இது ஹைக்கூ - ஒரு புதிய அறிமுகம் புத்தகத்திற்கு சுஜாதா எழுதிய முன்னுரை. அதில் அவர் மேலும் சொல்கிறார்,
ஒரு ஹைக்கூ எழுதும்போது, "எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது, அதை உன்னுடன் பகிர்த்துகொள்ள விரும்புகிறேன். அந்த அனுபவத்தை, என்னில் ஏற்படுத்திய சம்பவத்தை உனக்கு சொல்கிறேன். அதே மாதிரி அனுபவம் அல்லது உணர்ச்சி உனக்கு ஏற்படுகிறதா பார்" என்று சொல்கிறோம்.
அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ..ஒரு சில வார்த்தைகள் மூலம்,
நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது.
உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும் வெறும் வரிகள்தாம். ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள் விரிவதை கவனிக்க முடியும். நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்க வேண்டும். அவன் தனிமை வெளிப்படுகிறது. அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா? எங்கே இவன் விழித்திருக்கிறான்? நகரத்திலா, கிராமத்திலா? நகரத்தில் இருக்க முடியாது, அத்தனை நிசப்தம் நகரத்தில் எது? தூரத்தில் கதவு சாத்தப்படும் சப்தம் கேட்க முடிகின்ற நிசப்தம், அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன? அந்த வேலைக்கு வீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா, ஒரு மனைவியா, ஒரு மகனா, வயசுக்கு வந்த பெண்ணை? அல்லது யாராவது கோபத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்களா?
மூன்றே மூன்று வரிகள். அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனை பாருங்கள். உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ.
தலைவர் சொன்னதை படிச்சாச்சா, இப்போ என்னோட ஹைக்கூ (அப்படி ஒத்துக்கொள்வதும், கொள்ளாததும் உங்கள் இஷ்டம்) படியுங்கள்,
கடந்து செல்லும் ரயில்
கதவோரம் இளைஞன்
கண்களில் நீர்.
தலைவர் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் என்னால எழுதாம இருக்க முடியல, ஒரு வேளை இது நிஜமாகவே ஹைக்கூவாக இருந்தா அவர் சந்தோஷப்படுவார்.
பின்குறிப்பு:
மூணே மூணு வரி மட்டும் எழுதினா, தலைப்பு மட்டும் இருக்கு, மேட்டர் இல்லைன்னு, நீங்க திரும்பிப் போயிட்டா என்ன பண்ணுறதுன்னு தான், அவரோட முன்னுரையை எடுத்து போட்டிருக்கேன்.
முன்னுரையோட விடவேண்டியது தானே, எதுக்கு கவிதை விளக்கம் எல்லாம் எழுதிருக்கேன்னு கேட்டீங்கன்னா, அந்த கவிதை படிச்சப்போ எனக்கு ஒண்ணும் தோணலை, விளக்கம் படிச்சதுக்கு அப்புறம் தான் இப்படியும் இருக்கோன்னு தோணிச்சு. அதே மாதிரி என் கவிதைல எதுவும் உங்களுக்கு தோன்றாவிட்டால், உதாரணமா இருக்கட்டுமேன்னு தான் அதையும் எழுதினேன்.
ஹைக்கூ - ஒரு புதிய அறிமுகம்
உயிர்மை - Rs 40
நன்றி
சங்கர்
சங்கர்