Monday, December 21, 2009

சுஜாதாவிடம் ஒரு மன்னிப்பு

சுஜாதாவிடம் ஒரு மன்னிப்பு

ரொம்ப நாளைக்கு முன்னாடி நம்ம சுசியக்கா பதிவெழுத வந்த கதை எழுதக் கூப்பிட்டிருந்தாங்க. நீங்கல்லாம் இந்த பக்கம் வர்றது பெரிய விஷயம், வந்து பதிவுங்கிற பேர்ல நான் பண்ணுற கொடுமையெல்லாம்  படிக்கிறது அதவிட பெரிய விஷயம், இதுல நான் எழுத வந்த கதைய வேற சொல்லணுமான்னு யோசிச்சேன், ஆனா, எவ்வளவோ படிச்சிட்டீங்க இதப் படிக்க மாட்டீங்களான்னு  மனச தேத்திக்கிட்டு எழுதுறேன்.

என்னோட பேரு, சங்கரநாராயணன், சொந்த ஊரு, பரணி பாயும் தரணில, அம்பாசமுத்திரம் பக்கம் ரெங்கசமுத்திரம்ன்னு ஒரு குட்டி கிராமம், பள்ளி இறுதிவரை அங்க படிச்சிட்டு, கல்லூரிக் காலத்திலிருந்து இந்த மகா மாசனத்தில் குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன். இப்போ பண்ணிக்கிட்டிருக்குற வேலை, MIS Excecutive ங்கற பேர்ல, அடுத்தவுங்க பண்ணுற வேலைய கணக்கு பாக்குறது.



இப்போ கொஞ்சம் கொசுவத்தி சுத்தலாம்,

ஊர்ல, மளிகைக்கடை, ஜவுளிக்கடை எல்லாம் சேர்த்து, மினி சரவணா ஸ்டோர் நடத்தி வந்த என் தாத்தா, பெட்ரோல் பங்க்ல புகுந்து கொள்ளையடிக்கிற இன்றைய திருடர்களுக்கு முன்னோடிகள் பண்ணின தொல்லையால, நான் பொறக்குறதுக்கு முந்தின வருஷமே கடையை மூடிட்டாலும், பண்ணின ஒரு நல்ல காரியம், கடைக்கு வந்துக்கிட்டுருந்த தினமலர, வீட்டுல போட சொன்னதுதான். நான் பொறந்த வருஷம் முதல் இலவச இணைப்பா  வர ஆரம்பிச்ச சிறுவர்மலர, எங்கப்பா நாலு வருஷமா சேர்த்து வச்சிருந்தாரு. நெல்லுல 'அ'னா எழுதிப்படிச்ச அடுத்த நிமிஷத்திலிருந்து  வாசிக்க ஆரம்பிச்ச நான், அஞ்சு வயசு முடியும்போது அத்தனை புத்தகத்தையும் வாசிச்சு முடிச்சிட்டேன், அதுக்கப்புறம், எங்க, யார் வீட்டுக்கு போனாலும் முதல்ல தேடுறது சிறுவர்மலர்தான்.

இப்படி ஆரம்பிச்ச வாசிப்பும் ரசனையும் படிப்படியா வளர்ந்தது, ஆனா படிகள் கொஞ்சம் மாறி மாறி இருந்தது, அதாவது சில நேரம் வயசுக்கு மீறின விஷயங்களும், சில நேரம் வயசுக்கு ஒவ்வாத விஷயங்களும் வாசிக்க கிடைத்தது. உதாரணத்துக்கு, அஞ்சு வயசுல ஆரம்பிச்ச சிறுவர்மலர், கல்லூரி இறுதி வரை உடன் வந்தது, அதேநேரத்துல, எட்டு வயசுல கைக்கு கிடைத்த, அட்டையோ, முடிவோ இல்லாத, எதுவும் புரியாமல் படித்த காதல் நாவலில் (இப்போ மட்டும் புரிஞ்சிடுச்சான்னு கேட்காதீங்க)   வரும் கதாநாயகன் தினகரனும், ஒரு மர்ம நாவலில் வரும் கருப்பு குதிரையும், இன்று வரை மனதை விட்டு விலகவில்லை. அடுத்தபடியா, மாயாவி காமிக்ஸ், ராஜேஷ்குமார், பிகேபி, சுபான்னு ரசனை வளர்ந்தப்போ தான் ஒரு சம்பவம் நடந்தது.

