Wednesday, December 30, 2009

புத்தகத்திருவிழாவுக்கு போன கதை

பலரும் 2009 குறித்த அவரவர் பார்வைகளை பதிவுசெய்து கொண்டிருக்கின்றார்கள், அந்த வரிசையில் இது என்னுடைய பார்வை. இந்த ஆண்டில்தான், வெகுநாள் விருப்பமான, சில நல்ல புத்தகங்கள்  (மோகமுள், விஷ்ணுபுரம் உட்பட) படித்து முடித்தேன். இந்த ஆண்டில தான் ஒரு பெரிய சாதனையும் செய்தேன், ஒண்ணுமில்லீங்க, ஒண்ணுக்கு ரெண்டா ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன் (சும்மா ஒரு விளம்பரம்)

கல்லூரி படிப்பிற்காக 2001லேயே சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்ட போதும், முதல் முதலாய் புத்தக சந்தைக்கு சென்றது 2005-ல் தான், அன்றைய பொருளாதார நிலைமையால, ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு "ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்" மட்டும் வாங்கிட்டு வந்தேன். அடுத்து வந்த வருடங்களில் சம்பளமும் கூட ஆரம்பிச்சது, வாங்கும் புத்தகங்களும் அதிகமானது. ஆனாலும் 2008 வரை, மனசு விரும்பும் அளவு வாங்க பர்சு இடம் கொடுக்கவில்லை. 2008-ல் தான் சென்ற இடமெல்லாம் புத்தகம் வாங்க ஆரம்பித்தேன். இந்த பைத்தியம் கொஞ்சம் கொஞ்சமாய் முத்திப்போய், கடந்த புத்தக சந்தையில் போட்ட பட்ஜெட் எகிறி, கிட்டதட்ட, போட்டிருந்த சட்டையை கழற்றி கொடுக்குமளவு வாங்கினேன் (நன்றி, தலைவர் சுஜாதா).இதுவரை புத்தக திருவிழாவிலும், மற்ற இடங்களிலும் வாங்கிய புத்தகப்பட்டியல் இதோ, விருப்பபட்டால் நீங்களும் வாங்கலாம்,

மோகமுள் - தி ஜானகிராமன் - ஐந்திணை - Rs 330
இந்த அற்புத நாவலில் அடிநாதமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்நாடக இசைக் கச்சேரியை நிச்சயமாய் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கேட்பது கூட என்னால் முடியாத காரியம், ஆனால் நாவலை வாசிக்கும்போது உடலில் ஏற்படும் சிலிர்ப்பும், மனதில் உண்டாகும் நிறைவும், அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று.

மரப்பசு - தி ஜானகிராமன் - ஐந்திணை - Rs 80
மீண்டும் தி.ஜா., மீண்டும் இசை, இன்னுமொரு அற்புதம். சராசரி மனதிற்கு அதிர்ச்சி தரும் கதைக்கரு,

ஜேஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி - காலச்சுவடு - Rs 150
படிக்கும்போது மனதில் தோன்றிய சில கேள்விகளுக்கு இன்னும் பதில் தேடிக்கொண்டிருக்கிறேன். **"இந்நூல் இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் நாம் மக்கள் கற்றுத் தேறும் பொற்காலத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவாயிலாகும்" என்று சுந்தர ராமசாமியே கூறாமல் இருந்திருந்தால் நாம் அதை சொல்லியிருக்க முடியும்**

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி - காலச்சுவடு - Rs 150
ஜேஜே அளவுக்கு என்னை கவரவில்லை என்றாலும், சுராவின் மொழி நடைக்காகவே படிக்கலாம்.

சாயாவனம் - சா கந்தசாமி - காலச்சுவடு - Rs 150
பன்னிரண்டு வருடங்களுக்கு முன் தூதனில் நாடகமாக பார்த்ததிலிருந்து மனதின் அடியாழத்தில் படிந்து விட்ட நாவல்.  நான் வாங்கியது ஒரு பழைய புத்தகக் கடையில், முப்பது ரூபாய்க்கு (மாணவர் பதிப்பு, கவிதா பப்ளிகேஷன்)

கானல் தெரு - கசீ சிவகுமார் - ஸ்ரீ விஜயம்/சந்தியா பதிப்பகம் - Rs 50
கல்கியில் தொடராய் வெளிவந்த கசீ சிவக்குமாரின் குறுநாவல். புத்தகமாய் வெளிவந்த விஷயம் தெரியாமல் கடந்த இரண்டு புத்தக சந்தைகளில் தேடி கடைசியில், பதிப்பகத்திலேயே நேரடியாய் சென்று வாங்கிய கதை குறித்து தனியாய் பதிவெழுதுகிறேன்

என்றும் நன்மைகள் - கசீ சிவகுமார் - கிழக்கு பதிப்பகம் - Rs 60
கானல் தெருவில் சுற்றிய மயக்கத்திலிருந்து தெளியாமலே வாங்கிய சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பிலுள்ள "முச்சந்தியா ராகம்" குறித்தும் ஒரு பதிவெழுத எண்ணம்.

