Wednesday, December 9, 2009

தலைவர் வரார்

உச்சியில் சூரியன் எரிந்து கொண்டிருந்தது, வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டே, காலியாய் கிடந்த நெடுஞ்சாலையில் நெளியும் கானலை பார்த்தபடியிருந்தேன். கடந்த ஒரு மணி நேரமாய் இந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன், முதுக்குக்கு பின்னே நீளும் சாலையில், ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கதறி அடங்கிவிட்ட ஒலிப்பான்களுடன் நிற்கும் வாகனங்கள். போக்குவரத்து நிறுத்தப்பட்டு பதினைத்து நிமிடங்களாகிறது. ஒவ்வொரு நிமிடமும் எரிச்சல் கூடிக்கொண்டே வந்தது. நூறடி தள்ளி நின்ற சக காவலர் நட்புடன் சிரித்தபடி என்னை நோக்கி வந்தார். பெயர்பட்டை 'மதியழகன்' என்றது.

என்னருகே வந்தவர் என் பெயரை பார்த்துவிட்டு பேசத்தொடங்கினார், "சொந்த ஊர் திருநெல்வேலியா?" என்றார், "எப்படி கண்டுபிடிச்சீங்க!" கேட்டேன் நான், "அதுதான் பேரும், முகமும் சொல்லுதே" என்று சிரித்தவர், மேலும் கேட்டார், "இப்போதான் சேர்ந்து இருக்கீங்களா?"
"இல்லை சார், இரண்டு வருடம் மணிமுத்தாறு காம்பில் (Camp), ரிசர்வில் இருந்தேன், இந்த மாதம் தான் இங்கே போஸ்டிங் ஆச்சு", இப்போது நான் கேட்டேன் "ஒரு மணி நேரம் ஆச்சு, இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி நிற்கணும் சார்?", பதில் சொல்லாமல் "இப்படி நிக்குறது இதுதான் முதல் தடவையா?" என்று கேட்டார், "ஆமாம் சார்" சொன்னேன் நான், "அது தான் இப்படி கேக்குறீங்க, இன்னிக்கு பரவாயில்லை, சில நாட்கள் நாலஞ்சு மணிநேரமெல்லாம் காத்திருக்க வேண்டியிருக்கும்", என்றார், அவர் சகஜமாய் பேசத் தொடங்கியதை பார்த்து கேட்டேன், "நீங்க எந்த ஊர் சார், எத்தனை வருஷமா சர்வீஸ்ல இருக்கீங்க?", அவர் சொன்னார், "நான் சென்னைக்காரன் தான், சர்வீஸ் பத்து வருஷம் ஆச்சுப்பா, இப்பதான் எஸ்ஐ எக்ஸாம் எழுதியிருக்கேன், பார்க்கலாம்".

வரப்போகும் தலைவரின் ஊழல் ஜாதகம் மனதில் தோன்றி எரிச்சல் மண்டிக்கொண்டிருந்தலும், அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்து தெரியாததால், தயக்கம் விலகாமல் பொதுப்படையாய் கேட்டேன், "இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இப்படி தலைவர் வரார், அமைச்சர் வரார்ன்னு காவல் நிக்கப் போறோம்", கேட்டது தான் தாமதம், "தலைவனா? இவனா? அப்போ காமராஜரையும் கக்கனையும் என்ன சொல்லுவீங்க? இவன் என்ன நாட்டுக்கு தியாகமா பண்ணினான்? இவன் மகனுக்கும் பேரனுக்கும் அவனோட பையனுக்கும் சேர்த்து இந்த நாட்டுல பாதிய வாங்கிட்டான், இப்போ மட்டுமென்ன இவன் மக்கள் சேவைக்கா போய்க்கிட்டிருக்கான்? ஆயிரம் கோடி ஊழலுக்கு ஆறு வருடமாய் நடக்கும் விசாரணைக்கு கோர்ட்டுக்கு போய்க்கிட்டிருக்கான், நம்ம ஜனநாயகம் இப்படி இருக்கும் வரை இவன் கோர்ட்டுக்கு போறதுக்கென்ன, குளிக்கப் போறதுக்குக்கூட நம்மை காவலுக்கு நிற்க சொல்வாங்க" என்று பொரிந்து தள்ளிவிட்டார். "சரி சார் நாமதான் வாங்குற சம்பளதுக்காகவும் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காகவும் இப்படி நிக்குறோம், ஆனா இந்த பொதுமக்கள் என்ன தப்பு செஞ்சாங்க? இவுங்களை எதுக்காக காக்க வைக்கணும்?" என்று கேட்டேன், "எல்லாம் ஒரு பாதுகாப்புக்க்காகதான், கொஞ்சம் நாள் ஆச்சுன்னா உங்களுக்கே புரியும்" என்று கூறி மையமாய் சிரித்தபடி அவருடைய இடம் நோக்கி நடந்து சென்றார்.

