், எந்த அறிவியல் சாதனமும் எடுத்து செல்லபோவதில்லை, இத்தனை துன்பங்கள் வந்த பின்பும் எல்லோரும் ஒன்றுசேரவிடாமல் குறுக்கே நிற்கும் மதங்களுக்கும், கடவுள்களுக்கும் கண்டிப்பாய்அனுமதி இல்லை, பழங்கதைகள் எல்லாம் மறந்து விடவும், அடுத்ததலைமுறைக்கு செல்லாமல் மறைத்துவிடவும் உத்தரவு, இயற்கையையே நம்பி, இயற்கையையே வணங்கி, இயற்கையையே
சரணடைந்து வாழத்தொடங்கவேண்டும், சுருக்கமாய் சொல்வதென்றால் மீண்டும் குகைக்கே திரும்புகிறோம். ஏழு ஆண்டுகளுக்கான உணவும், நீரும், காற்றும் மட்டுமேஅனுமதிக்கப்பட்டிருக்கும் விண்வெளி பயணத்தில், சிலர் கடவுள்களையும், கதைகளையும் மறைத்து எடுத்துவரப்போவதாய் கூறுகின்றனர்.


இன்னும் எத்தனை முறைதான் இடம் பெயர்வது? எந்த ஒரு இடத்திலும்மூவாயிரம் வருடங்களுக்கு மேல் இருந்த வழக்கமே இல்லை. செல்லுமிடத்தின்செல்வங்களையெல்லாம் அழித்து முடிப்பது, அடுத்த இடம் தேடிச்செல்வது, மனிதனால் மட்டுமே முடிந்த அற்புதச்செயல் இது. இதுநாள் வரை உணவும்உறைவிடமும் தந்து உயிர்கொடுத்த உலகே, நன்றி, விடைபெறுகிறோம்.'
இதன் பிந்தைய தேதியிட்ட பக்கங்களில் ஒன்றும் எழுதப்படவில்லை,

ஆண்ட்ரோமீடா காலக்ஸியில் உயிர் வாழ தகுதியுள்ளதாய் அறியப்பட்ட M31 இன் துணைகிரகத்தில், ஆளரவமற்றிருந்த வீடுகளில் ஒன்றில் கிடைத்த நாட்குறிப்பை படித்து முடித்து, தலைநிமிர்ந்து பார்த்தனர், ஆராய்வதற்கு பூமியிலிருந்து போன அந்த இரு விஞ்ஞானிகளும்


படித்துப் பாராட்டவோ, 'விஞ்ஞான சிறுகதை என்றாலே விண்வெளி, வேற்று கிரகம் என அசிமோவ்தனமாக தான் எழுதவேண்டுமா' என திட்டவோ சுஜாதா இல்லையே என்ற ஆதங்கத்துடன்

சங்கர்சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

10 comments:

பிரபாகர் said...

நச்சுன்னு இருக்கு. போட்டிக்காக இல்லன்னானும் அடிக்கடி இது மாதிரி எழுதுங்க பாஸ்... அருமையா இருக்கு.

பிரபாகர்.

பிரபாகர் said...

தமிழ்மணம் இணைச்சி ஒட்டு போட்டுட்டேன், உங்களுதும் போடுங்களேன்...

பிரபாகர்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

nice story. Very very nice ending.

// இங்கு ஏற்கனவே அழித்த அனுபவம் கைகொடுத்தால்அவற்றில் பெரும்பகுதியை விண்ணிலிருந்தே தாக்கி அழித்தாகிவிட்டது.//

உண்மை, உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

சித்து said...

அருமை அருமை, சரியா சொன்ன நண்பா. இது நடக்கும் நாள் மிக அருகில். நானும் புவி வெப்பம் அடைவதை பற்றி எழுத ஒரு பதிவு வைத்துள்ளேன்.

Anbarasu Selvarasu said...

Very Nice. Continue...

பிரசன்ன குமார் said...

Good fiction..

Srinivasan (Cognizant) G said...

Dei machi very nice da...didnt expect the twist.

வால்பையன் said...

நல்லாருக்கு!

ராம்குமார் - அமுதன் said...

கதை அருமை... பிரமாதமா இருக்கு... வெற்றி பெற வாழ்த்துக்கள்....

pappu said...

படித்துப் பாராட்டவோ, 'விஞ்ஞான சிறுகதை என்றாலே விண்வெளி, வேற்று கிரகம் என அசிமோவ்தனமாக தான் எழுதவேண்டுமா' என திட்டவோ சுஜாதா இல்லையே என்ற ஆதங்கத்துடன்

///

சேம் பீலிங்க்ஸ்!