Friday, May 1, 2009

பயணங்களும் மனிதர்களும்

சற்றே பெரிய பதிவு தான் கொஞ்சம் பொறுமையுடன் படித்து தான் பாருங்களேன்.

என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய சித்தரஞ்சன் பேசுகிறேன், முதல் முறையாக என்னுடைய ஒரு நாள் பயண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பயணங்கள் என்றைக்குமே எனக்கு சுகமானது தான் ஏனென்றால் எப்பொழுதுமே ஒரு இனிய சூழலில் அதிகம் வருத்திக் கொள்ளாமல் சுகமாக பயணம் செய்பவன் நான். ஆனால் நேற்றைய பயணம் எனக்கு முற்றிலும் ஒரு புதிய உலகத்தை காட்டியது, உலகம் எவ்வளவு அழகானது என்பதை காட்டியது, இந்த அழகை இவ்வளவு வருடங்கள் காணாமல் குருடாய் இருந்ததை எண்ணி மிகவும் வேதனை கொள்கிறேன்.



நான் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட வழித் தடத்தில் பேருந்தில் பிரயாணம் செய்வேன், அந்த வழித்தடம் எப்பொழுதும் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வந்து கொண்டே இருக்கும் அதனால் அனேகமாக நான் ஏறியவுடன் அமர இருக்கை கிடைக்கும். உடனே காதில் Earphones மாட்டிக் கொண்டு ஏதாவது புத்தகம் படித்தபடியே எனது 45 KM தூர பயணத்தை நிறைவு செய்வேன் அல்லது அவர்கள் ஒளிபரப்பும் ஏதாவது மொக்கை படத்தை (நான் பார்த்தவரையில் நூற்றுக்கு 95% டாக்டர் அவர்களின் படத்தை தான் போட்டு மக்களை கொல்வர், ஏன் இந்த கொலைவெறியோ?????) பார்த்துக் கொண்டே செல்வேன். அதாவது என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று சிறிதும் தெரிந்து கொள்ளாமல் பிரயாணம் செய்வேன்.

ஆனால் நேற்று நல்ல முகூர்த்தம் என்பதால் அந்த ஊரெங்கும் கல்யானமயம் அதனால் எங்கும் போக்குவரத்து நெரிசல் பேருந்துகளில் அதற்கு மேல் நெரிசல், நேரம் என்னை துரத்திக் கொண்டிருந்ததால் வேறு வழி இல்லாமல் முழுவதுமாக நிரம்பி தள்ளாடிக் கொண்டு வந்த அந்த அரசுப் பேருந்தில் ஏறினேன், படிக்கட்டில் ஒரு கால் மட்டும் வைக்க தான் இடம் இருந்தது அதாவது ஒரு கால் மேல் இன்னொரு கால் வைத்து நின்று கொண்டிருந்தேன் (கல்லூரி படிக்கும் பொழுது குரங்கு போல் தொத்திக் கொண்டு சென்றது, அதற்குப் பிறகு இப்பொழுது தான்) நல்ல வேலை கதவு இருந்ததால் சற்றே ஆறுதல். தொடர்ந்து ஐந்து ஊர்களில் பேருந்து நிற்கவே இல்லை அவ்வளவு கூட்டம், சரி என்ன படம் ஓடுகிறது என்று பார்த்தால் நம்ம குருவி, யப்பா முடியலடா சாமி காமெடி என்ற பெயரில் அவர்கள் பண்ணும் தொல்லை பிறகு ஒரு காட்சியில் அவர் லிஃப்ட் ஒன்றில் மாடிக் கொள்கிறார் கடைசி மாடியில் இருந்து அந்த லிஃப்ட் அறுந்து கீழே விழுகிறது என்னடாவென்று பார்த்தால் அப்படியும் குருவிக்கு ஒன்னும் ஆகவில்லை, அடப் போங்கடா அவனவன் தொங்கிட்டு இருக்கான் இது வேற............

