Saturday, December 26, 2009

அமி கொல்கொத்தா ஜாக்ச்சி

அஞ்சு வயசிலேயே ஒரு பெங்காலி பாட்டை முழுசா கத்துக்கிட்டு அர்த்தமும் தெரிந்து கொண்டபோதிலும், இதுவரை சென்னையை தாண்டி வடக்கே போனதில்லை, அதிகபட்சமாய் மாநிலத்தை விட்டு வெளியே போனது,  கேரளாவுக்கு தான். இந்த நிலையில் தான், வந்தது லீவு. மூணு நாள் லீவு போட்டுட்டா கிறித்துமஸ் முதல் புத்தாண்டு வரை 10 நாட்கள் லீவு கிடைக்குதுன்னு சொல்லி டிசம்பர்  28, 29, 30 லீவு போட்டாச்சு. நிறைய வேலை செஞ்சுட்டேன்னு சொல்லி டிசம்பர் 31 அவுங்களே லீவு குடுத்துட்டாங்க.

சனி, ஞாயிறு ரெண்டு நாள் அலுவலகம் போகாம இருந்தாலே மனசு கேட்கமாட்டேங்குதே, எப்படி பத்து நாளை ஓட்டுறதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்போ தான், போன் பண்ணினான், நாடோடிகள் ஸ்டைலில கல்யாணம் பண்ணிக்கிட்டு கொல்கொத்தா ஓடிப்போன நண்பன் (சும்மா ஒரு பில்டப் தான், இரு வீட்டு சம்மதத்தோட நடந்த காதல் திருமணம்), ஒரு வாரம் இங்க வாடான்னு கூப்பிட்டான், ஏற்கனவே பொக்கிஷம் படம் முதல் நாள் பார்த்ததுல இருந்து கொல்கொத்தா மேல ஒரு தனி ஈர்ப்பு வந்திருந்தது, சரி நாமும் எத்தனை நாள் தான் ஊருக்கு போய் அல்வா சாப்பிடறது, ரசகுல்லாவும் சாப்பிட்டு பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இதெல்லாம் விட, உங்களுக்கெல்லாம் என் கவிதை கொடுமையிலிருந்து பத்து நாள் விடுதலை கொடுக்கலாம்ங்கற நல்லெண்ணமும், போயிட்டு வந்து ஒரு அற்புதமான பயணக்கட்டுரையை உங்களுக்கு தரவேண்டுமென்ற தணியாத இலக்கிய ஆர்வமும் முக்கிய காரணங்கள்.



சொந்த ஊர் நோக்கிய பன்னிரண்டு மணிநேர பயணங்களோ, சொந்தங்களை பார்க்கவோ,  சொந்தமாக்கி கொள்ள விரும்புபவளை பின்தொடரவோ மேற்கொள்ளும் மின்சார ரயில் பயணங்களோ, ரயில் பயணங்கள் என் விருப்பத்திற்கு உரியவையாகவே உள்ளன. ஊருக்கு செல்லும் செல்லும் பயணங்களின் பெரும்பகுதி தூக்கத்திலேயே கழிந்து விடுவதால், கொல்கொத்தா செல்லும் இந்த ஒன்றரை நாள் பயணத்தை மிக அதிகமாகவே எதிர்பார்த்திருந்தேன். மூன்று தலையணை புத்தகங்களையும் (படிக்கவும், தலைக்கு வைத்து படுக்கவும்) எடுத்து வைத்திருந்தேன்.இரவு ஒன்பது மணிக்கு புறப்படும் ரயிலை பிடிக்க ஆறரை மணிக்கே எக்மோருக்கு கிளம்பினேன்.