கள்ளிக்காட்டு  இதிகாசம் - வைரமுத்து - திருமகள் நிலையம் - Rs 110
நண்பன் நடராஜ் பரிசாய் தந்தது. வைரமுத்துவின் கவிதைகளின் மேல் ஈடுபாடு எதுவுமின்றி இருந்த (இருக்கும்) எனக்கு, அவரது புதியதொரு பரிமாணத்தை காட்டிய கதை. பேய தேவரின் மேல்விழுந்த சுவற்றின் கணம் இன்னும் மனதில் உள்ளது.

வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன் (தமிழில்:கண. முத்தையா) - தமிழ்ப் புத்தகாலயம் - Rs 75 *
 கானல் தெருவில் வரும் ஒரு வரியில் சொல்லப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தை ஒரு பழைய புத்தக கடையில் இரண்டு ரூபாய்க்கு கண்டெடுத்தேன். சற்றும் நெருடாத மொழிபெயர்ப்பு (ராகுல்ஜியை நம்பி கடந்த சந்தையில் வாங்கிய மொக்கைகள் மூன்று, ஊர் சுற்றி புராணம் (எஸ்ராவும் காரணம்), மனித சமுதாயம், ரிக் வேதகால ஆரியர்கள்).

காமக் கடும்புனல் - மகுடேஸ்வரன் - யுனைடெட் ரைட்டர்ஸ் - Rs 100
ஆணின் பார்வையிலேயே எழுதப்பட்டிருப்பினும், காமம் என்ற ஒரே பாடுபொருள் கொண்ட ரசிக்கும்படியான (சில நேரம் சங்கடப்படுத்தும்)  400 கவிதைகள்.

சத்திய சோதனை - காந்தி (தமிழில் : வேங்கடராஜுலு)நவஜீவன் பதிப்பகம் - Rs 30
அவருடைய கொள்கைகள் குறித்த முழு மன ஒப்புதல் இன்றுவரை இல்லை எனினும், அவற்றை அவர் செயல்படுத்திய விதம் பிரமிப்புக்குரியது. இன்னுமொரு சிறந்த மொழிபெயர்ப்பு

கோபல்ல கிராமம்  - கி.ராஜநாராயணன் - காலச்சுவடு - Rs 100
**தெலுங்கை தாய்மொழியாக கொண்டு, தென்னிந்தியாவின் ஆழத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்து, இந்த கலாச்சாரத்தில் ஒன்றி விட்ட ஒரு தனிப்பட்ட இனத்தவரின் கதை இது**

கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன் - அன்னம் - Rs 120
முதல் பாகத்தின் சுவாரசியம் சிறிதும் குறையாமல் தொடரும் இந்த புத்தகம்.

வாஷிங்டனில் திருமணம் - சாவி - நர்மதா பதிப்பகம் - Rs 60
அம்மாவின் ஆசைக்காக வாங்கிய புத்தகம் (விசிறி வாழையை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன், யாருக்கும் தெரிந்தால் சொல்லலாம்)

சுவாமியும் சிநேகிதர்களும் - ஆர்கே நாராயண் (தமிழில்:வி கிருஷ்ணசுவாமி) - விகடன் பிரசுரம் - Rs 90
மால்குடி டேஸ் பார்த்த ஞாபகத்தில் வாங்கினேன். சுவாரசியமான நடை.

தத்தக்கா புத்தக்கா - ஜேஎஸ் ராகவன் - கிழக்கு பதிப்பகம் - Rs 60
நிறைய ஆட்டோ சம்பவங்களுடன் ஒரு நான் ஸ்டாப் காமெடி எக்ஸ்பிரஸ்

அந்தரங்கம் இனிமையானது - டாக்டர் ஷாலினி - கனவுப்பட்டறை - Rs 80
குமுதத்தில் வெளிவந்த தொடரின் புத்தக வடிவம்.உடலில், மனதில் படரும் காமத்தை அறிவியல் கண்கொண்டு காண ஒரு வழி.

காதலின் துயரம் - கதே (தமிழில் : எம். கோபாலகிருஷ்ணன்) - தமிழினி - Rs 60
"Sorrows of young werther" என்ற புகழ்பெற்ற ஜெர்மானிய நாவலின் தமிழாக்கம். மீண்டுமொரு நல்ல மொழிபெயர்ப்பு.

