Showing posts with label புத்தக திருவிழா. Show all posts
Showing posts with label புத்தக திருவிழா. Show all posts

Tuesday, January 12, 2010

புத்தகக்காட்சி நாள் 12 - (மன) நிறைவு - பதிவர்களின் காலண்டர் படங்களுடன்




 
சனிக்கிழமை பதிவர் சந்திப்பு முடிந்து, ஒன்பதரை மணிக்கு தான் கிளம்பினேன். நண்பர் ஒருவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு நான் வீடுவந்து சேர்ந்தபோது மணி பன்னிரண்டு. கொட்டும் பனியில் வண்டி ஓட்டிக்கொண்டு வந்ததால், காலையில் எழும்போதே தலைவலி தொடங்கி விட்டது. நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக்கொண்டே போனாலும் நிச்சயம் புத்தகக் காட்சிக்கு சென்றே தீர வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது, சுஜாதா புத்தகங்கள் குறித்து சொல்லியிருந்த ஜாக்கி அண்ணனின் பதிவு. ஒன்பது மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து கணிணியில் அமர்ந்த நான், சந்திப்பு குறித்த பதிவை எழுதி முடித்து, எழும் போது மணி ஒன்று. குளியலை போட்டு, சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கத்துக்கு பின் கிளம்பிய போது மணி நான்கு.


நண்பர் குறும்பன் கடந்த வாரமே சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார், தலைவலி மண்டையை பிளந்தாலும், சுஜாதாவும், மூன்றரை மணிக்கே வந்துவிட்ட குறும்பனும், மீண்டும் அழைக்க, நெற்றியில் அப்பிய மிளகுடன் கிளம்பினேன். ஐந்தே முக்காலுக்கு ஒருவழியாய் சென்று சேர்ந்தபோது, மிளகும் காய்ந்து போய் இருந்தது, தலைவலியும் விட்டிருந்தது. பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி  ஹெல்மெட்டை கழற்றிய போது படகில் வந்திறங்கிய தீவிரவாதியைப் பார்ப்பது போல் சிலர்  பார்த்ததால், குடிக்கக் கொண்டு போயிருந்த வெந்நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டு உள்ளே சென்றேன்.

போகும் வழியில் கண்ணில் பட்டது (என்ன கொடுமை சார் இது)

  
ஏற்கனவே வாங்கி முடித்துவிட்ட குறும்பனுடன், மீண்டும் ஒரு உலா தொடங்கியது. நண்பர் ஒருவர் வாங்கித்தர சொல்லியிருந்த குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களும், பிரபாவுக்கான சிந்தாமணியும் பட்டியலில் இருந்தது, குழந்தைகள் புத்தகங்கள் பழனியப்பாவிலும், பிரேமா பிரசுரத்திலும் கிடைத்தன, சிந்தாமணி வேட்டையில், பாரி நிலையத்தில் கொஞ்சம் ஒளி தெரிவது போல் இருந்தது, கடைசியில் கையிருப்பு இல்லை என்று, கைவிரித்து விட்டனர், அடுத்த வாரம் நேரே பதிப்பகத்தின் பாரிமுனை அலுவலகம் செல்ல உத்தேசம்.




வரும் வழியில், மாம்பலத்தில் பார்த்த கூட்டத்திற்கு சிறிதும் குறைவில்லாதது போல் தோன்றியது உள்ளே இருந்த கடைசிநாள் கூட்டம். இத்தனை நாள் இல்லாத (அல்லது தெரியாத), புழுக்கமும் வெக்கையும் உள்ளே நிலவியது. ஜாக்கி அண்ணன் சொன்ன பாரதி பதிப்பகம் தேடிச் சென்று பார்த்தபோது, மூன்றே மூன்று புத்தகங்கள் தான் மிஞ்சி இருந்தன, கண் முன்னே 'காகித சங்கிலிகளின்' கடைசி பிரதியை ஒருவர் வாங்கி செல்ல, வேடிக்கை பார்த்திருந்தேன், உஸ்மான் சாலையில் உள்ள பாரதி பதிப்பக அலுவலகத்திற்கும் படையெடுக்க உத்தேசம்.

எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம்


இடம் பெயர்ந்த கடற்கரை வியாபாரம்


ஐந்து ரூபாய்க்கு அருமையான இஞ்சி டீ


ஜெட்லி கேட்ட ராஜீவ் புத்தகத்தை வாங்க கிழக்கில் நுழைந்தோம், புத்தகத்தை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தபோது, எதிரே கவிதா பதிப்பகம் கண்ணில் பட உள்ளே நுழைந்தேன், அப்போது "பதிவர் யாராவது அலுவலகம் வரவும்" என அறிவிப்பு வந்தது, அடடா, நம்மைத்  தான் கூப்பிடுகிறார்கள் போலிருக்கிறதே என்று வேகமாய் சென்று விசாரித்த போது, அவர்கள் சொன்னது "பாஸ்கர் என்பவர் அலுவலகம் வரவும்" என்று தெரிந்தது. கடைசி நாளில் இவ்வளவு பெரிய மொக்கை  வாங்கியதால், நான் மொக்கைப் பதிவர் தான் என்பது உறுதியாகிவிட, சந்தோஷத்தோடு கிழக்குக்கு திரும்பி வந்தால், குறும்பன் புத்தகத்தை வாங்கி விட்டிருந்தார். பணம் தர முயன்றபோது அன்புப்பரிசு என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார். அப்போது அங்கு மோகன் குமார் போல் ஒருவரை பார்த்ததாக குறும்பன் சொல்ல அவரிடம் சென்று கேட்டு இன்னுமொரு மொக்கை வாங்கினேன்.