எஸ்வீ சேகரோட, 'காதுல பூ' நாடகத்துல, சினிமா டைரக்டர் ஒருத்தரோட பேசுவாரு,

எஸ்வீ : நீங்க சினிமாவுக்கு வரதுக்கு முந்தி என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?
டை:  விவசாயங்க,
எஸ்: விவசாயத்திலிருந்து எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?
டை:  ஒரு நாள் நான் நிலத்த ஆழமா உழுதுக்கிட்டிருந்தேங்க, அப்போ என் கலப்பைல ஏதோ ஒண்ணு சிக்கிக்கிச்சு, என்னன்னு எடுத்து  பார்த்தேன், பிலிம் ரோலு, கலை உலகமே என்ன தமிழ் படத்துக்கு வா வான்னு கூப்பிடுற மாதிரி இருந்தது, குபீர்னு பூந்திட்டேன்.

கிட்டத்தட்ட இதே மாதிரி, ஒரு நாள் பரண நோண்டிக்கிட்டிருந்தப்போ ஒரு புத்தக கட்டு கிடைச்சது, படிச்சு பார்த்தபிறகு தான் தெரிஞ்சது அது வெறும் புத்தகம் இல்ல புதையல்னு, ஆமாங்க, பொன்னியின் செல்வனோட, மூன்று மற்றும் நாலாவது பாகங்கள், உமாசந்திரனோட  முள்ளும் மலரும், ராஜாஜியோட வியாசர் விருந்து, இதெல்லாம் புதையல் தானுங்களே. இது போக எங்க ஊருல கேபிள் டிவி கிடையாது (இன்னிக்கு வரைக்கும்), அதனால்காணக்கிடைத்தது தூதன் மட்டுமே, அதுல கொஞ்சம் நல்ல கதைகள் நாடகமா வந்தது (சாம்பு, சாயாவனம், இன்னும் பல), அந்த நேரத்துல தான் கல்கில நாலாவது தடவையா பொன்னியின் செல்வன்  தொடர் வெளிவர ஆரம்பித்தது, கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஒரு இதழ் கூட விடாம வாங்கினேன், அப்போ ஆரம்பிச்ச வேட்டை, சுஜாதா, புதுமைபித்தன், எஸ்ரா, திஜா, சுரா, ஜெமோ, இன்னும் தொடருது.

கொசுவத்தி ஓவர்,


இப்படி விழுந்து விழுந்து படிச்சிக்கிட்டிருந்தாலும் ஒண்ணே ஒண்ணு மட்டும் உறுதியா நம்பினேன், நான் ஒரு நல்ல ரசிகன் (மட்டுமே), நிச்சயமா எழுத வராது. இந்த ஆண்டு தொடக்கத்துல, நண்பர் அருண் திருமணத்துக்காக, காரைக்குடி போனோம். அப்போதான் நம்ம ஜேட்லியும், சித்துவும் பதிவுலகம்னு ஒரு வஸ்து இருக்கிறது பத்தியும், அதுல இருக்கும் பல பிஸ்துக்கள் பத்தியும் சொன்னாங்க. நாமும் ஒண்ணு ஆரம்பிக்க்கலாம்னாங்க, என்னோட பழைய நம்பிக்கை மீண்டும் குறுக்க வந்தது, இருந்தாலும் ஆரம்பிச்துக்கபுறம் பாத்துக்க்கலாம்னு சரின்னுட்டேன்.


சென்னைக்கு வந்த அடுத்த நாளே ஆரம்பிச்சுட்டாங்க, நானும் எழுதறேன, எழுதறேன்னே ஒரு ஆறு மாசம் ஓட்டிட்டேன், அப்போதான் நண்பர் ஜெட்லியோட இந்த பதிவுல நண்பர் சித்து  போட்ட பின்னூட்டத்துக்கு பதில் சொல்லியே தீரணும்னு தோணினப்போதான் நான் முதல் பதிவ எழுதினேன். (இதற்காக  சித்து மீது யாரும் கோபப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்) அதுக்கப்புறம் நடந்துக்கிட்டிருகிறதுதான்  உங்களுக்கே தெரியுமே.