போகும் வழியெல்லாம், இந்தியாவின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றை பார்க்கப் போகிற, டிராம் வண்டியில் பயணிக்க போகிற, மனதில் நினைத்திருக்கும் நெடும் பயணங்களுக்கெல்லாம் தொடக்கமான நீண்ட பயணம் ஒன்றை செய்யப்போகிற சந்தோஷம் மனதில் நிரம்பி வழிந்தது. பக்கத்து இருக்கையில் ஒரு இளம் பெண், முகத்தில் சற்றே வங்காள சாயல் (?) தெரிந்தது, சக பயணியாய் இருக்குமோ என்ற எண்ணம் (நப்பாசை!) மனதில் தோன்றியது,  வண்டி தாம்பரம் தாண்டிய பிறகு தான், அது கடற்கரை - செங்கல்பட்டு துரித வண்டியென்றும், ஏழரை மணிக்கே எக்மோர் சென்று விடுமென்றும் தெரிந்தது. பையில் வைத்திருந்த பயண சீட்டை பிரித்து பார்த்த போது இன்னொன்றும் தெரிந்தது, வண்டி புறப்படும் நேரம் பத்தரை.

மின்சார ரயிலின் இருபுறமும் நகரும் சென்னை நகரமே புதிதாய், அழகாய் தெரிந்தது,வேக வேகமாய் கடந்து சென்ற ஸ்டேஷன்களில் காத்து நிற்கும் முகங்களை பார்த்தபோது, நெடும் பயணம் இங்கேயே தொடங்கிவிட்டது போல் தோன்றியது. கிண்டியிலும், மாம்பலத்திலும் நின்று புறப்பட்ட வண்டி சேத்துப்பட்டில் பத்து நிமிடம் சிக்னலுக்கு காத்து நின்ற பின் சரியாய் ஏழு நாற்பத்தைந்துக்கு எக்மோருக்குள் நுழைந்தது. இரண்டு பைகளையும் சுமந்தபடி, எக்மோர் எட்டாம் எண் பிளாட்பார்மை மிதித்தேன், இரண்டு நிமிடம் காத்திருந்து பின் படியேறி சென்றேன், நான்காவது பிளாட்பார்மில் இறங்கும்போது, "இன்னும் ஒருமணி நேரத்துல சொல்றேன்", "ரெண்டு மணிக்கு சொல்றேன்", "ஏழுமணிக்கு சொல்றேன்னு" காலையிலிருந்து சொல்லிக்கிட்டே இருந்த  நண்பனிடமிருந்து போன், "டேய், ஏஜெண்டு சொதப்பிட்டாண்டா, டிக்கெட் கன்பார்ம் ஆகலை, முடிஞ்சா ஓபன் டிக்கெட் எடுத்துட்டு வந்துடு, வர வழில கொஞ்சம் குளிரும், ஒரு அஞ்சு, ஆறு டிகிரி தான், போர்வை ஸ்வெட்டர் எல்லாம் இருக்கில்ல".

திட்ட தோன்றியதெல்லாம் மனதில் உள்ளே போட்டு புதைத்துவிட்டு, அருகில் இருந்த போர்ட்டரிடம் கேட்டேன், "அண்ணே, ஹௌரா மெயில்ல அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்ல கூட்டம் எப்படி இருக்கும்" அவர் சொன்னார் "வெளியில நின்னே வேடிக்கை பார்க்க முடிகிற அளவு இருக்கும்". அப்படியே வந்த வழியிலேயே திரும்பி எட்டாவது பிளாட்பாரம் வந்தேன், அறிவிப்பு வந்தது,  "செங்கல்பட்டு செல்லும் துரித மின்தொடர் இன்னும் சிறிது நேரத்தில் வந்து செல்லும்", வடிவேலு மாதிரி "வந்த வண்டியிலேயே ஏத்தி அனுப்புறாங்களேன்னு" புலம்பிக்கிட்டே ஏறினேன். ஒன்பதரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

பின்குறிப்பு:

கொல்கொத்தா சென்று பயணக்கட்டுரை எழுத நினைத்தேன், எக்மோர் பயணக்கட்டுரைதான்   எழுத முடிந்தது, உங்கள் அதிர்ஷ்டம் அவ்வளவு தான்

அலுவலக தோழியிடம் கேட்டு வைத்த பெங்காலி தலைப்பின் அர்த்தம், "நான் கொல்கொத்தா போறேன்". பெங்காலி தெரிந்தவர்கள் யாராவது இருந்தா "அமி ஹீனாக்கி தேக்கி பிலாம்" மாதிரி  ஏதாவது உள்குத்து இருக்கன்னு சொல்லுங்க.

