Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, May 14, 2010

நான் அவள் அது......

நான் அவள் அது......!!


(டிஸ்கி : இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.....கதையை படிச்சுட்டு பயமா இருந்ததா இல்லை
மொக்கையா இருந்ததான்னு நீங்க தான் சொல்லணும்..)


________________________________



நானும் எனது நண்பர்கள் டேவிட்,ராம்,ராஜா,சதீஷ் ஆகியோர்ஒரு மாதம் முன்பே கொடைக்கானல் போவதாக முடிவு செய்து இன்று கொடைக்கானல் காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம்.சீசன் டைம் என்பதால் எளிதில் எங்களுக்கு ஹோட்டல் கிடைக்கவில்லை,அங்கும் இங்கும் அலைந்து கொஞ்சம் ஒதுக்கு
புறமாக ரிசார்ட்டில் ஒரு அறை கிடைத்தது. நாங்கள் தங்கிருந்தஇடம் ரொம்ப அமைதியாக ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.


என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாது, நான் எவ்வளவு தான் சரக்கு அடித்தாலும் சுய நினைவோடு தான் இருப்பேன். என் நண்பன் டேவிட் மிகுந்த இறை பக்தி உடையவன் தினமும் தூங்கும் முன் பைபிள் படித்து விட்டுதான் தூங்குவான். மீதி மூன்று நண்பர்களும் அரட்டை அடிப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.டேவிட் தவிர எங்கள் அனைவருக்கும் குடி பழக்கம் உண்டு, எல்லாம் அளவோடு தான். முதல் நாள் எங்கு போவது என்று ஒரே குழப்பம். ராம் ஒரு இடம் சொல்றான் சதீஷ் வேற இடம் சொல்றான். எங்களுக்குள் குழப்பம் அதனால் நான் ஒரு முடிவு எடுத்து, முதலில் நாம்சூசைட் பாயிண்ட் செல்வோம் என்றேன்.



சூசைட் பாயிண்ட் இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.அங்கு நானும் நண்பர்களும் சென்று கம்பியின்அருகில் சும்மா சேட்டை, பிகர்களை நோட்டம் விட்டு எங்கள்பொழுதை களித்தோம்.ஒரு கட்டத்தில் ராஜா தன் செல்போன் கேமராவில் படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தோம். நான்
படம் எடுக்க மீதி நால்வரும் போஸ் கொடுத்தார்கள், நான் எடுத்த வீடியோவை preview பார்க்கவில்லை,ஒரு வேளை பார்த்து இருந்தால் அந்த நொடியே நாங்கள் சென்னைக்கு கிளம்பி இருப்போம்... அந்த படத்தில் என் நண்பர்களுக்கு பின்னால் ஒரு சிறுமி தலவெறி கோலத்தில் பின்னாடி உள்ள சிறு மலையில் ஏறுவது தெரிந்தது. ஆனால் அந்த சிறுமி நேரில்
யார் கண்ணுக்கும் தெரியவில்லை.


பொழுது சாய்ந்ததும் நாங்கள் அறைக்கு சென்றோம்,ஊர் சுற்றிய களைப்பில் அனைவரும் சோர்ந்து படுத்து இருந்தோம். ராஜா மது பாட்டில் எடுத்ததும் அனைவரும் உற்சாகமாக ரவுண்டு கட்டி சரக்கு ஏற்ற ஆரம்பித்தோம். டேவிட் வழக்கம் போல் பைபிள் படித்து விட்டு படுக்கைக்கு சென்றான்.மது முடிந்த பின் சிறிது நேரம் டாபிக் போட்டு பேசி அப்படியே எங்களை அறியாமல் தூங்கிவிட்டோம்.


சிறிது நேரத்தில் டேவிட் என்னை எழுப்பினான் நான்

"ஏன்டா தூக்கத்தை கெடுக்குற" என்று அலுத்து கொண்டு கேட்டேன்.


அவன் முகம் வெளிறி போய் இருந்தது. 'என்னடா' என்றேன், அதற்கு அவன்
" டேய் இங்க என்னமோ இருக்குடா, யாரோ கழுத்தை புடிச்சி நெரிக்கிற மாதிரி இருக்குடா, என் மார்ல யாரோ உட்கார்ந்து அமுக்குற மாதிரி இருக்குடா" என்று புலம்பி தள்ளினான்.


"குடிச்சது நாங்க ஆனா நீ உளர்ற அதெல்லாம் ஒண்ணும் இல்ல போய் படுத்து தூங்கு" என்று அவனை சமாதான படுத்தி நான் என் தூக்கத்தை தொடர்ந்தேன்.