சரியென்று இந்த கன்றாவியெல்லாம் பார்க்கவேண்டாம் என்று வெளியில் என்னுடைய பார்வையை செலுத்தினேன், பருவ மங்கையர் காதில் அணிந்திருக்கும் லோலாக்கு போல பச்சை, இளம் சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு நிறத்தில், மஞ்சள் ஆகிய நிறங்களில் மாமரங்களில் உள்ள மாங்கனிகள் குலுங்குவது, புகைப் படம் எடுக்க உயர வரிசையில் நிற்பது போல் நான்கு பனை மரங்கள், நடு நடுவே சிறிய குன்றுகள், கத்தாளை செடிகள், ஒரு அடியில் தொடங்கி நடுவில் இரண்டாக பிரிந்து வளர்ந்த தென்னை மரம், சில மைல்களுக்கு ஒன்றாக ஒரு செல்போன் கோபுரம், இடையிடையே சிறு சிறு கிராமங்கள் இளநரையை போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டின. கீழே குனிந்து பார்த்தால் சாலை என்னவோ நீர் போல இருந்தது, இப்படிப்பட்ட ஒரு நிலப் பரப்பில் நான் சென்ற பேருந்து உறுமியவாறே அமைதியை கிழித்துக் கொண்டு சென்றது. நம்மைச் சுற்றி இருக்கும் இடம் எப்பொழுதுமே ஒரே மாதிரி தான் இருக்கிறது அதை பார்க்கும் நம் கண்கள் தான் வேறுபடுகின்றன, இந்த உன்னதமான உண்மையை நான் புரிந்து கொண்டேன். விவசாயம் செய்ய இயலாத செம்மண் நிலம் தான் வழி நெடுக இருந்தாலும் அந்த நிலப் பரப்பு ஏனோ என் கண்களுக்கு விருந்தாகத் தான் இருந்தது. அந்த பிரயாணத்தின் ஒரு கரும் புள்ளியாக ஒரு சம்பவம் நடந்துக் கொண்டே இருந்தது, நான்கு நண்பர்கள் அதில் ஒருவர் நல்ல போதையில் இருந்தார், அவர் தனது நண்பர்களுடன் பேசிய உரையாடல்களை இங்கு எழுத முடியாது அவ்வளவு தரம் தாழ்ந்தவை மற்ற மூன்று நபர்களும் தலையை தூக்க முடியாமல் வெட்கினர்.

பிறகு அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு ரயில் நிலையம் வந்தேன்,ஒரு சரக்கு ரயில் உள்ளே நுழைந்தது, அப்பப்பா எவ்வளவு விதமான ஒலிகளை தன்னுடன் இழுத்து வந்தது, கிரீச், தடக் தடக் போன்று ஒவ்வொரு பெட்டியும் என்னை கடந்து சென்ற பொழுது ஏதோ காணாததை கண்டவன் போலவும் கேட்காததை கேட்டவன் போலவும் நின்று கொண்டிருந்தேன், ஒரு வழியாக அது நின்றவுடன் அங்கு நிலவிய அமைதி?? அது தான் மயான அமைதியோ??. அங்கும் நான் கண்ட காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு அந்நிய நாட்டுக்கு சென்ற மாதிரி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தேன், இத்தனைக்கும் கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு மிகவும் பரிட்சயமான இடம் தான். ஒரு மழைத் தொடர் அதன் அடிவாரத்தில் இந்த ரயில் நிலையம், சூரியனின் கதிர்களை மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைக்க முற்பட்டதால் அந்த மலைப்பரப்பில் சில இடங்களில் பொன் நிறமாகவும் சில இடங்களில் இருளாகவும் காட்சி அளித்தது. குரங்குகளுக்கு அங்கு பஞ்சமே இல்லை, அப்பொழுது தான் வந்து சென்ற காகிநாடா எக்ஸ்பிரஸ் வண்டியில் இருந்த மக்கள் வீசிச் சென்ற ஆரஞ்சு பல தோல், ஆப்பில் ஜூஸ் டப்பாக்கள், உணவு பொட்டலங்கள் இன்னும் என்னன்ன குப்பை போட முடியுமோ அவ்வளவும் அந்த இடத்தில் கிடந்தது. இவற்றை அந்த குரங்குகள் மேய்ந்து கொண்டிருந்தன, காட்டில் நிஜ பழங்களை தின்று கொண்டிருந்த வானரப் படை இந்த ஜூஸ் டப்பாகளை பிய்த்து அந்த ஜூஸ் நக்குவதை பார்க்கும் பொழுது நாம் அவைகளுக்கு செய்யும் அநீதியை எண்ணி வெட்கினேன்.