சரி, தலைப்புக்கு வருவோம், நம்ம சுசியக்கா பதிவுக்கு '(பாவ) மன்னிப்பு'ன்னு தலைப்பு வச்சிருந்தாங்க, ஆனா நான் அதெல்லாம் கேட்கப்போறதில்ல, இதெல்லாம் நாம ஒருத்தருக்கொருத்தர் பண்ணிக்கிறது தானே. அப்புறம், என்னை மட்டுமில்ல, யாரு புதுசா வந்தாலும் முதல் ஆளா போய் வரவேற்று வாழ்த்து சொல்லும் அண்ணன்பிரபாவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி, மற்றும் எங்கள பின்தொடரும், வந்து போகும் எல்லாருக்கும் நன்றி. ஆனா, இவ்வளவு நாளா, அவர் எழுதினத இவ்வளவு  படிச்சதுக்கப்புறமும், எழுத்துங்ற  பேர்ல நான் பண்ணிக்கொண்டிருக்கும் கொடுமைகளையும், கவிதைங்கிற பேர்ல சமீபகாலமாய் செய்ய தொடங்கி இருக்கும் அக்கிரமங்களையும் மன்னிக்கும் படி, எல்லாம் வல்ல சுஜாதாவை வேண்டிக்கொள்கிறேன்.











பெரும்பாலானவர்கள் எழுதி முடிச்சிட்டதால, இந்த பதிவை படிக்கும், இதுவரை எழுதாத, யார் வேண்டுமானாலும் தொடரலாம் என அழைக்கிறேன்

நன்றி

சங்கர்

19 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

குட் நல்லா எழுதிருக்கீங்க சங்கர்...

தொடரட்டும் சுஜாதா ஆசிர்வதிப்பாராக...

வாழ்த்துக்கள்...!

Chitra said...

தன்னடக்கம்........... நல்லா எழுதுறீங்க. தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

ம்..சுயவிபரம் அருமை..ஒருவேளை நானும் சுஜாதா கிட்ட மன்னிப்பு கேக்கனுமோ???

பிரபாகர் said...

எழுத்துக்களை படிக்கும்போதே சங்கருக்கு படிப்பு ஞானம் அதிகம் என எண்ணியிருந்தேன், சொல்லலால் இன்று உறுதியானது. நிறைய எழுதுங்கள் நண்பா... வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

ஷங்கி said...

நீங்களும் நம்மூருதானாவே! (பரணிக்காரரு)
பொன்னியின் செல்வன் எத்தனை தடவை படிச்சேன்னு கணக்கு கிடையாது.
தப்பு செஞ்சாத்தானவே சுஜாதா மன்னிக்கிறதுக்கு!
வாழ்த்துகள்
இப்ப பிரிகிறேன் பின்ன சந்திக்கிறேன்!

சங்கர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
குட் நல்லா எழுதிருக்கீங்க சங்கர்...

தொடரட்டும் சுஜாதா ஆசிர்வதிப்பாராக...
//



அந்த நம்பிக்கைல தான் எழுதுறேன்,

நன்றி வசந்த்

சங்கர் said...

//Chitra said...
தன்னடக்கம்........... நல்லா எழுதுறீங்க. தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள். //

உள்ளத தானே சொன்னேன், நன்றி சித்ராக்கா,

சங்கர் said...

//புலவன் புலிகேசி said...
ம்..சுயவிபரம் அருமை..ஒருவேளை நானும் சுஜாதா கிட்ட மன்னிப்பு கேக்கனுமோ??? //


நல்ல கவிதை எழுதுறீங்க, நீங்கல்லாம் கேட்கவேணாம்

சங்கர் said...

//பிரபாகர் said...
எழுத்துக்களை படிக்கும்போதே சங்கருக்கு படிப்பு ஞானம் அதிகம் என எண்ணியிருந்தேன், சொல்லலால் இன்று உறுதியானது. நிறைய எழுதுங்கள் நண்பா... வாழ்த்துக்கள்.
//

வாங்க பிரபா, நன்றி

சங்கர் said...