முதல் பத்தியில் சொன்ன அந்த பெங்காலி பாடல் இதோ, எல்லாரும் எழுந்து நின்னு படிங்க.






 
நன்றி
சங்கர்

26 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா:) நான் கல்கத்தா பத்தி தான் வரபோதோன்னு படிச்சிட்டே வந்தேனே..

திருவாரூர் சரவணா said...

//"வெளியில நின்னே வேடிக்கை பார்க்க முடிகிற அளவு இருக்கும்".//

ரயிலுக்கு வெளியில இருந்தா இல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியில இருந்தான்னு சொல்லவே இல்ல...

********************
//அஞ்சு வயசிலேயே ஒரு பெங்காலி பாட்டை முழுசா கத்துக்கிட்டு அர்த்தமும் தெரிந்து கொண்டபோதிலும்,//

விட்டா பிறந்ததும் அழற பாஷையை நாந்தேன் முதன் முதல்ல உலகத்துக்கே புரிய வெச்சேன்னு சொல்லுவீங்க போலிருக்கே... அது சரி... சரண் மாதிரி ஒரு அப்பாவி(அது நான்தான்) சிக்கினா முதல்வர், தன்னோட ரெண்டு பிள்ளைங்களையும் அநாதை ஆசிரமத்துல சேவை செய்ய அனுப்பிட்டாருன்னு சொல்லுவீங்க போலிருக்கே...

பிரபாகர் said...

சங்கர்,

கல்கத்தா செல்லும் தங்கத் தம்பி சங்கர் வாழ்க என ஆவலாய் வந்த அண்ணனை இப்படி ஏமாற்றலாமா? தர்மமா? நியாயமா? அடுக்குமா?....

(செங்கல்பட்டிலிருந்து எக்மோர் சென்ற டரியலயே தாங்க முடியலயே! கடவுளே காப்பாத்துனதுக்கு நன்றி!)

பிரபாகர்.

சங்கர் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஆகா:) நான் கல்கத்தா பத்தி தான் வரபோதோன்னு படிச்சிட்டே வந்தேனே..//

இத்தனை தடவை கொல்கத்தா கொல்கத்தான்னு பதிவுல எழுதினப்புறமும் இப்புடி ஒரு கேள்வியா

சங்கர் said...

//சரண் said...
ரயிலுக்கு வெளியில இருந்தா இல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியில இருந்தான்னு சொல்லவே இல்ல...//

அவரு அதை சொல்லலியே

//விட்டா பிறந்ததும் அழற பாஷையை நாந்தேன் முதன் முதல்ல உலகத்துக்கே புரிய வெச்சேன்னு சொல்லுவீங்க போலிருக்கே... //

இன்னொரு பதிவுக்கு யோசனை தந்ததுக்கு நன்றி

//அது சரி... சரண் மாதிரி ஒரு அப்பாவி(அது நான்தான்) சிக்கினா முதல்வர், தன்னோட ரெண்டு பிள்ளைங்களையும் அநாதை ஆசிரமத்துல சேவை செய்ய அனுப்பிட்டாருன்னு சொல்லுவீங்க போலிருக்கே...//

அவர எங்க வம்புக்கு இழுக்குறீங்க, அவரே பாவம், 'வாங்குற' பட்டத்தையெல்லாம் எங்க போய் பறக்க விடுறதுன்னு குழம்பி போய் இருக்காரு

சங்கர் said...

//பிரபாகர் said...
கல்கத்தா செல்லும் தங்கத் தம்பி சங்கர் வாழ்க என ஆவலாய் வந்த அண்ணனை இப்படி ஏமாற்றலாமா? தர்மமா? நியாயமா? அடுக்குமா?....//

ஆசைபட்டுடீங்க, உங்களுக்காக சிங்கபூர் வரப்போற கதைய பதிவா எழுதறேன்

// (செங்கல்பட்டிலிருந்து எக்மோர் சென்ற டரியலயே தாங்க முடியலயே! கடவுளே காப்பாத்துனதுக்கு நன்றி!)//

யுவான் சுவாங், நரசையா மாதிரி ஒரு பயணக்கட்டுரை ஆசிரியரை இழந்ததுல உங்களுக்கு வருத்தமே இல்லியா

பிரபாகர் said...