இரு மேதைகளும், இன்னுமிரு மொக்கை பதிவர்களும்



தொடங்கியவரிடம் தான் முடிக்க வேண்டும் என்ற தமிழ் பட்டிமன்ற மரபை உத்தேசித்து, தமிழினியில் கல்லா கட்டிக்கொண்டிருந்த அண்ணன் சிவராமனிடம் சென்று விடை பெற்றுக்கொண்டு  கிளம்பினோம். வேறு எந்த பதிவரும் கண்ணில்படவில்லை. வெளியில் வரும்போது, காட்சி அலுவலகம் கண்ணில் பட, மூளை குறுக்கே வேளை செய்தது. "தமிழ் பதிவர்கள் யாராவது இருந்தால் அலுவலகத்திற்கு வரவும், இங்கு இரண்டு பதிவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்" என்று அறிவிப்பு ஒன்று செய்யலாம் என எண்ணி விசாரித்தபோது, புத்தகக் காட்சி கையேடு (ரூ 100) விற்பனை குறித்த அறிவிப்பில் மூழ்கி இருந்ததால் "பதினைஞ்சு நிமிஷத்திற்கு அறிவிப்பு ஏதும் செய முடியாது" என்றார்கள். இன்னும் ஒரு மொக்கை வாங்கிய திருப்தியில் வீட்டுக்கு கிளம்பினோம்.


பதிவர்  கொண்டாட்ட மயக்கத்தில், முந்தைய பதிவில் எழுத மறந்து போன, இந்த வருட புத்தகக் காட்சிக்கான, கடைசி புத்தகப்பட்டியல்

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் - கி ரா - அன்னம் -  Rs 700
வேட்டி - கி ரா - அன்னம் -  Rs 60
அந்தமான் நாயக்கர் - கி ரா - அன்னம் -  Rs 50
காந்தளூர் வசந்த குமரன் கதை - சுஜாதா - பாரதி - Rs 120 
கொலையுதிர் காலம் - சுஜாதா - பாரதி - Rs  120 
பூக்குட்டி - சுஜாதா - பாரதி - Rs  15
அப்பா அன்புள்ள அப்பா - சுஜாதா - பாரதி - Rs  12 
மனைவி கிடைத்தாள் - சுஜாதா - பாரதி - Rs  18 
நைலான் கயிறு - சுஜாதா - விசா - Rs  41 
ராயர் காபி கிளப் - இரா முருகன் - கிழக்கு - Rs  65
என்னை எழுதிய தேவதைக்கு - குகன் - நாகரத்னா - Rs  55
நீளும் றெக்கை - வேல ராமமூர்த்தி - நடைபாதை - Rs  10

சென்னைக்கு குடிபெயர்ந்த இந்த ஒன்பது வருடங்களில், கடந்த ஆறு வருடமாக புத்தகக்காட்சிக்கு சென்று வருகிறேன். என்றாலும் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் வாங்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. வழக்கமாய் இரண்டு நாட்கள் செல்லும் நான், இந்த முறை தான் ஒன்பது நாட்கள் சென்றேன். புத்தகம் வாங்குவதை விடவும், பதிவர்களை சந்திப்பதே, இந்த விஜயங்களின் முக்கிய நோக்கமாய் இருந்தது. பதிவர்களாய் சந்தித்து, நண்பர்களாய் விடைபெற்ற ஒவ்வொரு மாலையும் மறக்க முடியாதது.

"வைபவங்கள் அனைத்தும் களைப்பில் தான் முடிவடைகின்றன". ஒவ்வொரு தீபாவளியும், பொங்கலும் முடிவுக்கு வரும்போது எனக்குள் தோன்றுவது கசீ சிவகுமாரின் 'கானல் தெரு'வில் வரும் இந்த வரிதான். இந்த மனக்களைப்பும், வெறுமையும் குறைந்தது இரண்டு நாட்களாவது நீடிக்கும். சமீபகாலமாய், கொண்டாட்டங்கள் குறைந்து போன, இந்த ஒரு நாள் பண்டிகைகள் உண்டாக்கும் தாக்கமே இரு நாள் நீடிக்குமென்றால், பன்னிரண்டு நாட்கள் பெரும் கொண்டாட்டங்களுடன் கழிந்த, இந்தத் திருவிழா ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்னவாயிருக்கும் என்று நினைக்கவும் முடியவில்லை.

 இடைக்கால நிவாரணம்





கீற்று அரங்கில் வாங்கிய, பாரதி காலண்டர் வழியே எடுத்த, சில படங்கள் இதோ

பலா பட்டறை சங்கர்



தண்டோரா 
















கேபிள் சங்கர்













DR அசோக் 














புத்தகக் காட்சி குறித்த பிற பதிவுகள்


 
நன்றி
சங்கர்

Sunday, January 10, 2010

புத்தகத்திருவிழா - நாள் 6, 10, 11 மற்றும் பதிவர் கொண்டாட்டம்

புத்தகத் திருவிழாவுக்கு  செல்லும் ஆர்வம் அணை மீறி   போய்விட்டதனால், இந்த வாரம் முழுதும், வழியில் உள்ள சிக்னல்களை எல்லாம் கண்டபடித் தாண்டிக் கொண்டிருந்தேன். ஆறாவது நாள் செல்லும்போது தேனாம்பேட்டை சிக்னலை, மஞ்சளுக்கு மாறும் கடைசி நொடியில் தாண்டினேன், கடமை தவறாத காவலர் ஒருவர் பாய முயன்று, குறுக்கே வந்த மாநகர பேருந்தினால் மனம் மாறினார். பத்தாவது நாளில், அதே சிக்னல், அதே காவலர், அவர் ஏற்கனவே வேறு ஒரு பெரிய வேட்டையில், பிசியாக இருந்ததால்என்னைக்  கவனிக்கவில்லை. பதினொன்றாவது நாளில், நூறடி சாலையில் செல்ல முடிவு செய்ததால், கோயம்பேடு சிக்னலில் சாகசத்தை செய்தேன், ஆனால், எனக்கு முன்னால் சென்ற வெளிமாநில லாரியில், வசூல் சாத்தியங்கள் அதிகமானதால்,  நான் தப்பினேன்.



நாள் 6 (04-Jan-10, திங்கள்)



பத்து நாள் விடுமுறைக்குப் பின், அழுதுகொண்டே அலுவலகம் சென்றேன். ஆணிகள் கொஞ்சம் அதிகமாய் சேர்ந்துவிட்டதால், நினைத்தபடி நினைத்தபடி நாலரை மணிக்கு கிளம்ப முடியவில்லை, சரியாக நாலே முக்காலுக்கு துளசி  டீச்சர் போன் பண்ணிட்டாங்க. உடனே கிளம்பி அஞ்சரையோட போய் சேர்ந்தேன். டீச்சரையும், வல்லி அம்மாவையும் சந்தித்தேன். ஜெட்லியும் வந்து சேர, ஒரு பத்து நிமிடம் பேசிவிட்டு கிளம்பினோம். சுற்றி வந்தபோது எழுத்தாளர் பிரபஞ்சனை பார்த்தோம், ஜெட்லி சென்று பேச விரும்பினார். கூட்டம் அதிகமாய் இருந்ததால், முடியவில்லை.