இந்த இடத்தில் நான் ரயில் பயணிகள் மீது கோபம் கொள்கிறேன், இப்பொழுதெல்லாம் பகல் ரயில்களில் கண்டிப்பாக கதவருகே ஒரு குப்பை கூடை வைத்திருக்கின்றனர் அதே போல் ரயில் நிலையங்களிலும் நிறைய இடங்களில் குப்பை கூடைகள் இருக்கிறது உங்களுக்கு அதில் போடுவதில் அவ்வளவு சிரமமாக இருக்கிறதா?? ஒவ்வொரு ரயில் வந்து செல்லும் பொழுதும் அங்கே அந்த துப்புரவு தொழிலாளர்கள் அந்த குப்பையை சுத்தம் செய்ய படும் பாடு தான் எத்தனை?? பிறகு என் அருகில் ஒரு ஐந்து நபர் குழு வந்தது, அதில் இருவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர் சரி ஏதோ நண்பர்களுக்குள் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர் என்று பார்த்தால் தங்களின் சில்மிஷங்களை துவங்கினார். ஒரு பெண் வந்து கொண்டிருந்தார் இவர்கள் இருவரும் அந்த பெண் வரும் வழியில நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிறிய இடம் விட்டு நின்று அந்த பெண்ணையே வெறித்து பார்த்து இவர்களுக்குள் ஏதோ பேசினார் பாவம் அவர் மிகவும் பயந்து போனார், ஏன்டா நாய்களா உங்கள் வீட்டு பெண்களை யாராவ்து இவ்வாறு செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?? மனிதர்கள் பல நேரங்களில் ஆறாவது அறிவை பயன்படுத்துவதே இல்லை.

பிறகு அரை மணி நேரம் தாமதமாக வந்த ரயிலில் ஏறி அமர்ந்தேன், எப்பொழுதுமே இந்த பிரயாணங்களில் நான் காணும் இந்த Vendor's எனப்படும் உணவு வகை விற்கும் நபர்கள் ஒரு நாளைக்கு விடியற் காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு அந்த ரயில் கோயம்புத்தூர் அல்லது பெங்களூரு சென்று இரவு சென்னை திரும்பும் வரை அவர்கள் ஒவ்வொரு பெட்டியாக எத்தனை முறை தான் செல்வரோ அது ஆண்டவனுக்கே வெளிச்சம். இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ரயிலில் நடை பயணம் தான்.




பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய கதாவிலாசம் புத்தகம் படிக்க எடுத்தேன், அதில் சரியாக "நிலா பார்த்தல்" கதை வந்தது, நான் காலையில் என்ன ஒரு அனுபவத்தை பெற்றேனோ அதே போல் ஆசிரியர் இரவில் நிலவை வைத்து பெற்றுள்ளார். மிக அருமையாக இருந்தது, அதுவும் உற்சாகமாக இருந்தது. அப்பொழுது நான் சிறுவனாக இருக்கையில் ரிக்ஷாவில் செல்கையில் வானத்தில் அந்த நிலவை பார்த்து எத்தனையோ நாட்கள் ஆனந்தம் அடைந்திருக்கிறேன் அதை எண்ணி மகிழ்ந்தேன். ஆனால் இன்றைய சிறுவர்கள் பொழுதுக்கும் TV கணினி என்று நேரத்தை வீனடிக்கிறனர். இப்படி நான் நினைவுகளில் மூழ்கியிருக்கும் பொழுது ஒரு சம்பவம் என் நிம்மதியை கெடுத்தது.

நான் அமர்ந்த இருக்கைக்கு முன் இருக்கையில் ஒரு 38-40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார் அவரது இரு சிறுவயது (ஒருவர் 8 மற்றொருவர் 5) பெண் குழைந்தைகள் அதற்கு முன் இருக்கையில் அமர்திருந்தனர். அந்த பெண்ணின் நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் அவர் அணிந்திருந்த உடையை பார்க்கும் பொழுது அவர் ஒரு நவநாகரீக மங்கை என்று புரிந்து கொண்டேன். (ஆமாம் அதென்ன பாண்ட் சட்டை போட்டால் நவநாகரீகமா? அப்ப சேலைக் கட்டினா??? எவன்யா இந்த வார்த்தைய கண்டுபிடிச்சான்??) இப்படி ஒரு கோபம் எனக்கு அந்த பெண்ணின் நடவடிக்கையால் ஏற்பட்டது, தன் பௌர்ணமி நிலவு போன்ற முகமும் ஒளி பொருந்திய கண்களையும் ஓட்டை பல்லு சிரிப்புடன் விளங்கிய அந்த சிறு குழந்தையை அவர் படுத்திய கொடுமையில் எனக்கு மட்டுமல்ல அவரை சுற்றி அமர்ந்திருந்த அனைவருக்கும் பளார் என்று ஒரு அரை விடனும் போல் தான் இருந்தது. குழந்தை சிரிக்காதா அதை கானமாட்டோமா என்று அனைவரும் ஏங்குவர் ஆனால் இந்த அம்மணியோ அந்த குழந்தை சிரிக்கின்றது என்று சதா அதை போட்டு திட்டியும் அடித்தும் துன்புறுத்தினார், அந்த குழந்தை சிரிப்பது இவருக்கு மானம் போகிறதாம் அதனால் நல்வழிப் படுத்துகிறாராம், உன்னை தானம்மா நல்வழிப் படுத்த வேண்டும். வாழ்நாள் பூராவும் அந்த குழந்தை படப்போகும் இன்னல்களை நினைத்து என் உள்ளம் கனத்தது.