டேவிட் திரும்பவும் பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான்.திரும்பவும் அவனுக்கு யாரோ ரூமில் நடப்பது போன்று தோன்றியது. எங்களை எழுப்பினான் நான் சலித்து கொண்டே "என்னடா" என்றேன் .

"டேய் மச்சான் இந்த ரூம்ல என்னவோ இருக்கு வாங்க சென்னைக்கு போய்டலாம்" என்றான்.

டேவிட் சொன்னதை கேட்டு அனைவரும் சிரித்தனர். "டேய் தண்ணி அடிச்ச நாங்களே சும்மா இருக்கோம் உனகேன்னட ஆச்சு" என்று கேலி செய்தனர். அனைவரும் தூங்க சென்றனர்.டேவிட் அன்று இரவு தூங்கவில்லை.


மறுநாள் காலையில் டேவிட்க்கு பயங்கர ஜுரம் அடித்தது. என்னிடம் வந்து தான் திருச்சியில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு போவதாக கூறினான்.


"அவன் போன போகட்டும் நாம என்ஜாய் பண்ணுவோம்" என்று
சதீஷ் அனைவரையும் உற்சாக படுத்தினான்.நாங்களும் சரி அவனுக்கு உடம்பு சரியில்லை என்று அனுப்பிவைத்தோம்.


அடுத்த நாள் நாங்கள் டால்பின் நோஸ் மற்றும் சில இடங்களை பார்த்து எங்கள் அறைக்கு திரும்பினோம்.மீண்டும் மது உற்சாகம் களைகட்டியது, அறையில் இருந்த அந்த பெரிய டேபிள்லில் வட்டம் போட்டு அரட்டை அடித்து டைம் போனதே தெரியவில்லை.அப்போது ராஜா தூங்க டைம் ஆச்சுன்னு டி.வி யை ஆப் செய்தான்.அப்போது தான் அந்த வீபரிதம் ராஜாவின் கண்ணுக்கு தெரிந்தது, ஆப் செய்த டி.வி யை உற்று நோக்கினான் அதில் ஒரு சிறுமி தலை விரி கோலத்துடன் hanger மாட்டும் இடத்தில் தொங்கி கொண்டு இருந்தாள்.திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை,டி.வி யை பார்த்தால், அந்த சைடு சிறுமி தொங்கி கொண்டு இருந்தவள் கிழே இறங்க ஆரம்பித்தாள். ராஜாவுக்கு பயம் வந்து என்னிடம் கூறினான்.



நாங்கள் ஆப் பண்ண டி.வி யை பார்த்த போது அந்த சிறுமி எங்கள் அருகில் வந்து விட்டதை பார்த்து திகில் அடைந்தோம். அந்த சிறுமி தலைவிரித்து ஒரு சோக முக பாவனையில் இருந்தது.கண்டிப்பா அவள் மனுஷியில்லை என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.
அவள் அருகே வந்தாள் நண்பர்கள் அனைவருக்கும் போதை இறங்கி பயம் வந்து விட்டது,


அவள் நேரே வந்து என் கழுத்தை பிடித்து
"நேத்து காலையில வீடியோ எடுத்த இல்ல அத அழி" என்றாள்.


எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த வீடியோ என்று தெரியவில்லை தைரியம் வந்து சதீஷ் "முதல்ல அவன விடு" என்றான்.



அந்த சிறுமி கேட்கவில்லை, நான் அந்த சமயம் என் கையில் கிடைத்த கம்பியால் டி.வி யை பார்த்து அந்த சிறுமி இருக்கும் பக்கம் கம்பியை வீசினேன் . அந்த கம்பி அவள் மேல் பட்டு அவள் அழ ஆரம்பித்தாள்.


அந்த சிறுமி எங்களிடம்
'இங்க இருக்காதிங்க மொதல்ல கிளம்புங்க' என்று எச்சரிக்கை விடுத்தாள். நண்பர்கள் அனைவரும் அழும் நிலைக்கு வந்து விட்டனர். நான் அந்த வீடியோவை அழித்து விட்டதாக கூறினேன் .


அப்போதும் அந்த சிறுமி "இங்க இருந்து போய்டுங்க உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்" என்றாள்.


நாங்கள் நால்வரும் டர்ராகி வெளியில் வந்து , யாரைவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் ஒரு ஆளையும் காணோம். ரிசார்ட்டில் வேலைக்கு இருப்பவர்கள் இரவில் தங்கள் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாம் .நாங்கள் மேலும் பயம் கொண்டு ரோட்டில் ஓரத்தில் உக்காந்து இரவு பொழுதை கழித்தோம். என் வாழ்க்கையில் இந்த சம்பவம் ஓர் உண்மையை உறைத்தது அது ஆவி இருக்கிறது என்று.