நானும் ஜெட்லியும் ( டீச்சர் பதிவில் சுட்டது )



டீச்சரும் வல்லியம்மாவும்



நாள் 10 (08-Jan-10, வெள்ளி) (அ) காலச்சுவடில் எட்டிப்பார்த்த எழுத்தாளர்
 

வண்டி கொஞ்சம் பிரச்னை செய்ததால், மூன்று நாட்கள் புத்தகக்  காட்சிக்கு லீவு போட்டுவிட்டேன். வெள்ளிக்கிழமை காலையிலேயே RomeoBoy போன் செய்துவிட்டார். நேரத்தோடு கிளம்பி விட்டாலும், ஆறு மணியோடு தான் போய் சேர முடிந்தது. ஏற்கனவே வந்துவிட்ட Romeo ரசிகைகள் புடைசூழ நின்றிருந்தார் (இப்போ சந்தோஷம் தானே :))). அவரை ஒருவழியாய் கூட்டிக்கொண்டு உயிர்மை பக்கம் சென்று பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருவர் வந்து கேட்டார் "நீங்க சங்கர் தானே?". இந்தக்  கேள்விக்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன் என்று நினைத்தபடி "ஆமாம், நீங்க" என்றேன், அவர் தான் 'எறும்பு' ராஜகோபால். எங்க ஊர்க்காரரான அவரிடம், அம்பாசமுத்திரத்துக் கதைகள் பேசிக்கொண்டிருந்தபோது, காலச்சுவடில் ஏதோ கூட்டம் தெரிந்தது.




என்னவென்று சென்று பார்த்தபோது, சிவக்குமாரும் சல்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, உயிர்மையிலிருந்து வந்தார் அந்த எழுத்தாளர், காலச்சுவடின் இலவச திட்டத்தைப் பற்றி, தன் தளத்தில் கேலி செய்திருந்தவர், இப்போது என்ன செய்யப்போகிறார் என பார்த்தபோது, அவரும் கூட்டத்தில் முண்டியடித்து எட்டிப் பார்க்க ஆரம்பித்தார், ஆனால் அவரால் உள்ளே நுழையவும் முடியவில்லை, யாரும் அவரை கண்டு கொள்வதாகவும் தெரியவில்லை, நான் எடுத்த புகைப்படத்தில் அவரின் முதுகுப்புறம் மட்டுமே சிக்கியது, யார் இந்த எழுத்தாளர் என சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு, அவர் எழுதிய 'முட்டைக் கோணம்' புத்தகம் பரிசளிக்கப்படும் (குலுக்கல்முறையில்) . இந்த சம்பவத்தினால், அண்ணன் சிவராமனின் சமீபத்திய பதிவின் பின்குறிப்பு, தவறோ என்று எண்ணத்தோன்றுகிறது.


Romeoவும், ராஜகோபாலும்




நாள் 11 (09-Jan-10, சனி) (அ) பதிவர் கொண்டாட்டம் 

காலையில் கேபிளாரின் அறிவிப்பைப் பார்த்தவுடனே கொண்டாடத் தொடங்கி விட்டேன். மூன்று மணிக்கே வீட்டைவிட்டுக்  கிளம்பிவிட்டாலும், மின்கட்டணம் செலுத்த கடைசி நாளில் முண்டியடிக்கும், மக்களின் மனோபாவம் புத்தகச் சந்தையிலும் வெளிப்பட்டதால் (சொன்னவர் நர்சிம்), நாலே முக்காலுக்கு தான் போய் சேர்ந்தேன். போதாக்குறைக்கு கலியுக கிருஷ்ணரின் (!!!) கீதா உபதேசம் வேறு, எதிரே இருக்கும் பச்சையப்பனில் நடந்ததால், ஏகப்பட்ட கூட்டம். பார்க்கிங்குக்கு உள்ளே இடம் கிடைக்காமல், இரண்டு தெரு தள்ளி வண்டியை விட்டுவிட்டு வரும்போது நர்சிம்மும் நான்கு தெரு தள்ளி காரை நிறுத்திவிட்டு வந்தார். நடைபாதை கடையில் அரைமணி நேரம் தேடிவிட்டு உள்ளே நுழைந்தேன்.


கேபிள், தண்டோரா, சர்புதீன், Romeo



ஏற்கனவே நிலா ரசிகனும், கென்னும் இன்னும் சில பதிவர்களும் இருந்தார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேர ஆரம்பித்தது. கேபிளும், தண்டோராவும் பதிப்பாளர் சார்புதீனுடன் வந்து சேர்ந்தார்கள். பதிவர்களுக்காக தன் தொடங்கி உள்ள பத்திரிகை "வெள்ளி நிலா" குறித்து சார்புதீன் விளக்கினார். கூட்டம் கூட தொடங்கியவுடன், ஆங்கங்கே சிறு சிறு குழுக்களாக இலக்கிய விவாதங்கள் ஆரம்பித்தன.


எந்த நிலைமையிலும் ஒரே பார்வை, அண்ணன் தண்டோரா 





கேபிள், குகன், ஜாக்கிசேகர்,


கடந்து சென்ற மூன்று இளைஞர்கள், "அவர் தான் கேபிள் சங்கர்" என்று கிசுகிசுத்தபடி சென்றனர்.


வாசகி ப்ரியா, மற்றும் ஒரு பதிவர் (ராஜா என்று நினைக்கிறேன்)



நடுவில் ஒரு அறிவிப்பு,  "அரங்கு எண் 265 இல் புத்தகம் வாங்கிய ஒருவர், பில் புத்தகத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார், தயவு செய்து திருப்பி தரவும்", இதற்கு தண்டோராவின் கமென்ட் "நான் இவ்வளவு புத்தகம் வாங்கி இருக்கேன் பாருன்னு சொல்வதற்காக எடுத்துட்டு போயிட்டனோ".