இதைக் காண முடியாதவனாக நான் இருக்கையை விட்டு வந்து கதவருகே நின்று கொண்டேன், Walkmanil பாட்டு கேட்போமென்று போட்டேன். முதலில் சூர்யா சமீராவுடன் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமலை......." பட்டை அவர்களுடன் சேர்ந்து பாடியவாறே தலையசைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக "அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை......" என்று சூர்யாவுடன் அழுதுகொண்டிருந்தேன். ஒரு நொடி இன்பம் மறு நொடி சோகம் என்னடா வாழ்கை இது என்று நொந்தவாறே அன்றைய நிகழ்வுகள் மனிதர்களை திரும்பிப் பார்த்தேன், வந்து சேர்ந்தது க்ரிஷ் குரலில் "நேற்று என்பது கையில் இல்லை நாளை என்பது பையில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு......." எவ்வளவு சரியான வரிகள். இவ்வாறாக ஒரு கலவையான நினைவுகளுடன் இனிதே வீடு வந்து சேர்ந்தேன்.

இந்த பதிவை பற்றிய உங்கள் பொன்னான இடுக்கைகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். இன்னொரு பயணத்தில் சந்திப்போம். நன்றி.

13 comments:

லோகு said...

இருங்க படுச்சுட்டு வர்றேன்..

லோகு said...

அருமை, நல்ல முயற்சி..

லோகு said...

//(நான் பார்த்தவரையில் நூற்றுக்கு 95% டாக்டர் அவர்களின் படத்தை தான் போட்டு மக்களை கொல்வர், ஏன் இந்த கொலைவெறியோ?????)//

அவர் படத்த போட்ட ஓவர் சவுண்டா இருக்கும்.. ஓட்டுனர் தூங்காம இருப்பார் அதுக்குத்தான்.

சித்து said...

நன்றி லோகு

கடைக்குட்டி said...

ரெயிலில் குப்பை போடுறவங்களப் பத்தியெல்லாம் யோசிச்சு இருக்கீங்களா??? நீங்க உண்மைலேயே நல்லா வருவீங்க,..

மத்தபடி.. பதிவு சூப்பர்.. என் பொன்னான வாக்கு உங்களுக்கே..

சித்து said...

நன்றி கடைக்குட்டி அவர்களே, இன்று காலை முதல் மூன்று முறை உங்கள் பதிவிற்கு வந்தேன் ஆனால் "Malware Detected" என்று வந்து பிறகு கணினி Hang ஆகிறது.

ஜெட்லி... said...

மச்சி உன் பயணக்கட்டுரை சூப்பர்..... உன்கூடவே வந்த மாதிரி ஒரு பீலிங்க்ஸ்.

Sri said...

Arumaiyana pathivu...

சித்து said...

நன்றி ஸ்ரீனி

Bala De BOSS said...

சித்து, அருமையான பயணக்கட்டுரை நண்பா. நானே பயணம் செய்தது போல இருந்தது. உன்னைப்போலவே எல்லோரும் சிந்தித்தால் நம் நாடு வேகமாக முன்னேறும். குப்பை போட்வதை தவிர்த்தல், குடித்து விட்டு அநாகரிகமாக நடத்தல் இதையெல்லாம் பார்க்கும்போது கோபமாக வருகிறது. எப்போதுதான் நம் மக்கள் திருந்துவார்களோ!!!!!

உன் முயற்சிக்கு பாராட்டுக்கள் நண்பா.

சித்து said...

நன்றி பாலா தொடர்ந்துவா இன்னும் நாம் பயணம் செய்ய வேண்டியது நிறைய் இருக்கிறது.

ஜெட்லி... said...

பாலா மச்சான் இந்த மாதிரி குடிகாரங்களா என்ன பண்றது....
நான் கூட காரைக்குடில நேர்ல பார்த்தேன்....

On7June said...

Cheers to Chithu. Nice article. I really liked the similies you used to describe the nature while you were travelling in crowded bus.If you keep on writing you could be a good writer. Keep posting.
@ஜெட்லி
Nerla paathiye chithu kitta sonniya.