மறுநாள் காலையில் வேலைக்கு வந்த நடுத்தர வயது உடைய நபரிடம் நாங்கள் இது மாதிரி ஒரு சிறுமியை கண்டதாக கூறினோம் . அதுக்கு "அவர் சும்மா தண்ணி போட்டு உளறாதிங்க தம்பி" என்றார்.தான் அறையை போய் சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றார் நாங்கள் பயந்து போய் அறைக்கு செல்லவில்லை.


அறைக்கு சென்ற நபர் உடனே வெளியில் வந்து
"நேத்து நைட் என்ன பண்ணிங்க" என்றார்.


"ஒண்ணும் இல்லன நாங்க பாட்டுக்கு சரக்கு சாப்பிட்டு தூங்க போனோம் அப்பதான் அந்த பொண்ணு வந்து ..." என்று இழுத்தேன் .



உடனே அந்த நபர் "போய் அந்த டேபிள்லை பாருங்க" என்றார்.



நாங்கள் அனைவரும் சென்று டேபிளில் என்ன என்று பார்த்தோம் . நாங்கள் அனைவரும் மூச்சடைத்து நின்றோம், அடுத்த நொடி பெட்டி பையை எடுத்து ஊருக்கு கிளம்பினோம்.


அறையில் இருந்த அந்த டேபிள் மீது ஒரு பெண்ணின் கூந்தல் முடி கொத்தாக இருந்தது.



முற்றும்.


(இது ஒரு மீள் பதிவு கதை - சில மாற்றங்களுடன்)


ஜெட்லி....(சரவணா...)


Wednesday, December 9, 2009

தலைவர் வரார்

உச்சியில் சூரியன் எரிந்து கொண்டிருந்தது, வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டே, காலியாய் கிடந்த நெடுஞ்சாலையில் நெளியும் கானலை பார்த்தபடியிருந்தேன். கடந்த ஒரு மணி நேரமாய் இந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன், முதுக்குக்கு பின்னே நீளும் சாலையில், ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கதறி அடங்கிவிட்ட ஒலிப்பான்களுடன் நிற்கும் வாகனங்கள். போக்குவரத்து நிறுத்தப்பட்டு பதினைத்து நிமிடங்களாகிறது. ஒவ்வொரு நிமிடமும் எரிச்சல் கூடிக்கொண்டே வந்தது. நூறடி தள்ளி நின்ற சக காவலர் நட்புடன் சிரித்தபடி என்னை நோக்கி வந்தார். பெயர்பட்டை 'மதியழகன்' என்றது.

என்னருகே வந்தவர் என் பெயரை பார்த்துவிட்டு பேசத்தொடங்கினார், "சொந்த ஊர் திருநெல்வேலியா?" என்றார், "எப்படி கண்டுபிடிச்சீங்க!" கேட்டேன் நான், "அதுதான் பேரும், முகமும் சொல்லுதே" என்று சிரித்தவர், மேலும் கேட்டார், "இப்போதான் சேர்ந்து இருக்கீங்களா?"
"இல்லை சார், இரண்டு வருடம் மணிமுத்தாறு காம்பில் (Camp), ரிசர்வில் இருந்தேன், இந்த மாதம் தான் இங்கே போஸ்டிங் ஆச்சு", இப்போது நான் கேட்டேன் "ஒரு மணி நேரம் ஆச்சு, இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி நிற்கணும் சார்?", பதில் சொல்லாமல் "இப்படி நிக்குறது இதுதான் முதல் தடவையா?" என்று கேட்டார், "ஆமாம் சார்" சொன்னேன் நான், "அது தான் இப்படி கேக்குறீங்க, இன்னிக்கு பரவாயில்லை, சில நாட்கள் நாலஞ்சு மணிநேரமெல்லாம் காத்திருக்க வேண்டியிருக்கும்", என்றார், அவர் சகஜமாய் பேசத் தொடங்கியதை பார்த்து கேட்டேன், "நீங்க எந்த ஊர் சார், எத்தனை வருஷமா சர்வீஸ்ல இருக்கீங்க?", அவர் சொன்னார், "நான் சென்னைக்காரன் தான், சர்வீஸ் பத்து வருஷம் ஆச்சுப்பா, இப்பதான் எஸ்ஐ எக்ஸாம் எழுதியிருக்கேன், பார்க்கலாம்".