 நிலா ரசிகன் அல்லது அவிங்க ராசா (சரியா தெரியலைங்க), பலா பட்டறை சங்கர்   


கேமெராமென் ஆக மாறிய டைரக்டர்


பாதியில் வந்து பாதியிலே கிளம்பிய கார்க்கியும்,  ராஜகோபாலும்


பட்டறை போட்ட பதிவர்கள்,  திரும்பி பார்ப்பவர் புலவன் புலிகேசி




காவேரி கணேஷ், ஜெட்லி




வண்ணத்துப்பூச்சி சூர்யா


லேட்டாக வந்த அப்துல்லா


அதைவிட லேட்டாக வந்த D.R அசோக் 


கேபிளும், ஜெட்லியும்



ஜாக்கிசேகர், ஜெட்லி


வெளியில் வந்தபிறகும் நீண்ட பேச்சு,


கேலியும் கிண்டலுமாய் கழிந்த மூன்று மணி நேரங்களுக்குப்  பின் பிரிய மனதின்றி கிளம்பி வந்தேன்.

நன்றி
சங்கர்

படங்களை கிளிக்கி பார்க்கவும் 

Monday, January 4, 2010

புத்தகத்திருவிழா 2010 - நாள் 5 (மீண்டும், கொஞ்சம் நீண்ட பதிவு, மீண்டும் மன்னிக்கவும்)


நான்கு நாட்கள் தினமும் எழுபது கிமீ பைக் ஓட்டியதால், லேசாக முதுகு வலிப்பது போல் தோன்றியதால், இன்று ட்ரெயினில் செல்ல முடிவு செய்தேன். மூன்று மணிக்கு சந்திப்பதாய் சொல்லிவிட்டு இரண்டரைக்கு தான் வீட்டை விட்டே கிளம்பினேன். மூன்றரை  மணிக்கு சேத்துப்பட்டு ஸ்டேஷனில் இறங்கி வெளியில் வந்தால், சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன்  நாமும் கலந்து கொள்ளலாம் என்று ஆசை வந்தது, ஆனால் அவர்கள் பீல்டிங்  செய்யும் முறையை பார்த்தவுடன், நாளைக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்பது  நினைவுக்கு வர, பேசாமல் நடையைக் கட்டினேன்.



ஈகா  அருகே பஸ் பிடித்து பச்சையப்பன் கல்லூரியில் இறங்கினேன், இறங்குமிடத்தில் நடைபாதையில் கடைகள் போட்டிருந்தார்கள், கடந்த நாட்களில், வண்டியில் வந்து, நேரே உள்ளே சென்று விடுவதால், பார்க்க முடியவில்லை. இன்று புரட்டி புரட்டித் தேடியதில் பத்து ரூபாய்க்கு சில முத்துக்கள் கிடைத்தன, அவற்றில் ஒன்று, நேற்று நூற்றிநாற்பது ரூபாய்க்கு வாங்கிய பொய்த்தேவு . பிற முத்துக்கள் கீழே.


உள்ளே சென்ற போது ஏற்கனவே வந்து வாங்கி முடித்துவிட்ட நண்பர்கள், ஜெட்லி, சித்து மற்று நடராஜ், அரங்க நுழைவாயிலிலேயே காத்திருந்தனர், ஏற்கனவே அவர்கள் டிக்கெட் எடுத்திருந்ததால் நீண்ட வரிசையிலிருந்து தப்பினேன்.



உள்ளே போய், நேரே தமிழினிக்குச் சென்று சிவராமனிடம் மதினிமார்கள் கதை புத்தகத்தை வாங்கிக் கொண்டு சுற்ற தொடங்கினோம், உயிர்மையையும் காலச்சுவடையும் சுற்றிச்சுற்றி  வந்த போதும், பதிவர்கள் யாரும் கண்ணில்படவில்லை. நானும் மீண்டும் மீண்டும் மொக்கை வாங்குவதை பொருட்படுத்தாமல், கொஞ்சம் சந்தேகப்படும்படியான தோற்றத்தில் இருப்பவர்களிடமெல்லாம் சென்று "நீங்க ப்ளாக் எழுதுறீங்களா?" என்று கேட்டுக்கொண்டிருந்தேன். நண்பர்கள் அவர்கள் பங்குக்கு, "டேய் சங்கர், அவரு போன்ல ஏதோ 'ப்ளாக்'னு பேசுறாரு, இவரு போட்டோ எடுக்குராருன்னு" சொல்லி நொண்டி விட்டுக்கிட்டிருந்தங்க. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், யாரும் "ப்ளாக்'னா என்ன?" என்று கேட்கவில்லை. "படிப்பேன், எழுதுவதில்லை" என்று தான் பலரும் சொன்னார்கள்.


இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றி விட்டு நண்பர்கள் கிளம்ப தொடங்கினார்கள். நானும் வெளியே வந்து பேசிக்கொண்டே நடந்தேன், வழியில் அப்போதும் ஏதோ வேளை செய்து கொண்டிருந்தார்கள், அதை பார்த்துவிட்டு நண்பர் ஜெட்லி கேட்ட கேள்வி "அடுத்த சனிக்கிழமைக்கு முன்னாடியாவது முடிச்சிடுவாங்களா?". அங்கே நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் குறித்த ஜெட்லியின் ரிப்போர்ட் இதோ.

புத்தக  கண்காட்சியில் பதிவர் சங்கருக்கு மூக்குடைப்பு


நான் புத்தக கண்காட்சிக்கு  திங்கள்கிழமை போலாம் என்றிருந்தேன் ஆனால் நண்பர்கள் அழைத்தால், இன்று சென்று இருந்தேன்.முன்னமே நான்  சென்றதால் அப்படியே பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்  பின்பு சித்து,நட்டு, சங்கர் அனைவரும் வந்து சேர்ந்தனர்..அதற்கு பின்பும் நான் பராக்கு தான் பார்த்து கொண்டிருந்தேன்.காரணம், நாளைக்கு எப்படியும் வர போறோம் ஏன் கூட்ட நெரிசல்ல சிக்கிக்கிட்டு.