எனது இந்தியா - ஜிம் கார்பெட் (தமிழில் : யுவன் சந்திரசேகர்)  - காலச்சுவடு - Rs 125
வேட்டை இலக்கியம் என்ற, தமிழில் அதிகம் காணப்படாத பிரிவில் வரும் நூல்.

ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா - உயிர்மை - Rs 150
இவ்வளவு எழுதிட்டு, தலைய பத்தி எழுதலைனா எப்புடி. ஒரு தடவை படிச்சி முடிச்சிட்டேன். இது நாவலா, கட்டுரையா சிறுகதை தொகுப்பா ஒண்ணும் புரியல. இன்னொரு தடவை படிச்சா தெளியும்னு நினைக்கிறேன்.

கதாவிலாசம் - எஸ் ராமகிருஷ்ணன் - விகடன் - Rs 150
நண்பர் சித்துகிட்ட சுட்டது. இந்த கட்டுரை தொகுப்பில் உள்ள எழுத்தளர்களை பற்றிய குறிப்புகள் தான் இந்த புத்தக சந்தையில் நான் வாங்க எண்ணியிருக்கும் புத்தக பட்டியலை தயார்செய்ய உதவியது.

துணையெழுத்து - எஸ் ராமகிருஷ்ணன் - விகடன் - Rs 85
க்ரைம் நாவல்களில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்த என்னை கரைசேர்த்த கட்டுரை தொகுப்பு. (எஸ் ராவின் சமீபத்திய கட்டுரைகளை படிக்கும்போது, படித்ததையே மீண்டும் படிக்கும் உணர்வு வருவதை தவிர்க்க இயலவில்லை)

விஷ்ணுபுரம் - ஜெயமோகன் - கவிதா பதிப்பகம் - Rs 500
காலத்தின் அடுக்குகளில் முன்பின்னாய் பயணிப்பதாய் இந்த நாவல் குறித்த பார்வைகள் கூறும்போதும், எனக்கு அப்படி தோன்றவில்லை, (முடிந்தால் விரிவாய் பதிவிடுகிறேன், நான் வாங்கியது ரூ 250க்கு), **ஜெயமோகன் இதை ஒத்துக்கொள்வாரா எனத் தெரியவில்லை, விஷ்ணுபுரம் ஒரு காத்திக் வகை விஞ்ஞான நாவல் தான்**.

கற்றதும் பெற்றதும் (1-4) - சுஜாதா - விகடன் - Rs 365
கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை - Rs 350
எந்த பக்கத்தை பிரித்து பார்த்தாலும் சுவாரசியம் நிச்சயம். கிட்டத்தட்ட நாற்பதாண்டு கால தமிழ் ரசனையின் காப்சூல் வடிவம் இது. இதுக்கு மேல தலய பத்தி எது சொன்னாலும் புதுசா இருக்காது.

விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா - உயிர்மை - Rs 275
இந்த தொகுப்பு குறித்த ஜெயமோகனின் கருத்துக்கள் சிலவற்றை நான் ஒப்புக்கொண்டாலும், தமிழின் முன்மாதிரி தொகுப்பு இது என்பதில் சந்தேகமில்லை.

வாங்க நினைத்துப் போன புத்தகங்களில் ஒன்றிரண்டு மட்டுமே வாங்கினேன், மற்றவை எல்லாம் தலைப்பு பார்த்து வாங்கி வந்தது. இந்த ஆண்டாவது நினைப்பது நடக்கிறதா என்று பார்க்கலாம்.

பின்குறிப்பு
* விலை சரியாக தெரியவில்லை
** இதெல்லாம் எங்கள் தலைவர் சுஜாதா சொன்னது

குறிப்பிடப்பட்ட விலைகள் நான் வாங்கிய போது இருந்தவை, தற்போது மாற்றம் ஏதும் இருக்கலாம்.

அடுத்த பதிவு - இந்த ஆண்டு சந்தையில் வாங்க எண்ணியிருக்கும் புத்தகங்கள்

புத்தக சந்தை குறித்த மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்கநன்றி
சங்கர்

19 comments:

பிரபாகர் said...

நல்ல பல புதிய புத்தகங்களும் இருக்கு உங்க லிஸ்ட்ல...

நம்ம தலைவர் சுஜாதா பற்றி கேட்டாலும், படிச்சாலும் சந்தோஷமா, கடைசியா அவரு இல்லையே எனும் சோகத்தோட.....