வரப்போகும் தலைவரின் ஊழல் ஜாதகம் மனதில் தோன்றி எரிச்சல் மண்டிக்கொண்டிருந்தலும், அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்து தெரியாததால், தயக்கம் விலகாமல் பொதுப்படையாய் கேட்டேன், "இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இப்படி தலைவர் வரார், அமைச்சர் வரார்ன்னு காவல் நிக்கப் போறோம்", கேட்டது தான் தாமதம், "தலைவனா? இவனா? அப்போ காமராஜரையும் கக்கனையும் என்ன சொல்லுவீங்க? இவன் என்ன நாட்டுக்கு தியாகமா பண்ணினான்? இவன் மகனுக்கும் பேரனுக்கும் அவனோட பையனுக்கும் சேர்த்து இந்த நாட்டுல பாதிய வாங்கிட்டான், இப்போ மட்டுமென்ன இவன் மக்கள் சேவைக்கா போய்க்கிட்டிருக்கான்? ஆயிரம் கோடி ஊழலுக்கு ஆறு வருடமாய் நடக்கும் விசாரணைக்கு கோர்ட்டுக்கு போய்க்கிட்டிருக்கான், நம்ம ஜனநாயகம் இப்படி இருக்கும் வரை இவன் கோர்ட்டுக்கு போறதுக்கென்ன, குளிக்கப் போறதுக்குக்கூட நம்மை காவலுக்கு நிற்க சொல்வாங்க" என்று பொரிந்து தள்ளிவிட்டார். "சரி சார் நாமதான் வாங்குற சம்பளதுக்காகவும் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காகவும் இப்படி நிக்குறோம், ஆனா இந்த பொதுமக்கள் என்ன தப்பு செஞ்சாங்க? இவுங்களை எதுக்காக காக்க வைக்கணும்?" என்று கேட்டேன், "எல்லாம் ஒரு பாதுகாப்புக்க்காகதான், கொஞ்சம் நாள் ஆச்சுன்னா உங்களுக்கே புரியும்" என்று கூறி மையமாய் சிரித்தபடி அவருடைய இடம் நோக்கி நடந்து சென்றார்.

இன்னும் பத்து நிமிட காத்திருப்புக்கு பின், இருபது கார்கள் முன்னும் பின்னும் வர நடுநாயகமாய் வந்த காரில் அமர்ந்து செய்தித்தாள் படித்தபடி கடந்து சென்றார் தலைவர். ஊர்வலம் என்னைத் தாண்டி முந்நூறடி சென்றிருக்கும், கண்ணிமைக்கும் நேரத்தில், எங்கிருந்து வந்தான் என்றே புரியாதபடி ஒருவன், சரியாய் தலைவரின் வண்டியின் குறுக்கே பாய்ந்தான், வெடித்தான். அவனோடு சேர்ந்து தலைவரின் வண்டியும், உள்ளிருந்த அனைவரும் வெடித்துச்சிதற, அதிர்ச்சியில் ஒருநிமிடம் உறைந்த நான், சுதாரித்து அதை நோக்கி ஓடினேன், மதியழகனோ எனக்கு முன் மிக நிதானமாக நடந்து கொண்டிருந்தார். அவரருகே சென்ற நான் "வேகமா வாங்க" என்றேன், அப்போதும் அந்த புன்சிரிப்பை விடாத அவர் சொன்னார் "அவன் பண்ணின தப்புக்கு அவன் தண்டனை வாங்கிக்கிட்டான், அவனுக்கு காவலுக்கு போன தப்புக்காக நம்ம ஆளுங்க நாலு பேரும் உயிரவிட்டுட்டங்க, இந்த நாயோட பொதுமக்களையும் போக விட்டா இன்னும் எத்தனை பேர் செத்திருப்பாங்க? இப்போ புரியுதா தலைவர்கள் வரும்போது போக்குவரத்த ஏன் நிறுத்துறோம்ன்னு?"

நன்றி
சங்கர்

Monday, November 23, 2009

உங்களோட கொஞ்சம் பேசணும்

அலுவலகத்தில் மும்மரமாக வேலை (!!) செய்து கொண்டிருந்தபோது, இன்டர்காம் கத்தியது, யாரென்று பெயரை பார்த்தபோது, அவள், குறுக்கும் நெடுக்கும் நடக்கும் போது அவள் அரைக்கண்ணாலும் (எப்போதாவது), நான் முழுக்கண்ணாலும் (எப்போதும்) பார்ப்பது தவிர, இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை, வேறு வேறு துறைகளில் இருப்பதால், பேச அவசியமும் ஏற்பட்டதில்லை. இப்போது எதற்கு அழைக்கிறாள், அழைப்பதுஅவள்தானா அல்லது வேறு யாரும் அவள் மேஜையிலிருந்து அழைக்கிறார்களா, இப்படியெல்லாம் எண்ணங்கள் ஒரு நொடிக்குள் மனதில் கடந்துபோக, தொலைபேசியை எடுத்தேன்.