சங்கருக்கு ப்ளாக்-ஒ-மேனியா வந்துவிட்டது காரணம் யாரை 
பார்த்தாலும் அவருக்கு பதிவர் போல் தெரிவதாக கூறினார்.
எனக்கும் இது போல் முன்னாடி இருந்தது ஆனால் இப்போது   
இல்லை....யாராவது ஒருத்தர் சும்மா நின்னா போதும் உடனே
அவரிடம் சங்கர் போய் "நீங்க பதிவரா" என்று கேட்டு விட்டு தான்
மறுவேலை பார்க்கிறார். 

மேட்டர் எதுவும் கிடைக்காமல் பள்ளி நுழைவாயில் பைக் பார்க்கிங்
பக்கத்தில் செம டிராபிக்இல்   நின்று கொண்டு ஏதாவது பதிவர் சிக்குவாரா என்று பார்த்து கொண்டிருந்த வேளையில் தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது...மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள்....



சங்கர் அவர்களை நோக்கி வாயில் பாக்கை மென்றபடி ஒருவன் வந்தான். அந்த மர்ம மனிதன் போட்டிருந்த உடையே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அருகில் வந்த அந்த மர்மமனிதன் சங்கரிடம்

"எப்படிங்க உள்ளே போகணும்?" என்றான்.

"நேரா போங்க" என்று சங்கர் இடது புறம் கை காட்டினார்.

"இங்கே மாதிரி கூட்டமாதான் அங்கேயும் இருக்குமா?" என்றான்

"ஆமாங்க, இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, கொஞ்சம் கூட்டம் இருக்கும்" என எக்ஸ்ட்ரா தகவல் தந்தார் சங்கர்.

"ரொம்ப தூரமா?" என்று மறுபடியும் கேட்டான்.

"இல்ல பக்கத்தில் தான்,அந்த காரை தாண்டியவுடன் கவுண்டர் இருக்கும்" என்றார் சங்கர்.

"டிக்கெட் எடுக்கணுமா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அந்த மர்மமனிதன்....

"அஞ்சு ரூபாய்தான்...கடைசி கவுண்டர் போனா கூட்டம் இருக்காது" என்றார் சங்கர்

"உள்ளே புத்தகம் எல்லாம் எப்படி இருக்கும், அடுக்கி வச்சிருப்பாங்களா?" என்று ஒரு அற்புதமான கேள்வியைக் கேட்டான்,

அதற்கு சங்கர் சொன்னதை காதில் வாங்காமல், அந்த மர்மமனிதன் பூந்தமல்லி நெடுஞ்சாலையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்...இதை விட மூக்குடைப்பு வேறு வேண்டுமா...


பேக் டு சங்கர்

நண்பர்களுக்கு விடை தந்து அனுப்பி, பின் மீண்டும் உள்ளே நுழைந்தேன், சந்தியா பதிப்பக ஸ்டாலில் நுழைந்தபோது, இன்ப அதிர்ச்சியாக அங்கே சா.கந்தசாமி புத்தகங்கள் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் கை குலுக்கி, ஒரு புகைப்படம் எடுத்து, நன்றி சொல்லி விடை பெற்றேன். அதன் பிறகு பிரபாவுக்கான புத்தக வேட்டையில் ஈடுபட்டு மீண்டும் தோல்வி அடைந்து கிளம்பினேன். தமிழினிக்கு சென்று சிவராமனிடமும் விடைபெற்று வீட்டுக்கு கிளம்பினேன்.



வெளியே வந்து பேருந்துக்கு நின்ற போது, சா கந்தசாமியும் வந்தார், அதிர்ஷ்டவசமாக அவரும் நான் ஏறிய அதே கூட்டமில்லாத பேருந்தில் ஏற, நான் இறங்கும் நிறுத்தம் வரை அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு இறங்கினேன்.

இன்று வாங்கியவை

புதுமைப்பித்தன் கதைகள் (தொகுதி 3,4,5) - செண்பகா - Rs 125
வால்கள் - Books for children - Rs 14

நடைபாதைக் கடையில், ஒவ்வொன்றும் பத்தே ரூபாய்
ஜீவஜோதி - எம்வி வெங்கட்ராம்
எஸ்தர் - வண்ணநிலவன்
கற்பக விருட்சம் - கு அழகிரிசாமி

பின்குறிப்பு
பதிவர்கள் யாரும் சிக்காததால், இன்று சித்து மற்றும் சங்கர் படமே வெளியிடப்படுகிறது

நண்பர் ஜெட்லி வேண்டுகோளுக்கிணங்க (பாதுகாப்பு காரணங்களுக்காக) அவருடைய படம் வெளியிடப்படவில்லை.

Sunday, January 3, 2010

புத்தகத்திருவிழா 2010 - நாள் 4




"மேய போற மாட்டுக்கு கொம்புல வைக்கோல்"ன்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க, அதே மாதிரி புத்தக கண்காட்சிக்கு போகும்போதே நண்பன் நடராஜுக்கு கொடுக்குறதுக்காக, கிமு கிபி, மனிதனுக்குள் மிருகம் (ரெண்டும் மதன்), இலைகளை வியக்கும் மரம் (எஸ்ரா) என்று எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பினேன். முதலில் நுங்கம்பாக்கத்தில் பார்க்கலாம்ன்னு சொல்லி, அப்புறம் அது சேத்துபட்டுன்னு மாறி கடைசியில், பீச் ஸ்டேஷனில் போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தேன். புத்தகம் வாங்க போகிற ஆர்வத்தில், அடுத்து வந்த சிக்னலில், சிகப்பை கவனிக்காமல் சென்று, போக்குவரத்துக் காவலரிடம் பொன்மொழி ஒன்றை பெற்றுக்கொண்டு சென்றோம் (நல்ல வேளை துரத்திப் பிடிக்கல).