பயனுள்ள புத்தகத் தகவல்கள்...

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

புத்தகப்புழுன்னு சொல்லுவாங்களே..அது நீங்கதானோ...

சங்கர் said...

@பிரபாகர்
புத்தக சந்தை நடக்கும் நேரம் ஊருக்கு வந்தா சொல்லுங்க போயிட்டு வரலாம்

சங்கர் said...

@புலவன் புலிகேசி

நம்மளவிட பெரிய படிப்பாளிகள் எல்லாம் இருக்காங்க புலவரே

கடைக்குட்டி said...

இன்னைலேர்ந்து நான் உங்ககிட்ட டூ.....

பேஸ் மாட்டேன்...

கடைக்குட்டி said...

”அந்தக் கலைமகளே உங்கிட்ட குடியிருக்குறாப்பா...”

“இந்தப் பயலுக்குள்ள என்னவோ இருந்துருக்கு பாரேன்.. :-)”

வெற்றி said...

அப்பாடா..யார்ட்ட புத்தகம் கடன் கேக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்..சிக்கிட்டீங்க.. :)

முடிஞ்சா 'வந்தார்கள் வென்றார்கள்' படிச்சுப் பாருங்க..

சங்கர் said...

//கடைக்குட்டி said...
இன்னைலேர்ந்து நான் உங்ககிட்ட டூ.....
பேஸ் மாட்டேன்...//
ஏனப்பா


//”அந்தக் கலைமகளே உங்கிட்ட குடியிருக்குறாப்பா...”//

நான் குமுதம், விகடனே பழைய புத்தக கடையில வாங்கித்தான் படிப்பேன், கலைமகள்லாம் படிக்கிறது இல்ல :))

சங்கர் said...

//வெற்றி said...
அப்பாடா..யார்ட்ட புத்தகம் கடன் கேக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்..சிக்கிட்டீங்க.. :)//

தாராளமா தரேன் ஆனா திருப்பி தந்திரனும்


//முடிஞ்சா 'வந்தார்கள் வென்றார்கள்' படிச்சுப் பாருங்க..//

வந்தார்கள் வென்றார்கள் சித்தப்பா வீட்டுக்கு போயிருக்கு, எழுத விட்டுபோச்சி

வெற்றி said...

கண்டிப்பா மறக்காம திருப்பி கொடுத்துடுவேன்..நன்றி..

D.R.Ashok said...

நல்ல பகிர்வு

பின்னோக்கி said...

ஏங்க நான் பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா புத்தகங்கள், விகடன் பிரசுரத்தில் சில புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன்.

உடையார் , விஷ்ணுபுரம், மோகமுள், மரப்பசு, ஜே.ஜே படித்தால் புரியுமா ??

கார்த்திகைப் பாண்டியன் said...

அட்டகாசமான கலெக்ஷன்..:-))) அடுத்த தடவ புக் வாங்கப் போகும்போது சொல்லுங்க தல.. எனக்குத் தெரிஞ்சத நானும் சொல்றேன்

சங்கர் said...

//D.R.Ashok said...
நல்ல பகிர்வு//

வாங்க டாக்டர்,

சங்கர் said...

//பின்னோக்கி said...
உடையார் , விஷ்ணுபுரம், மோகமுள், மரப்பசு, ஜே.ஜே படித்தால் புரியுமா ??//

இந்த இலக்கிய வியாதிகள் சொல்லும் உள்குத்துகளை எல்லாம் தேடாமல் படித்தால், மோகமுள்ளும், ஜேஜேயும் கொஞ்சம் எளிதாய் புரியும்

உடையார் - நான் இதுவரை பாலகுமாரன் படித்ததில்லை

சங்கர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அட்டகாசமான கலெக்ஷன்..:-))) அடுத்த தடவ புக் வாங்கப் போகும்போது சொல்லுங்க தல.. எனக்குத் தெரிஞ்சத நானும் சொல்றேன்//

வாங்கண்ணே, இன்னிக்கு தான் முதல் ரவுண்ட் போயிட்டுவந்தேன், அடுத்த பதிவு அதுதான், அங்க சொல்லுங்களேன்

பிரியமுடன்...வசந்த் said...

நிறைய படிக்கணும்ன்னு ஆசையா இருக்கு சரண்...!

சங்கர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
நிறைய படிக்கணும்ன்னு ஆசையா இருக்கு சரண்...!//

வாங்க வசந்த்

senthil kumar said...

ப்ரியமுடன் செந்தில் கேட்பது,ஊர் சுற்றி புராணம் எந்த பதிப்பகம் என்பதை சொல்லுங்கள் .தேடி அலுத்து விட்டேன் .