நான் : ஹலோ, சங்கர்

அவள் : நானதான் பேசறேன்,

நான் : சொல்லுங்க,

அவள் : உங்க கூட கொஞ்சம் பேசணும்,

நான் : பேசலாமே, இப்போ நான் Free (வெட்டி) தான்,

அவள் : போன்ல இல்லை, நேர்ல பேசணும்,

நான் : சரி, நீங்க என் இடத்துக்கு வாங்க,

அவள் : ஆபிஸ் விஷயம் இல்லை, கொஞ்சம் பர்சனலா பேசணும், வெளியில எங்கேயாவது பேசலாம்,

நான் : சரி, எங்கே பார்க்கலாம்னு நீங்களே சொல்லுங்க,

அவள் : பக்கத்து பில்டிங்ல இருக்கிற சாப்பாட்டு நீதிமன்றத்துல (Food court) பார்க்கலாம்,

நான் : ஆமா, என்ன விஷயம்னு சொல்லவே இல்லியே,

அவள் : இப்போதான் கேக்கணும்னு தோணிச்சா?

நான் : நீங்களே சொல்லுவீங்கன்னு காத்திருந்தேன் (நாங்கல்லாம் ரொம்ப நல்லவங்க),

அவள் : நேர்லயே சொல்றேன்,

டொக் (ஒருகாலத்துல, நாங்கல்லாம் ராஜேஷ்குமார் விசிறிகள்)




மதியம் ஒரு மணி, சோத்துக்கடை, இருவரும் எதிரெதிர் இருக்கைகளில்,

நான் : சொல்லுங்க, என்ன விஷயம்,

அவள் : நான் சொல்றது இருக்கட்டும், நான் என்ன பேசப்போறேன்னு எதிர்பார்த்து வந்தீங்க?

நான் : நான் எந்த விஷயத்திலும், எதையும் எதிர்பார்ப்பது இல்லைங்க,

அவள் : பொய் சொல்லாதீங்க, சும்மா சொல்லுங்க

நான் : எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனா, சில யூகங்கள் இருந்தது,

அவள் : என்ன யூகங்கள்?

நான் : "நீங்க தானே பிரபல (!!!) பதிவர் சங்கர், உங்க பதிவுகள் (மொத்தமே பத்து தான்) எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உங்க விசிறி," அப்படின்னு சொல்லுவீங்களோன்னு நினைச்சேன்,

அவள் : இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல? அடுத்து என்ன.

நான் : "நேத்து நீங்க ஒரு புத்தகம் வச்சிருந்தீங்களே, அதை எனக்கு தர முடியுமா, ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை,"

அவள் : நீங்க நேத்து ஆபிஸ் வந்தீங்களா இல்லையான்னே எனக்கு தெரியாது, இதுல புத்தகத்த வேற கேக்குறாங்களா? அடுத்து,

நான் : "உங்க சொந்த ஊர் அம்பாசமுத்திரம் தானே, எங்க ஊரும் அதுதான், எங்க அப்பாவுக்கு உங்க அப்பாவ நல்ல தெரியுமாம், உங்கள வீட்டுக்கு கூட்டிவர சொன்னார்"

அவள் : எங்க அப்பா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த சிங்காரச் சென்னையில்தான் இதுல இதுவேறயா, அப்புறம்,

நான் : வேறென்ன, "உங்க நடை (!) உடை (!!) பாவனை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்க மத்தவங்களோட பழகற விதம் என்ன உங்கள நோக்கி ஈர்க்குது (!!!), நீங்க ரொம்ப அழகா (!!) வேற இருக்கீங்க, மொத்ததுல உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"

அவள் : இப்படீல்லாம் வேற நினைப்பிருக்கா, அப்புறம்,

நான் : வேற ஒண்ணும் இல்லீங்க, நீங்களே சொல்லிடுங்க, இதுல ஏதாவது ஒண்ணுதானே?

அவள் : ஒரு புண்ணாக்கும் இல்லை, ஒருவாரமா பதிவு எழுத விஷயம் கிடைக்காம மண்டைய உடைச்சிக்கிட்டிருக்கியே, அதுதான் இப்படி பேசணும்னு கூப்பிட்டா அதையே பில்ட்-அப் பண்ணி ஒரு பதிவா எழுதிரமாட்ட, அதுக்குதான்.