நூறடி அகலத்துல ரோடு போடுறாங்களோ இல்லியோ, நூறடிக்கு ஒரு சிக்னல் வச்சிருக்காங்க, ஒரு வழியா நாலு மணியோட வந்து சேர்ந்தோம். முந்தாநேத்து பதினஞ்சு, நேத்து பத்து, இன்னிக்கு அஞ்சு. பார்கிங் கட்டணத்தைத்தான் சொல்றேன், ஒண்ணும் புரியல. வண்டிய நிறுத்திட்டு நடந்து வந்தா, பக்கத்துல பிரபல எழுத்தாளர் வராருன்னு எல்லாரும் வழி விட்டு ஒதுங்குனாங்க. யாருன்னு பார்த்தா நம்ம நர்சிம். (அது எப்புடி எப்பவுமே ஸ்மார்டா இருக்கீங்க?). நேர போய் ஒரு ரெண்டு நிமிஷம் பேசினேன். அப்புறம் அவரோட பொன்னான நேரத்த வீணாக்க வேண்டாமேன்னு, கைகுலுக்கிட்டு உயிர்மை அரங்கில் சந்திக்கலாம்னு விடைபெற்றோம்.  இன்னிக்கு நல்லாவே கூட்டம் இருந்தது. ஆனாலும் ரெண்டு கவுண்டர்ல தான் டிக்கெட் குடுக்குறாங்க. மூணு நாளா வாங்க வேண்டிய புத்தக பட்டியல் தெளிவா இருந்ததால் குறிப்பிட்ட அரங்கங்களுக்கு மட்டும் போய் வந்ததால், இன்னிக்கு ஒவ்வொரு வரிசையா பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம்.



நடராஜ் முதல் அரங்கிலேயே  மதனின் வந்தார்கள் வென்றார்கள் (விகடன் - Rs 135) வாங்கினான். அப்புறம் இருந்த வரிசைகளில் ஒன்றும் தேறவில்லை. ஞாநியின் தீவிர வாசகனான நண்பனுக்கு அவர் அரங்கில் இல்லாதது ஏமாற்றமளித்தது. இன்னும் இரண்டு வரிசைகள் சுற்றி முடிக்க மணி ஐந்தானது, நேரே உயிர்மை அரங்கம் நோக்கி சென்றோம், வழியில் யாரோ அழைப்பது போல் தோன்ற, பார்த்தால், தண்டோரா, கேபிள், அத்திரி மற்றும் பொன்.வாசு. அவர்களையும் அழைத்துக்கொண்டு உயிர்மை செல்ல, அரங்க வாசலில் சாருவும், எஸ்ராவும் வாசகர்கள் சூழ நின்று கொண்டிருந்தார்கள், அரங்கினுள்ளே இன்னுமொரு வாசகச் சுழல் தெரிந்தது, அகப்பட்டிருப்பது யாரென்று பார்த்தால், மீண்டும் நர்சிம். எஸ்ராவையும் சாருவையும் எளிதாய் படமெடுக்க முடிந்த என்னால் நர்சிமை கடைசிவரை பிடிக்கவே முடியவில்லை.




இதற்கிடையே சாருவுக்கு தேநீர் வந்தது, அவரோ அன்புடன் அதை அத்திரிக்கு கொடுக்க, பாச மழையில் திக்குமுக்காடிப்போனார் அத்திரி. தேநீருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரும் எங்க ஊர்க்காரர் என்று தெரிந்தது (அவரு ஊர் அம்பாசமுத்திரத்துக்கு மேற்கே ஏழு கிமீ, எங்க ஊரு வடக்கே ஏழு கிமீ). கொஞ்சம் ஊர்க்கதை பேசிவிட்டு விஜயா பதிப்பகம் சென்றோம்.


அங்கே நடராஜ் உபபாண்டவம் (விஜயா - Rs 200) வாங்கினான். உயிர்மைக்கு திரும்பி வந்து எஸ்ராவிடம் ஒரு கையெழுத்து வாங்கிக்கொண்டு, இந்த வருட புத்தகப்பட்டியல் அவருடைய உபயம் என்பதால் ஒரு நன்றியும் சொல்லிவிட்டு விடை பெற்றோம்.


நண்பனுக்கு வேறு வேலைகள் இருந்ததால் அவன் கிளம்பிவிட, அப்போது வந்து சேர்ந்த என் தங்கைக்கும் தோழிக்கும், அவர்கள் வாங்க வேண்டிய அரங்கங்கள் இருக்குமிடத்தை சொல்லிவிட்டு நான் சுற்ற ஆரம்பித்தேன்.



இன்று வாங்கிய புத்தகங்கள்,

தலைவர் பரிந்துரை, 

காந்தியும் புலிக்கலைஞனும் 
- அசோகமித்திரன் - கவிதா - Rs 80
வாசவேச்வரம் - கிருத்திகா - காலச்சுவடு - Rs 140
பொய்த்தேவு - கநாசு - காலச்சுவடு - Rs 150

நேற்று பதிவிலிட்ட அலைபேசி எண்ணைப் பார்த்து அழைத்துப் பேசிய அண்ணன் பிரபாகரின் பரிந்துரை

கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா - விசா - Rs 77
மீண்டும் ஜீனோ - சுஜாதா - விசா - Rs 115

கண்ணில் பட்டதால்,

ரப்பர் - ஜெயமோகன் - கவிதா - Rs 75
சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள் - தமிழினி - Rs 85
குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் (தமிழில் திஜர) - காலச்சுவடு - Rs 125

நீண்டநேரம் தேடி, "மதினிமார் கதை", அன்னம் வெளியீடு என்பதை கண்டுபிடித்தேன். (வீடு வந்து சேர்ந்து, மின்னஞ்சலை திறந்து பார்த்தால்,  கார்த்திகை பாண்டியன் தகவல்களை அனுப்பிருந்தார், நன்றி அண்ணே) ஆனால், புத்தகம் இருப்பில் இல்லை என்றும், அடுத்த பதிப்பு வருமா என்று தெரியாது என்றும் பதில் வந்ததை, தமிழினியில் சந்தித்த சிவராமனிடம் சொல்ல, அவர், தனது வீட்டிலிருந்து நாளை கொண்டுவந்து தருவதாக கூறியுள்ளார். ஒரே ஒரு நிபந்தனை, படித்துவிட்டு புத்தகத்தைப் பற்றி பதிவிட வேண்டும் என்றார். நிச்சயம் செய்துவிடலாம். அவருடன் சுரேஷ்கண்ணனும் இருந்தார். அவர்கள் இருவருடனும் கொஞ்ச நேரம் சுற்றி விட்டு நாளை மீண்டும் வருவதாய் சொல்லி விடைபெற்றேன்.

இன்று கண்ணை உறுத்திய புத்தகங்கள்
என் சரிதம் - உவேசா - Rs 300
தமிழில் பிழையில்லாமல் எழுத ஒரு வழிகாட்டி - அரங்கு எண் 60-80ல்  எங்கோ பார்த்தேன், தேட வேண்டும்.