இன்னும் பத்து நிமிட காத்திருப்புக்கு பின், இருபது கார்கள் முன்னும் பின்னும் வர நடுநாயகமாய் வந்த காரில் அமர்ந்து செய்தித்தாள் படித்தபடி கடந்து சென்றார் தலைவர். ஊர்வலம் என்னைத் தாண்டி முந்நூறடி சென்றிருக்கும், கண்ணிமைக்கும் நேரத்தில், எங்கிருந்து வந்தான் என்றே புரியாதபடி ஒருவன், சரியாய் தலைவரின் வண்டியின் குறுக்கே பாய்ந்தான், வெடித்தான். அவனோடு சேர்ந்து தலைவரின் வண்டியும், உள்ளிருந்த அனைவரும் வெடித்துச்சிதற, அதிர்ச்சியில் ஒருநிமிடம் உறைந்த நான், சுதாரித்து அதை நோக்கி ஓடினேன், மதியழகனோ எனக்கு முன் மிக நிதானமாக நடந்து கொண்டிருந்தார். அவரருகே சென்ற நான் "வேகமா வாங்க" என்றேன், அப்போதும் அந்த புன்சிரிப்பை விடாத அவர் சொன்னார் "அவன் பண்ணின தப்புக்கு அவன் தண்டனை வாங்கிக்கிட்டான், அவனுக்கு காவலுக்கு போன தப்புக்காக நம்ம ஆளுங்க நாலு பேரும் உயிரவிட்டுட்டங்க, இந்த நாயோட பொதுமக்களையும் போக விட்டா இன்னும் எத்தனை பேர் செத்திருப்பாங்க? இப்போ புரியுதா தலைவர்கள் வரும்போது போக்குவரத்த ஏன் நிறுத்துறோம்ன்னு?"

நன்றி
சங்கர்

4 comments:

சுசி said...

அட ஆமா.. இதுக்குத்தானா அது..

நிஜமாவே நல்லா எழுதி இருக்கீங்க.

Chitra said...

//ஆயிரம் கோடி ஊழலுக்கு ஆறு வருடமாய் நடக்கும் விசாரணைக்கு கோர்ட்டுக்கு போய்க்கிட்டிருக்கான், நம்ம ஜனநாயகம் இப்படி இருக்கும் வரை இவன் கோர்ட்டுக்கு போறதுக்கென்ன, குளிக்கப் போறதுக்குக்கூட நம்மை காவலுக்கு நிற்க சொல்வாங்க"// ............ ஆத்தாடி...... வாழ்க, ஜனநாயகம்!

பெசொவி said...

எதிர்பாராத கருத்துடன் கூடிய முடிவு. கதை மிக அருமை. வாழ்த்துகள்!

புலவன் புலிகேசி said...

//இந்த நாயோட பொதுமக்களையும் போக விட்டா இன்னும் எத்தனை பேர் செத்திருப்பாங்க? இப்போ புரியுதா தலைவர்கள் வரும்போது போக்குவரத்த ஏன் நிறுத்துறோம்ன்னு?"//

இதான் மேட்டரா? இது தெரியாம போச்சே...நாட்டுல இந்த தலைவனுங்க தொல்ல தாங்கலப்பா..