நன்றி
சங்கர்


டிஸ்கி

  • இது கதை மாதிரி இல்லையே, நடந்த விஷயம் மாதிரி இருக்கேன்னு கேட்பவர்களுக்காக "கதை" என்ற லேபிளும், எனக்கு நடந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்னு ஆச்சரியபடரவங்களுக்காக "சம்பவம்" என்ற லேபிளும் தரப்பட்டுள்ளது,


  • பேர் போடாம அவள் அவள்னே சொன்னதுனால எனக்கு தைரியமில்லைன்னு நினைச்சிடாதீங்க, ஒரே நேரத்தில ஏழெட்டு பேர் கண்ணுல வடபடறாங்க (தென்படும்போது, வடபடக்கூடாதா? (நன்றி கசீ சிவகுமார்)) அதுல யாருக்காவது உண்மைலேயே ஏதாவது அபிப்ராயம் இருந்து, நான் வேற யார் பேரையாவது போட்டுரக்கூடாது பாருங்க, அதுக்குதான்.


புகைப்படம் நன்றி : Sulekha.com

Monday, November 9, 2009

புதிர்.-சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

புதிர்.-சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

"டேய் நாதாரி கார்ல வந்தா நீ பெரிய புடிங்கியாட" என்று என் பின்னாலிருந்து குரல் வந்ததும் நான் சட்டென்று திரும்பி பார்த்தேன்.

பைக்கில் வந்த சிகப்பு சட்டை ஆசாமி காரில் வந்த ஒரு உள்ளூர்
அரசியல் பிரமுகரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.

"நான் புடிங்கிதாண்ட ..த்தா என்னடா பண்ணுவே" பதிலுக்கு எகிறினார் அரசியல் பிரமுகர்.

நான் இருவரின் அருகிலும் சென்றேன், பைக்கின் வலது பக்கத்துக்கு இண்டிகேட்டர் உடைந்திருந்தது.

அரசியல் பிரமுகர் என்னை பார்த்தவுடன், நான் அவருக்கு வணக்கம் வைத்தேன் "யோவ் உன்னாலதான் இப்படி ஆச்சு, சும்மா காலங்காத்தால டென்ஷன் ஆக்குரிங்க". நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

பின்னாடி வேறு ஹோர்ன் சத்தம் காதை பிளந்தது. "உன் டிரைவர் மேலதான் தப்பு , என் இண்டிகேட்டர்க்கு காசு கொடுத்தா தான் வண்டியை உடுவேன்" எகிறினான் அந்த சிகப்பு சட்டை ஆசாமி.

"யப்பா நீ அவனை இங்க இருந்து கிளப்பி விடு. சும்மா அவனா வந்து வண்டியில் விழுந்துட்டு பேசுறான் பாரு" என்று என்னிடம் கூறினார் அந்த அரசியல் பிரமுகர்.


நான் பைக் ஆசாமியிடம் சென்று "தம்பி சின்ன செலவுதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கிளம்புங்க"என்றேன்.

"நீ அவனோட சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கிறியா, இருடி சாயங்காலம் பசங்களை கூட்டிட்டு வரேன்" என்று கிளம்பினான் பைக் ஆசாமி.


"ச்சே.. இவனுங்க ரவுசு தாங்க முடியுலப்பா" என்று நான் என் வேலையை பார்க்க போனேன். கையை மேலே தூக்கி எதிரே வரும் வாகனத்தை விசிலடித்து நிறுத்திய பின்,மக்கள் ரோட்டை கடந்தார்கள்.


சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

புடிச்சிருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க.... பின்னோட்டம் போட்டாலும் நன்றாக இருக்கும்...

உங்கள்
'ஜெட்லி' சரண்.

Saturday, October 31, 2009

விடை கொடு எங்கள் நாடே

கிபி 2100, ஜனவரி 5,

'இன்று தான் கடைசி நாள், இந்த கிரகத்தை விட்டு புறப்படுகிறோம், எங்கும்வெப்பம் தகிக்கிறது, கடந்த நூற்றாண்டில் கடலுக்குள் போன ஐம்பது சதவிதநிலப்பரப்பில் வாழ்ந்தவர்களில் கடலோடு போனவர்களை தவிர்த்த பிறர், எஞ்சிய நிலத்தில் தஞ்சம் புகுந்ததால் எங்கும் இடநெருக்கடி, கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்த விஞ்ஞானத்தின் பலனாய், இருந்த காடுகளை எல்லாம் அழித்தாகிவிட்டது, விளைவு கடந்த இருபதாண்டுகளாய் மழை இல்லை, கடல் நீரை நன்நீராக்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தோம், அதற்கும் வந்தது ஆபத்து, பூமியிலிருந்து எடுக்க முடிந்த எரிபொருள் எல்லாம் சுரண்டி செலவிட்டாயிற்று, சூரிய ஒளியை பயன்படுத்தி உண்டாக்கிகொண்டிருந்த மின்சாரம், ஓசோனில் விழுந்த ஓட்டையால், இனி சாத்தியமில்லை, வீரியம் வேண்டுமென்று கொட்டிவைத்த உரங்களும் உயிர்கொல்லிகளும் விளைவிக்கவே தகுதியற்றதாய் மண்ணை மாற்றியதால், பல நூறடி ஆழ உழுது (தோண்டி) கிடைக்கும் மண்ணை வைத்து விவசாயம் செய்தோம், கடந்த பத்தாண்டுகளாய் அவ்வப்போது பெய்யும் அமிலமழை அந்த பயிர்களையும் அழிக்க தொடங்கியதை கண்டபின் தான் முடிவெடுத்தோம், இந்த பூமியை விட்டு வேறு கிரகம் போவதென்று.