பின்குறிப்பு :

பிரபா கேட்ட, "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" எங்கு தேடியும் கிடைக்கவில்லை. யார் கண்ணிலாவது பட்டால் சொல்லவும்.

புதுமைப்பித்தன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு

காலச்சுவடு -  Rs 450
சந்தியா பதிப்பகம் - Rs 350
மணிவாசகர் - Rs 200 (2 தொகுதிகள்)
செண்பகா - Rs 200 (5 தொகுதிகள்)

யோசித்து முடிவு செய்யவும்

ஞாயிறும் செல்வேன், இணைந்து கொள்ள விரும்புவோர், தொடர்பு கொள்க, 9884088078

நன்றி
சங்கர்

Saturday, January 2, 2010

புத்தகத்திருவிழா 2010 - நாள் 2 & 3 (கொஞ்சம் நீளமான பதிவு, மன்னிக்கவும்)

நாள் 2 (31-12-2009)



"அஹோ கேளும் பிள்ளாய், இந்த பதிவை படிக்கும் மானுடரே", ஒண்ணுமில்லீங்க, புத்தகக்காட்சியில் வாங்கிட்டு வந்த விக்கிரமாதித்தன் கதையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன் அதுதான். நேத்து நம்ம ஜெட்லியும் வரேன்னு சொல்லியிருந்தாரு. அவரு ரெண்டுமணிக்கு சந்தையில இருப்பேன்னு சொன்னதால், நான் ரெண்டுமணிக்கு தான் வீட்ட விட்டே கிளம்பினேன் . முதல் நாள் மாதிரி ஊர்சுற்றி போகாம, அரைமணி நேரத்துல போய் சேர்ந்தேன். ஜெட்லி ஏற்கனவே அங்கு காத்திருந்தார். அவரது ரிப்போர்ட் இதோ (ஒரு துணைப்பதிவு)


புத்தக கண்காட்சியில் கொள்ளை கும்பல்....

நான் திங்கள்க்கிழமை போகலாம் என்று இருந்தேன் ஆனால் அந்த பக்கம் வேலை இருந்ததால் அப்படியே ஒரு எட்டு பார்த்துவிட்டு ரொம்ப நாளாக
வாங்க வேண்டும் என்று எண்ணிய புத்தகத்தை மட்டும் முதலில் வாங்கி விடுவோம் என்று 1.50 க்கு உள்ளே நுழைந்தேன்.











முதலிலே அதிர்ச்சி காத்து இருந்தது பைக் பார்க்கிங் டோக்கன் 15 ரூபாய் என்று கண்ணுக்கு கையுக்கும் அகப்படாத சீட்டில் தந்தார்கள். ரெண்டு மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்சென்று விட்டதால்,நுழைவுச்சீட்டு கவுன்டரில் நீண்ட வரிசை காத்திருந்தது. பத்து நிமிடம் கழித்து நான் வரிசையில் இருந்த கவுன்டரில் டிக்கெட் தர ஆள் வரவில்லை அதனால் எங்களை வேறு கவுன்டருக்கு செல்லுமாறு சொன்னார்கள். அடுத்த கவுன்டருக்குபோகும் போது இன்னும் முழுவதாக வேலை முடியாமல் கிழே கிடந்த கம்பி பெரியவர் காலில் பட்டு தோல் கீறி ரத்தம் எட்டிப்பார்த்தது....


நான் கொள்ளை கும்பல் என்று கூறியது பார்க்கிங் டோக்கனைபற்றி தான்..
நண்பர் சங்கர் சிறிது நேரம் கழித்து தான் கண்காட்சிக்கு வந்திருந்தார்
அப்போது நான் அவரிடம் 15 ரூபாய் பார்க்கிங் கட்டணம்அதிகம் என்றேன்.
அதற்கு அவர் 10 ரூபாய் தான் என்றார்.நாங்கள் இதை பற்றி கண்காட்சி அலுவலகத்தில் விசாரித்தோம் அவர்கள் அதை பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியாது என்றார்கள்.

பின்பு நான் வெளியே போகும் போது டோக்கன் கேட்ட பையனிடம்
எவ்ளோ என்று கேட்டேன் பத்து ரூபாய் என்றான் அப்போ ஏன்
வரும்போது 15 வாங்குனிங்க என்று கேட்டேன்...அவன் "நாங்களா..
பத்து ரூபாய் தான் வாங்குறோம்" என்றான் வாயில் பாக்குடன்.
பின்பு இன்னொருவனை கை நீட்டினான் அவன்"காண்ட்ராக்ட் ரேட்
அதிகம்" என்றான்.சண்டை போடாத குறையாக திரும்ப ஐந்து
ரூபாயை வாங்கிவந்தேன்.....

நாட்டுல என்ன நடக்குதுன்னு புரியல... குடிக்கறவன் கிட்ட இருந்தும்
எக்ஸ்ட்ரா துட்டு வாங்குறாங்க...புக் படிக்கிறவன்கிட்ட இருந்தும்
எக்ஸ்ட்ரா
துட்டு வாங்குறாங்க...

ஒரே சந்தோசம் நான் நீண்ட நாட்களாக வாங்க நினைத்த
புத்தகங்களை வாங்கிவிட்டேன்...அப்புறம் பொன்.வாசுதேவன்
மற்றும் தண்டோரா அண்ணனை சந்தித்தோம்...


பேக் டு சங்கர்

முதலில் பரிசல் ஸ்டாலுக்கு போனோம், அங்க நம்ம அகநாழிகை வாசு சார் இருந்தாரு, நம்ம தண்டோரா அண்ணனும் வந்து சேர்ந்தார். வாசு சார், பா ராஜாராமின் "கருவேல நிழல்" தொகுப்பை அன்பளித்தார். ஒரு சின்ன பதிவர் சந்திப்பை நடத்திவிட்டு ஒரு போட்டோ கூட எடுக்காம விடைபெற்றோம். ஜெட்லி நேரமாகுதுன்னு சொல்லி வீட்டுக்கு கிளம்பினார். நான் கடை கடையா சுத்த ஆரம்பிச்சேன்.