//ஆசைபட்டுடீங்க, உங்களுக்காக சிங்கபூர் வரப்போற கதைய பதிவா எழுதறேன்//
சந்தோஷம் சங்கர்! வரும் நாளை ஆவலாய் எதிர் நோக்குகிறேன்.

பிரபாகர்.

ஷங்கி said...

பயணங்கள் எப்போதுமே சுகமானவை. இந்தப் பயணமும்!

பின்னோக்கி said...

அப்பவே டவுட் ஆனேன். என்னடா இது பதிவு இவ்வளவு வேகமா வருதே. கல்கத்தா போயிருந்தா எழுதியிருக்க முடியாதேன்னு. இது ஒரு நல்ல ட்விஸ்ட் கதை.

பின்னோக்கி said...

கவுத்திட்டீங்களே.
ஜன கன தமிழ் பாட்டுன்னு நினைச்சுருந்தேன். தமிழ்ல தானே எழுத்து இருக்கு. என்ன நான் சொல்றது ?

butterfly Surya said...

எக்மோர் பயண கட்டுரையே அருமை.

அடடா, வடை (ரசகுல்லா) போச்சே ..

வெற்றி said...

//கொல்கொத்தா சென்று பயணக்கட்டுரை எழுத நினைத்தேன், எக்மோர் பயணக்கட்டுரைதான் எழுத முடிந்தது, உங்கள் அதிர்ஷ்டம் அவ்வளவு தான்//

உங்கள் அதிர்ஷ்டமும் அவ்வளவுதான்.. :)

நாட்டுப்பண்ல நம்ம பேருலாம் கூட இருக்கு போல..
டேய் வெற்றி நீ எங்கயோ போய்ட்டடா.. :):)

பெசொவி said...

இது ரொம்ப சூப்பரா இருக்கு சங்கர்.... இதே மாதிரி, மும்பை பயணக் கட்டுரை, டில்லி பயணக் கட்டுரை, போன்ற பல பயனுள்ள கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். (அது சரி, கவிதையிலிருந்து விடுதலை தருவதற்காகவே கொல்கத்தா பயணம் என்றீர்களே, அப்ப, எங்களுக்கு விடுதலை கிடையாதா....?)

சங்கர் said...

//ஷங்கி said...
பயணங்கள் எப்போதுமே சுகமானவை. இந்தப் பயணமும்!//

கரெக்ட்டு, இரண்டு மணி நேரமோ இரண்டு நாளோ, பயணங்கள் சுகமானவை தான்

சங்கர் said...

//பின்னோக்கி said...
அப்பவே டவுட் ஆனேன். என்னடா இது பதிவு இவ்வளவு வேகமா வருதே. கல்கத்தா போயிருந்தா எழுதியிருக்க முடியாதேன்னு. இது ஒரு நல்ல ட்விஸ்ட் கதை.//

எல்லாம் உங்களுக்காக தான்,


//கவுத்திட்டீங்களே.
ஜன கன தமிழ் பாட்டுன்னு நினைச்சுருந்தேன். தமிழ்ல தானே எழுத்து இருக்கு. என்ன நான் சொல்றது ? //

சத்தமா சொல்லாதீங்க, காதில் விழுந்தா தனி நாடு கேட்க ஆரம்பிச்சிடப்போறாங்க

சுசி said...

//போயிட்டு வந்து ஒரு அற்புதமான பயணக்கட்டுரையை உங்களுக்கு தரவேண்டுமென்ற தணியாத இலக்கிய ஆர்வமும் முக்கிய காரணங்கள்.//
ஆவ்வ்வ்வவ்.. இப்டியான ஆர்வங்கள் வரக்கூடாதுப்பா. மக்கள்ஸ் பாவம்ல.

// பக்கத்து இருக்கையில் ஒரு இளம் பெண்//
அதெப்டி கரெக்டா?

நிஜமாவே எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லைதான் போல. எனக்கும் ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும்.

கடைசீல திட்ட முடியாதபடி பண்ணிப்புட்டீங்க போங்க.

சங்கர் said...