இந்த நிலை வருமென ஏற்கனவே எதிர்பார்த்திருந்தபடியால் மாற்று கிரகம் தேடும் வேலைகள் கடந்த அரை நூற்றாண்டாய் வேகமாய் நடந்துகொண்டிருக்கின்றன, இந்த சூரியக்குடும்பத்தில் இந்த பூமியை தவிர வாழ்வதற்குஏற்ற இடம் ஏதுமில்லை. நம் முன்னும் பின்னும் இருக்கும் கோள்களோ ஒன்றுகுளிரில் உறைந்து கிடக்கின்றன, அல்லது கொதித்துக்கொண்டிருக்கின்றன, அருகிலிருக்கும் நட்சத்திர மண்டலங்களை ஆராய்ந்து பார்த்ததில், சற்றேறக்குறைய இந்த பூமியை போன்ற கோள் ஒன்றை கண்டுபிடித்துவிட்டோம், நிலத்தில் நான்கில் மூன்று பங்கு நீரும், காற்றில்தேவையான அளவு ஆக்சிஜனும் உள்ளதாம். விசித்திர மிருகங்கள் பல வாழ்கின்றனவாம், இங்கு ஏற்கனவே அழித்த அனுபவம் கைகொடுத்தால்அவற்றில் பெரும்பகுதியை விண்ணிலிருந்தே தாக்கி அழித்தாகிவிட்டது.


மனிதர்களை தவிர மற்ற அனைத்தையும் இங்கேயே விட்டுசெல்வதாய் திட்டம். எல்லாவற்றையும் புதிதாய் தொடங்கலாம் என உலகத்தலைமை முடிவுசெய்துள்ளதால் இந்த ஏற்பாடு. விஞ்ஞானத்தின் கட்டற்ற வளர்ச்சியால் வந்த வினைதான் இதுவென்பதால், எந்த அறிவியல் சாதனமும் எடுத்து செல்லபோவதில்லை, இத்தனை துன்பங்கள் வந்த பின்பும் எல்லோரும் ஒன்றுசேரவிடாமல் குறுக்கே நிற்கும் மதங்களுக்கும், கடவுள்களுக்கும் கண்டிப்பாய்அனுமதி இல்லை, பழங்கதைகள் எல்லாம் மறந்து விடவும், அடுத்ததலைமுறைக்கு செல்லாமல் மறைத்துவிடவும் உத்தரவு, இயற்கையையே நம்பி, இயற்கையையே வணங்கி, இயற்கையையே
சரணடைந்து வாழத்தொடங்கவேண்டும், சுருக்கமாய் சொல்வதென்றால் மீண்டும் குகைக்கே திரும்புகிறோம். ஏழு ஆண்டுகளுக்கான உணவும், நீரும், காற்றும் மட்டுமேஅனுமதிக்கப்பட்டிருக்கும் விண்வெளி பயணத்தில், சிலர் கடவுள்களையும், கதைகளையும் மறைத்து எடுத்துவரப்போவதாய் கூறுகின்றனர்.


இன்னும் எத்தனை முறைதான் இடம் பெயர்வது? எந்த ஒரு இடத்திலும்மூவாயிரம் வருடங்களுக்கு மேல் இருந்த வழக்கமே இல்லை. செல்லுமிடத்தின்செல்வங்களையெல்லாம் அழித்து முடிப்பது, அடுத்த இடம் தேடிச்செல்வது, மனிதனால் மட்டுமே முடிந்த அற்புதச்செயல் இது. இதுநாள் வரை உணவும்உறைவிடமும் தந்து உயிர்கொடுத்த உலகே, நன்றி, விடைபெறுகிறோம்.'




