Friday, May 29, 2009

சோலையார்பேட்டையும் சுட்டெரிக்கும் வெயிலும்.

இந்த பதிவு சென்னை, வேலூர் இன்னும் பிற வெயில் வாட்டி எடுக்கும் பகுதிகளில் வசிக்கும் பதிவர்களின் வெறுப்பையும் வயித்தெரிச்சலையும் பெறவே எழுதப் பட்டது.

நேற்று முழுவதும் நல்லா வெயிலில் ஊர் ஊராக (நாய் மாதிரி தான்) அலையற வேலை, தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து ஏறி இன்னொரு பேருந்து மாறி இப்படியாக ஒரு பயணம் மேற்கொண்டு இறுதியாக பிருந்தாவன் விரைவு வண்டி ஏற சோலையார்பேட்டை (அதாங்க ஜோலார்பேட்டை) வந்து சேர்ந்தேன் (நொந்து நூடுல்ஸாக). இந்த ஊரைப் பற்றியும் ரயில் நிலையத்தைப் பற்றியும் ஏற்கனவே நான் எழுதிய பயணக் குறிப்பை படிக்கவும் , அப்படி இருந்த இடம் இன்று பாலைவனமாக சுட்டது, கண்கள் அப்படியே சிவந்து அவிந்து போயின.

பிறகு ஒரு நிழல் பார்த்து ஒதுங்கி திரு.ஜே.எஸ்.ராகவன் அவர்களின் "தத்தக்கா புத்தக்கா" புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தில் மூழ்கி விட்டதால் சுற்றி நடப்பதை கவனிக்கவில்லை (கருப்பு கண்ணாடி வேறு) . சற்று நேரத்துக்கெல்லாம் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது,. கண்ணாடியை கழட்டிப் பார்த்தால் வெயில் சுத்தமாக மறைத்துக் கொண்டு கார் மேகங்கள் ஏலகிரி மலையை முட்டிக் கொண்டு இருந்தது. ஒரு ஐந்து நிமிடங்களில் அங்கே சூழ்ந்து இருந்த வெட்கை நாலு கால் பாய்ச்சலில் ஓடி விட்டது, "தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா ........." இப்படியாக நிலைமை மாறியது.

சிறிது நேரத்துக்கெல்லாம் லேசாக மழை தூர ஆரம்பித்தது, நான் எழுவதாக இல்லை (பின்ன இதுக்காக தானே தவம் இருந்தேன்) ஆனால் மழை மிக வேகமாக அடிக்க ஆரம்பித்தது, ஒரு பக்கம் அதிரடி தாக்குதல் அதே நேரத்தில் குற்றால சாரல் வேறு. சும்மா ஒதுங்கி நின்றிருந்த அனைவரையும் இந்த சாரல் குளிப்பாட்டியது. அடுத்ததாக நான் கூறப்போகும் விஷயம் தான் உங்கள் Stomachburn-i (அதாங்க வயித்தெரிச்சல்) கிளப்பும்.

திடீரென தட தட, தம தம, சல் சல் இப்படி பல மெல்லிய சத்தங்கள் பிறகு அதுவே மிக பலமாக, ஒன்றுமே விளங்கவில்லை எனக்கு என்னவென்று பார்த்தால் ஆலங்கட்டி மழையாம். என்னுடைய இருபத்தைந்து வருட வாழ்க்கையில இதை முதல் முறையாக நான் அனுபவிக்கிறேன், ஹைய்யோ என்ன ஒரு அழகு என்ன ஒரு குளிர்ச்சி என்ன ஒரு சந்தோசம் அங்கு இருந்த அனைவரின் முகத்திலும். ஒவ்வொரு ஐஸ் கட்டியும் ஒரே மாதிரி அளவில், வடிவில், குளிரில், (ஒரு ஐஸ் கட்டியை எடுத்து சுவைத்து பார்த்தேன் "அட போங்கடா நீங்களும் உங்கள் Mineral water-um") சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த நடை மேடை முழுவதும் வெள்ளியை உருக்கி முலாம் பூசியது போல் அழகாக காட்சியளித்தது. என்னதான் ரெண்டு கழுதை வயது ஆனாலும் (ஆமா இதென்ன கணக்கு??) ஒரு சின்ன குழந்தையை போல அதை அழகாக ரசித்துக் கொண்டே இருந்தேன்.


பிறகு ரயில் வந்து அதில் ஏற ஆனா சுமார் ஐந்து நொடிகளுக்குள் நன்றாக நனைந்து விட்டேன் என்றால் பாருங்களேன், உள்ளே எல்லோரும் என்ன ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆலங்கட்டி மழையின் இசைக் கச்சேரி ஒரு பத்து நிமிடம் தொடர்ந்தது பிறகு வாணியம்பாடி வரை மழை பெய்தது அதற்குப் பிறகு அதற்கான ஒரு சுவடு கூட தெரியல. நேற்றைய சென்னையின் வெப்பம் 41. சரி சரி நீங்க எல்லோரும் என்ன கொலை வெறியோட பார்ப்பது தெரியுது அதே வெறியோட ஒரு ஓட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க பார்க்கலாம்.

நன்றி.
சித்து.

3 comments:

SUREஷ் said...

அழகான படங்கள்

ஜெட்லி said...

நீ கொடுத்து வச்சவேன் மச்சி...
அதான் ஆலங்கட்டி மழையை அனுபவச்சிரிக்க

Siva Ranjan said...

இங்க மதுரவாயில் அருகே இதே அனுபவம் எனக்கு பத்து வருடங்கள் முன் கிடைத்தது சரவணா.. உங்க பதிவு எனக்கு அந்த அழகான நினைவுகளை கொண்டு வந்துடுச்சு.... பாகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி..:)