//ஷங்கி said...
நீங்களும் நம்மூருதானாவே! (பரணிக்காரரு)
பொன்னியின் செல்வன் எத்தனை தடவை படிச்சேன்னு கணக்கு கிடையாது.
தப்பு செஞ்சாத்தானவே சுஜாதா மன்னிக்கிறதுக்கு!
வாழ்த்துகள்
இப்ப பிரிகிறேன் பின்ன சந்திக்கிறேன்! //

ஆமாம்ப்பா, திருநெல்வேலி தமிழ் பேசாத நெல்லைக்காரன்,

Unknown said...

நா இன்னும் இது எழுதல... எழுதலாம்னு நெனைக்குறேன்...,

சங்கர் said...

//பேநா மூடி said...
நா இன்னும் இது எழுதல... எழுதலாம்னு நெனைக்குறேன்..., //

அப்படியா, எழுதிடுங்க, படிக்க வந்துடறோம்

வெற்றி said...

நான் இப்போதான் பதிவுலகத்துக்கு வந்திருக்கேன்..இன்னும் ஆறு மாசத்துக்கு பாரம் எழுதலாம்னு இருக்கேன்...

சங்கர் said...

//வெற்றி said...
நான் இப்போதான் பதிவுலகத்துக்கு வந்திருக்கேன்..இன்னும் ஆறு மாசத்துக்கு பாரம் எழுதலாம்னு இருக்கேன்... //


என்ன பாரம், மணியாடர் பாரமா?

இதுக்கெலாம் நேரம் பாக்காதே, எழுதிடு, இப்போ நான் எழுதல!!

வெற்றி said...

//என்ன பாரம், மணியாடர் பாரமா?//

மன்னிக்கவும்..எழுத்துப்பிழை..'அப்புறம்'

//இதுக்கெலாம் நேரம் பாக்காதே, எழுதிடு, இப்போ நான் எழுதல!! //

உங்களுக்கென்ன..165 followers..நெறைய பேரு இருக்காங்க நீங்க எழுதுறத படிக்க..
நான் இப்பவே சொந்த கதை சோகக் கதை எழுத ஆரம்பிச்சா எனக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச விசிட்டர்ஸ் உம் வர மாட்டாங்க..
அதான் சொன்னேன்.கொஞ்ச நாள் ஆகட்டும்னு.!!

சுசி said...

சங்கரு அசத்திப்புட்டீங்களே சங்கரு..
மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன்.

அப்போ நான் ரெம்ப அப்பாவியா பாவ மன்னிப்பு கேட்டுட்டேனா.. அவ்வ்வ்வவ்..

லீவுங்கிறதால லேட்டா படிச்சிட்டேன். சாரி.

சங்கர் said...

//சுசி said...
சங்கரு அசத்திப்புட்டீங்களே சங்கரு..
மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன்.

அப்போ நான் ரெம்ப அப்பாவியா பாவ மன்னிப்பு கேட்டுட்டேனா.. அவ்வ்வ்வவ்..

லீவுங்கிறதால லேட்டா படிச்சிட்டேன். சாரி.//

என்னையும் மதிச்சு எழுதக் கூப்பிட்டீங்களே, எப்படி மறப்பேன்,

உங்களுக்கு தான் ஜாலி ஜாலின்னு லீவ கொண்டாடவே நேரம் சரியா இருக்கே,

சங்கர் said...

//வெற்றி said...
உங்களுக்கென்ன..165 followers..நெறைய பேரு இருக்காங்க நீங்க எழுதுறத படிக்க..//

நீ காலேஜில சைட் அடிச்ச கதை மட்டும் சொந்தக்கதை இல்லியா :))

எல்லா பாலோயர்சும் படிக்க வருவாங்கன்னு யாருப்பா சொன்னது ?, பச்சை மண்ணா இருக்கியே, இது ரத்த பூமி

வெற்றி said...

சரிங்க தல..என்னோட எழுத்தை மெருகேத்திட்டு கூடிய வரைக்கும் சுவாரசியமா தர முயற்சிக்கிறேன்..