இதன் பிந்தைய தேதியிட்ட பக்கங்களில் ஒன்றும் எழுதப்படவில்லை,

ஆண்ட்ரோமீடா காலக்ஸியில் உயிர் வாழ தகுதியுள்ளதாய் அறியப்பட்ட M31 இன் துணைகிரகத்தில், ஆளரவமற்றிருந்த வீடுகளில் ஒன்றில் கிடைத்த நாட்குறிப்பை படித்து முடித்து, தலைநிமிர்ந்து பார்த்தனர், ஆராய்வதற்கு பூமியிலிருந்து போன அந்த இரு விஞ்ஞானிகளும்


படித்துப் பாராட்டவோ, 'விஞ்ஞான சிறுகதை என்றாலே விண்வெளி, வேற்று கிரகம் என அசிமோவ்தனமாக தான் எழுதவேண்டுமா' என திட்டவோ சுஜாதா இல்லையே என்ற ஆதங்கத்துடன்

சங்கர்



சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

Friday, October 23, 2009

சபலம்.

சபலம்.

"மச்சான் எத்தனை நாள்டா வீட்டிலியே....,," என்று இழுத்தான் சுரேஷ்.

"டேய்! வெளியே எல்லாம் வேணாம்டா, கண்ட கண்ட நோயெல்லாம்
வருதாம்" என்றான் அமுதன்.

"என்னடா டெய்லியும் ஒரே இதை பண்ண போர் அடிக்கும்டா,
வெளியே வா விதம்விதமா இருக்கும்" என்று அமுதனை
ஆசைப்படுத்தினான் சுரேஷ்.

"விதம்விதமா இருக்கும்,உள்ளே போகும் போது நல்லா தான் இருக்கும்,ஆனா எத்தனை பேர் பண்ணிட்டு போன எச்சையோ!"
என்று சுரேஷை எச்சரித்தான் அமுதன்.

"மச்சி டி.நகர்ல குஜராத்தி ஒன்னு இருக்குடா, ரேட் 600 ரூபாய் தான்டா"என்று ரேட்டை சொல்ல ஆரம்பித்தான் சுரேஷ்.

அமுதன் உதட்டை பிதுக்கினான்.

"அப்படி நம்ம ஊரு வேணாம்னா, அடையார்ல சைனீஸ் எப்படிடா?
ரேட் கொஞ்சம் அதிகம்டா ஆயிரம் ரூபாய்" அமுதனை
பொருட்படுத்தமால் நச்சரித்தான் சுரேஷ்.

"வேணாம் மச்சான், என் பொண்டாட்டி அவுங்க அப்பா வீட்டுக்கு போன டைம்ல என்னை யாரவது வெளிய பார்த்து அவகிட்ட சொன்னாங்க வை அவ்வளவுதான்"என்றான் பயத்தில் அமுதன்.


"ரைட் இதான் மேட்டர்ஆ!! கால் பண்ணா item வீட்டுக்கே வர போகுது....." சுரேஷ் வாய் மூடுவதற்க்குள்

"மச்சி அக்கம் பக்கத்தில் எல்லாம் ஒரு மாதிரி பார்ப்பாங்காட"
சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டு இருந்த அமுதன் சொன்னான்.

"சைனீஸ் item வாசலுக்கு வந்த உடனே கதவை மூடிடாலம் மச்சி, அப்புறம் யாருக்கு தெரிய போகுது?" என்று கிளுகிளுப்பில் கூறினான் சுரேஷ்.

"மச்சான் அந்த டைம்ல யாரவது கதவை தட்டின பிரச்சனை தாண்ட,பக்கத்தில் எல்லாம் ஐயர் ஆளுங்கடா அப்புறம் உடனே வீட்டை காலி பண்ண சொல்வாங்க"வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினான் அமுதன்.


"டேய் டோமர் !!நீயும் ஒரு வாரமா உன் பொண்டாட்டி வீட்ல இல்லாம வெறும் சப்பாத்தி, தோசை மட்டும் சாப்புடுற.சரி சைனீஸ் ஹோட்டல்க்கு போலாம்னு கூப்பிட்டா ரொம்ப
ஓவர்ஆ பண்ற. நீ சப்பாத்தியை சாப்பிட்டு தொலை. நான்
குஜராத்தி ஹோட்டல்க்கு போறேன். இன்னொரு தடவை நான் உன்னை வெளியே சாப்பிட கூப்பிட்டா என்னை செருப்பால அடிடா" என்று கோபத்தில் குஜராத்தி ஹோட்டலை நோக்கி நடந்தான் சுரேஷ்.

டிஸ்கி: இவ்ளோ நேரம் இவங்க பேசினது வெளியே போய் சாப்பிடறத பத்தி மட்டும் தான், வேணும்னா முதலில் இருந்து படிச்சு பாருங்க.

மக்களே கதை பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க, கமெண்ட் போட்ட கொஞ்சம் உற்சாகமா இருக்கும்.பார்த்து பண்ணுங்க.


உங்கள்
ஜெட்லி சரண்.