"நட்புக்கும், காதலுக்கும் நடுவுல இருக்கிறது சின்னக் கோடுதான்"
"கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் இடையில இருக்கிறது சின்ன இடைவெளி தான்"
இதெல்லாம் தமிழ் சினிமாவிலும், பிரபலங்களின் பேட்டிகளிலும் கேட்கக் கிடைக்கும் புளித்துப்போன வாக்கியங்கள், என நீங்கள் கூறுவது காதில் விழுகிறது. ஆனால், கவிதைக்கும் உரைநடைக்கும் இடைப்பட்ட கோட்டில் பயணிக்கும் எழுத்து எப்படி இருக்கும் என அறிய ஆசையா? உங்களுக்காகவே இதோ க.சீ. சிவக்குமார்.
இரண்டாயிரத்தின் இறுதியில் கல்கியில் வெளிவந்த குறுநாவல் கானல் தெரு. பொன்னியின் செல்வனை பத்மவாசனின் படங்களுடன் சேகரிப்பதில் மும்மரமாக இருந்த நான், கானல் தெருவைக் கவனிக்காமலேயே கடந்து வந்து வந்துவிட்டேன். ஆனாலும் தொடராய் வந்த எதையும், விடாமல் சேர்த்து வைத்ததால், அடுத்து வந்த பள்ளியிறுதிக் கோடை விடுமுறையில் கானல் தெருவில் அடியெடுத்து வைத்தேன், இன்று வரை வெளியே வர இயலவில்லை.
கிராமமும் நகரமும் அல்லாத ஓர் ஊரில், பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும் சிலரின் வாழ்வில் வரும் நட்பும், எதிர் பால் ஈர்ப்பும் அதை சுற்றிச் சுழலும் சம்பவங்களும் தான் கதை. கேட்பதற்கு புதிதாய் ஏதுமில்லாதது போல் தோன்றும் இந்த கதையை இன்றளவும் மறக்க முடியாத படி செய்தது, சிவகுமாரின் கவிதையொத்த நடையும், எழுத்தில் எப்போதும் விரவிக் கிடக்கும் நகைச்சுவைதான்.
உதாரணமாக சில வரிகள்,
"நூலகம், பன்னீராயிரம் புத்தகங்களும், அதற்குத் துணையாக நூலகரும் உறங்கிக்கொண்டிருந்தன"
"ஸ்கூல் மைதானத்தின் விளிம்புகளில் வேப்பங்கன்றுகள் நடப்பட்டன. மந்திரிகள் யாரும் மரம் நடும் வைபவத்தைத் துவக்கி வைக்கவில்லையாதலால் அவை மகிழ்வுடன் வளர்ந்தன"
"வருடம் தவறாமல் இலக்கிய மன்ற நிறைவு விழாவுக்கு மறுதினம் 'ஆன்யுவல் ஸ்போர்ட்ஸ் டே கொண்டாடப்பட்டது. இதை 'ஆண்டிறுதி உடற்றிறப் போட்டி' என தமிழ் நோட்டீஸ் அறிவித்தது. இதன் தொடர்ந்த வல்லின உச்சரிப்பு பற்களின் உறுதிக்கு பலமான பயிற்சி"
"வெளியூர் ஒற்றையர்களை அடித்து நொறுக்குவதற்குப் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் காலி மனை ஒன்று இருக்கிறது. அந்தத் தொடக்கப் பள்ளியில் காலையில் குழந்தைகள் 'இந்தியர் அனைவரும் சகோதரர்' என உறுதி அளித்தனர்".
கதையின் சுருக்கத்தைச் சொல்லும் நான்கு வரிகள்,
" 'அனிதா-பார்த்திபன் காதல்',
சுவரில், கரியால் பன்னிரண்டு எழுத்துக்கள்,
ஒரு பெண் பள்ளி மாறுகிறாள்,
தமிழ் வலிமையான மொழி தான்"என்னால் என்றும் மறக்க முடியாததாய் தோன்றும் இந்தப் புத்தகத்தில், மாணவர்களின் நண்பனாய் பழகும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவியும், காதல் கடிதங்களும் உதட்டோரம் பூக்கும் சிறு சிறு புன்னகைகளுடன், உங்கள் பள்ளிக்கால நினைவுகளை உயிர்ப்பிக்கலாம்.
கானல் தெரு
எண் 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர்,சென்னை - 83
அசோக் நகர்,சென்னை - 83
விலை – 50
பின்குறிப்பு:
வாசிப்பு என்பது என்னைப் பொறுத்தவரை பூ வாசனையைப் போல், மனம் விரும்பும் பண்டத்தின் ருசி போன்றதொரு உணர்வு தான். உணர்வை வார்த்தைகளாய் வெளிப்படுத்துவது ஏறக்குறைய இயலாத விஷயம், என்றாலும் முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.
நன்றி
சங்கர்
17 comments:
நல்ல விமர்சனம் ...சங்கர் .
விமர்சனம் இல்லை நண்பா, வெறும் அறிமுகம் தான் :))
நன்றி
நல்லதொரு அறிமுகம் சங்கர்... தம்பியின் எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே வருகிறது...
பிரபாகர்.
பகிர்வுக்கு நன்றிங்கணா
அறிமுகத்துக்கு நன்றி சங்கர்.
நல்ல புத்தகப்பகிர்வு... நன்றிகள்...
நல்ல விமர்சனம் ...
நல்ல பகிர்வு சங்கர்.
நீங்கள் எடுத்துக்காட்டிய வாசகங்கள் புத்தகத்தின் அழகை புரியவைக்கிறது.
அட ! பதிப்பகம் வீட்டுக்குப் பக்கத்தில் தான். நேரில் போய் வாங்கிவிடுகிறேன்.
அருமையான புத்தகம் மட்டும் அல்ல, தங்கள் ரசனையும் நன்கு வந்து இருக்கிறது.
அனைவருக்கும் நன்றி
@D.R.Ashok
போற இடத்திலெல்லாம் அண்ணே அண்ணேன்னு சொல்லிட்டா, நீங்க யூத்து ஆயிட முடியாது
sankar.. ஆளுக்கும்.. அறிவுக்கும் சம்மந்தமில்லை என்பதை .....:)
@Cable Sankar
சரியா புரியலையே, ஒருவேளை கவிதையோ :))
///வாசிப்பு என்பது என்னைப் பொறுத்தவரை பூ வாசனையைப் போல், மனம் விரும்பும் பண்டத்தின் ருசி போன்றதொரு உணர்வு தான். உணர்வை வார்த்தைகளாய் வெளிப்படுத்துவது ஏறக்குறைய இயலாத விஷயம்///
மிகச்சரியான வார்த்தைகள், பல புத்தகங்களை படித்துவிட்டு
நண்பர்களிடம் பகிரும்போது மனதில் உள்ளதை வார்த்தையாக
சொல்ல முடியாமல் தவித்ததுண்டு.
நல்ல அறிமுகம்
நல்லா எழுதி இருக்கீங்க சங்கர்.
Post a Comment