காலச்சுவடு ஸ்டாலுக்கு போனா, ஒரு அதிர்ச்சி, முதல் நாள் நான் 450 ரூபாய்க்கு வாங்கியிருந்த "கு.பெ.ஆ" 290 ரூபாய்க்கும், 575 ரூபாய்க்கு வாங்கின "சுரா சிறுகதைகள்" 450 ரூபாய்க்கும் போட்டிருந்தாங்க, ஒண்ணு வாங்கினா இன்னொன்னு அன்பளிப்பாம். கேட்டா பழைய பதிப்புன்னு சொன்னங்க. 'அடடா, வட போச்சே'ன்னு நினைச்சிக்கிட்டே, மீனாட்சி புத்தக நிலையதுக்குள்ள கால் எடுத்து வச்சேன், அப்பிடியே உள்ள போயிடுச்சு, பாத்தா அரையடி ஆழத்துக்கு பள்ளம்.

அப்புறம் ஒரு மூணு மணிநேரம் சுத்தி வந்து வாங்கின புத்தகங்கள்,

விக்ரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன் - பிரேமா பிரசுரம் - Rs 85
நடந்தது நடந்தபடியே - தேவன் - அல்லயன்ஸ் - Rs 55
பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன் - மணிவாசகர் - Rs 65 (காலச்சுவடு - Rs 225 )
புதுமைபித்தன் கட்டுரைகள் - மணிவாசகர் - Rs 40
வேள்வித்தீ - எம்வி வெங்கட்ராம் - மணிவாசகர் - Rs 20
நித்யகன்னி - எம்வி வெங்கட்ராம் - காலச்சுவடு - Rs 100
புலிநகக் கொன்றை - பிஎ கிருஷ்ணன் - காலச்சுவடு - Rs 145
உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன் - வம்சி - Rs 60
கிருஷ்ணப் பருந்து - ஆ மாதவன் - தமிழினி (யுனைடெட் ரைட்டர்ஸ்) - Rs 65
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - மீனாட்சி புத்தக நிலையம் - Rs 140
அம்மா வந்தாள் - தி.ஜா - ஐந்திணை - Rs 90
என் பெயர் ராம சேஷன் - ஆதவன் - உயிர்மை - Rs 120
துப்பறியும் சாம்பு - தேவன் - உயிர்மை - Rs 300
ஸ்ரீ ரங்கத்து கதைகள் - உயிர்மை - Rs 200
மறைவாய் சொன்ன கதைகள் - கி.ரா & கழனியூரன் - உயிர்மை - Rs 230
சுஜாதா நினைவுப் புனைவு 2009 - சுஜாதா நினைவு விஞ்ஞானகதை போட்டி தொகுப்பு - ஆழி - Rs 45

இதுக்கு மேல நடக்க முடியாதுங்கிற நிலைமை வந்ததுக்கபுறம் (ஆறரை மணிக்கு) வீட்டுக்கு கிளம்பினேன். வருபோது ஒழுங்கா வந்திட்டேனே, அது தப்பாசேன்னு நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையை இரண்டு தடவை வலம் வந்து வீடு வந்து சேர்ந்தேன்.

நாள் 3 (01-01-2010)





நண்பன் பிரவீனோட, நாலரை மணிக்கு, நங்கநல்லூரிலிருந்து கிளம்பினேன் ('ந'னாவுக்கு, 'நா'னாவுக்கு, 'ந'னா. கவித, கவித). நாலு கவுண்டர் இருந்தாலும் ஒண்ணுலதான் டிக்கெட் குடுத்தாங்க. அலைமோதின கூட்டத்தில் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். நண்பன் கணினி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வாங்கணும்னு சொன்னதால், அவனுக்கு வழி சொல்லி அனுப்பிவிட்டு நேரே உயிர்மை ஸ்டால் சென்றேன். அங்கே பதிவர்கள் ஜ்யோவ்ராம் சுந்தரையும், பைத்தியக்காரனையும் பார்த்தேன்.




அவர்கள் இருவரும் தீவிரமான இலக்கிய விவாதத்தில் ஈடுபடத் தொடங்கியதால் நடையைக் கட்டினேன். காணமல் போன நண்பனை தேடிச்சென்றபோது, மனுஷ்யபுத்திரன் ஓரிடத்தில் பார்த்தேன்.



நண்பனை பார்த்துவிட்டு திரும்பி வந்து உயிர்மை சந்தா கட்டிகொண்டிருந்த போது, சாரு வந்தார். ஜ்யோவ்ராம் சுந்தர் தான் வாங்கிய புத்தகங்களில் சாருவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார். நானும் ஒரு ஜெயமோகன் புத்தகம் வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கலாமென்று நினைத்தேன் அப்புறம் அவர் அதை கிழித்துப்போட்டு விட்டால் என்ன செய்வது என்று நினைத்து, வெறுமனே கை குலுக்கினேன். "இதற்கு 750 ரூபாய் கேட்க மாட்டீர்களே" என்று உறுதி படுத்திக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்தேன்.



நண்பன் வேண்டிய புத்தகம் வாங்கிக்கொண்டு வர கிளம்பினோம். நான் என்ன வாங்கினேன் என்று கேட்கிறீர்களா, (கேட்கவிட்டாலும் சொல்லுவேன்). தமிழினி, அன்னை புத்தகாலயம், அம்ருதா, விகடன் ஆகிய ஸ்டால்களில் விலைப்பட்டியல் வாங்கினேன். இன்னும் மூன்று முறையாவது செல்ல எண்ணியிருப்பதால், இன்று லீவ் விட்டுவிட்டேன்.



பின்குறிப்பு :

கோணங்கியின் "மதினிமார் கதை" புத்தகம் கிடைக்கவில்லை. எந்த பதிப்பக வெளியீடு என்று யாராவது சொன்னால் சந்தோஷம்.

அரங்குகளின் அகரவரிசை பட்டியல் கண்காட்சி அலுவலகத்தில் கிடைக்கிறது. வாங்கி பயன்பெறவும்.

இந்தவார குமுதத்தின் 'ஓ பக்கங்களை' கொடுத்தால் 30 % தள்ளுபடி தருகிறார் ஞாநி.

நான் சனிக்கிழமையும் செல்லலாம் என்றிருக்கிறேன், இணைந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.9884088078


நன்றி
சங்கர்