//butterfly Surya said...
எக்மோர் பயண கட்டுரையே அருமை.
அடடா, வடை (ரசகுல்லா) போச்சே ..//

நான் கூட நினைச்சிக்கிடிருந்தேன், ரசகுல்லா வாங்கிட்டு வந்து, போட்டோ எடுத்து பதிவுல போடணும்ன்னு :))

சுசி said...

காலேல எந்திரிச்சி எவ்ளோ ஒழுங்கா பின்னூட்டத்துக்கு பதில் எழுதறீங்க..

என்னே கடமை உணர்வு உங்களுக்கு..

சங்கர் said...

//வெற்றி said...
நாட்டுப்பண்ல நம்ம பேருலாம் கூட இருக்கு போல..
டேய் வெற்றி நீ எங்கயோ போய்ட்டடா.. :):)//

அங்கியே இரு, எங்கேயும் போயிடாதே, ஆட்டோ அனுப்புறேன்

சங்கர் said...

//சுசி said...
அதெப்டி கரெக்டா?//

அதெல்லாம் பார்த்து தானே ஏறுவோம், (ஐயையோ உளறிட்டேனா?)

//நிஜமாவே எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லைதான் போல. எனக்கும் ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும்.//

சரிதான், உண்மையிலேயே ரயில் பயணங்கள் அழகு தான்

//ஆவ்வ்வ்வவ்.. இப்டியான ஆர்வங்கள் வரக்கூடாதுப்பா. மக்கள்ஸ் பாவம்ல.

கடைசீல திட்ட முடியாதபடி பண்ணிப்புட்டீங்க போங்க.//
அப்போ முதல் வரி பாராட்டா ?

சங்கர் said...

//சுசி said...
காலேல எந்திரிச்சி எவ்ளோ ஒழுங்கா பின்னூட்டத்துக்கு பதில் எழுதறீங்க..

என்னே கடமை உணர்வு உங்களுக்கு..//

எல்லாம் இலக்கிய ஆர்வம் தான் (இதவிட்டா வேற வேலை)

சங்கர் said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இது ரொம்ப சூப்பரா இருக்கு சங்கர்.... இதே மாதிரி, மும்பை பயணக் கட்டுரை, டில்லி பயணக் கட்டுரை, போன்ற பல பயனுள்ள கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.//

உங்க ஆர்வம் எனக்கு புரியுது, சீக்கிரமே எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

// (அது சரி, கவிதையிலிருந்து விடுதலை தருவதற்காகவே கொல்கத்தா பயணம் என்றீர்களே, அப்ப, எங்களுக்கு விடுதலை கிடையாதா....?)//

நல்லா வேளை ஞாபகப்படுத்தினீங்க, அடுத்த பதிவு ஹைக்கூ

சுசி said...

அட இன்னிக்கு ஞாயித்துக் கிழமைப்பா..
இருந்தும் சீக்கிரம் எழுந்த உங்கள் கடமை உணர்வுக்கு ஒரு சல்யூட்.

நான் கூட இங்க நேரம் 02:15. இன்னமும் தூங்காம எவ்ளோ கடமை உணர்வோட ப்ளாக் படிக்கிறேன் பாத்தீங்களா???

சங்கர் said...

//சுசி said...
அட இன்னிக்கு ஞாயித்துக் கிழமைப்பா..
இருந்தும் சீக்கிரம் எழுந்த உங்கள் கடமை உணர்வுக்கு ஒரு சல்யூட்.//

நன்றிங்க அக்கா

// நான் கூட இங்க நேரம் 02:15. இன்னமும் தூங்காம எவ்ளோ கடமை உணர்வோட ப்ளாக் படிக்கிறேன் பாத்தீங்களா???//

உங்கள மாதிரி நாலு பேரால்தான் வலையுலகம் வாழுது

hayyram said...

gud

regards
ram.

www.hayyram.blogspot.com

settaikkaran said...

ஆஹா! நான் கூட சமீபத்துலே குஜராத் போன அனுபவத்தை எழுத ஏதாவது டிப்ஸ் கிடைக்குமுன்னு வந்தா..., பட்டையைக் கிளப்பியிருக்கீங்க போங்க! :-))